செவ்வாய், ஜனவரி 16, 2007

பிளாக் கேட்ஸ் சுட்டுடுவாங்க... சென்னைப் பயணம் - 1

பொங்கலுக்கு சொந்த ஊருக்கோ அல்லது சென்னைக்கோ செல்ல வேண்டும் என்ற எண்ணம் சனிக்கிழமை இரவு வரையில்லை. காலையில் அலுவலகம் (இலவச பிரவுசிங் செண்டர்) சென்று விட்டு பொழுது போகாமல், நண்பனைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிக்கொண்டிருக் கொண்டிருந்தேன்.

'நாளைக்கு என்ன பிளான்?', என்று கேட்டேன்.

'குரு பார்க்கலாம்ன்னு இருக்கேன். ஹிந்தி'

'நான் ஏற்கனவே ஹிந்தில பார்த்துட்டேன். ஒண்ணும் புரியலை. தமிழ்ல பார்க்குறேன்னா சொல்லு சென்னைக்கு வர்றேன்'

ஆனால் சென்னை செல்ல டிக்கெட்? இரவு பத்து மணிக்கு தனியார் பஸ் நிறுவனத்திற்கு எண்களைச் சுழற்றினேன். (இன்னும் சுழற்றினேன் தானா?)

'சார் பத்தரை மணிக்கு பஸ். ஒரே ஒரு டிக்கெட் இருக்கு. ரிட்டன் டிக்கெட்டோட.. இங்க ஒருத்தர் சேன்சல் பண்றதுக்காக வந்திருக்கார். ஒரு 20 நிமிசத்துல வந்தீங்கண்ணா நல்லா இருக்கும்'

உடனே பெட்டியைக் கட்டிக் கொண்டு ஆட்டோ பிடித்தேன். சாதாரணமாக ஒரு மணி நேரம் பிடிக்கும் இடத்திற்கு இருபது நிமிடத்தில் சென்று அந்த நபரை சந்தித்தேன்.

நண்பருடன், உற்சாகத்துடன், காத்திருந்தார். பணத்தைக் கொடுத்து டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டேன்.

காலை எட்டு மணிக்கு சென்னையை அடைந்தேன். நண்பன் வீட்டிற்குச் சென்று நாளிதழைப் புரட்டினோம். ரோகிணி, ஆல்ப்ர்ட், மற்றும் உட்லண்ட்ஸில் குரு தமிழ் பதிப்பு.

முதல் வேலையாக சரவண பவன் சாப்பாடு. சாம்பார் வடை கேட்டால், இன்னும் வடையை நெய்யில் மிதக்க விட்டுத் தான் கொடுக்கிறார்கள்.

முடித்து விட்டு நேராக, ரோகிணி தியேட்டருக்குச் சென்றோம். வாசல் முழுவதும் கூட்டம். ரோகிணி அனைத்து அரங்குகளிலும் 'அல்டிமேட் ஸ்டார்' விருட்சிகக் குமார் படம்.

'தோல் வார்' படத்திற்கு டிக்கெட் வாசலில் விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருந்தது. 'குரு' படம் ஓடுவதற்கான ஒரு அடையாளமும் இல்லை.

டிக்கெட் கவுண்டரில் சென்று, 'குரு-க்கு டிக்கெட் இருக்கா....', என்றேன்.

'இன்னும் பெட்டி வரலை'

மலேசியாவில தமிழ் பதிப்பு ஓடுது; சிங்கப்பூர்ல தமிழ் பதிப்பு ஓடுது; பெங்களூர்ல கூட இன்னைக்கு ரிலீஸ்ன்னு சொல்லுறாங்க; இங்கேயேப் படம் எடுத்து, பக்கத்துல பிரிண்ட்
போட்ட 'குரு' படத்தோட பெட்டி இங்க இன்னும் வரலையா?.

அஜீத்தின் திருவிளையாடல்.

அருகிலிருந்த அஜீத்தின் இளம் ரசிகர், 'இன்னா படம்?', என்று, அஜீத்திற்கே போட்டியா, என்ற கோபத்தில் கண்கள் கொப்பளிக்க வினவினார்.

'குரு'

'அப்படின்னா..... யாரோடது?'

நான் என்ன சொல்வது? அபிஷேக் படமென்றா? ஐஸ்வர்யா ராய் படமென்றா? அல்லது ரகுமானுடைய படமென்றா?

'மணிரத்னம்', என்றேன்.

'மணிரத்னம் யார்?' என்று கேட்டுவிடுவாரோ என்று அச்சத்துடன் பாவமாகப் பார்த்தேன்.

'ஓ' போட்டுவிட்டு வேலையைப் பார்க்க கிளம்பி விட்டார் அவர்.

அடுத்து நேராக உட்லாண்ட்ஸ்.

வாசலில் பத்து, இருபது பேர் அமர்ந்திருந்தார்கள். அதை பார்த்ததும், இங்கே கண்டிப்பாக 'குரு' ஓடும் என்ற நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது. டிக்கெட்டும் கிடைத்தது.

படம் எப்படியா? இங்கே படிக்கவும்.

மாலை ஸ்பென்சர் - லேண்ட்மார்க். பல புத்தகங்களைப் புரட்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. பிடித்த புத்தகங்களின் விலை 2000, 3000. விழி பிதுங்கியது.

அங்கிருந்து நடையைக் கட்டி விட்டு, காமராஜர் அரங்கம் சென்றோம். 6.30-க்கு துக்ளக் ஆண்டு விழா. சென்ற ஆண்டு இடப்பற்றாக்குறை காரணமாக வாசலில் வாசகர்கள் அமர்ந்து பார்த்தார்கள் என்று படித்ததன் விளைவாக, ஒரு 5.45க்கு அங்கு சென்று விட்டால், எப்படியாவது உள்ளே சென்று விடலாம் என்று மாஸ்டர் பிளான் தீட்டி அரங்கை
நோக்கிச் சென்றோம்.

அடா அடா... வாசல் படிக்கட்டுகளில் ஒரு நூறு, இருநூறு பேர் அரங்க வாயிலை (சாலையை) நோக்கியவாறு அமர்ந்திருந்தார்கள். கதவினருகில் இரு காவலர்கள்.

நண்பனிடம், 'நல்லவேளை சீக்கிரமே வந்துட்டோம். இன்னும் கேட் திறக்கலை போல. ஒரு 200 பேர் கூட இருக்க மாட்டாங்க. எப்படியும் உள்ள போய் மூணாவது சீட்ல உக்காந்துடனும்'.

'மக்கள் எவ்வளவு அமைதியாக, யாருடைய வருகைக்காகவோ அமர்ந்திருக்கிறார்கள். பரவாயில்லை ஒரு கட்டுக்கோப்போட உட்கார்ந்திருக்காங்க', என்று பேசிக்கொண்டிருந்தோம்.

6:00 மணி. சோ வந்தார்.



வாயிலில் அமர்ந்திருந்தவர்கள் கைத் தட்டி வரவேற்றார்கள். ஆனால் ஒரு சிலரைத் தவிர யாரும் அவரிடம் பேசி விட வேண்டும் என்று வாசல் படிக்கட்டுகளை விட்டு எழவில்லை.

'அழகு! யாருமே அவரை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு எவ்வளவு அமைதியா இருக்காங்க', என்று அங்கு அமர்ந்திருந்தவர்களைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

சோ, அங்கு அமர்ந்திருந்தவர்களிடம், 'எல்லாரும் மன்னிச்சுக்கணும். இந்த தடவையும் இடப்பற்றாக்குறை. உங்களுக்கு எல்லாம் உள்ள இடம் கொடுக்க முடியாத சூழ்நிலை. வெளில உட்கார்ந்து பார்க்குறதுக்கு புரஜக்டர் ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கோம். கோவிச்சுக்காம பாருங்க', என்றார்.

'என்னது? இடப்பற்றாக்குறையா? அப்ப பவ்யமா வாசலைப் பார்த்து உட்கார்ந்திருக்குறவங்க?'

அவங்க எல்லாம், 6.30 மணிக்கு வைக்கப்படும் புரொஜக்டர் திரைக்காக, 5.30 மணிக்கே 'பெவிக்கால்' போட்டு அமர்ந்திருக்கும் மக்கள்.

அப்போது தான் சற்று சுதாரிப்பு வந்து, அருகிலிருப்பவரிடம், 'அப்ப எப்ப கேட்டை ஓப்பன் பண்ணுணாங்க? உள்ள இருக்குறவங்க எப்ப உள்ள போனாங்க?', என்றேன்.

'அவங்க எல்லாம் மத்தியானம் ஒரு மணிக்கே வந்துட்டாங்க', என்றார்.

அடப்பாவிகளா? வேற வேலையே இல்லையா? எப்படி மத்தியானம் ஒரு மணியில இருந்து 6.30 மணி வரைக்கும் ஒரே இடத்துல?

'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்', படத்தில் மகனின் திருமணத்தில் சாப்பாட்டுச் செலவைக் குறைக்கும் எண்ணத்தில் கவுண்டமணி, பந்த் அன்று திருமணம் ஏற்பாடு செய்திருப்பார். ஆனால் அவரது எண்ணத்திற்கு மாறாக, பெரும் கூட்டமே சாப்பிடுமிடத்தில் இருக்கும். 'இன்னைக்கு பந்த்-ன்னு தான் முந்தா நேத்தே சத்திரத்துல வந்து படுத்துக்கிட்டோம்', என்று சொல்லும் மொட்டை தான் ஞாபத்திற்கு வந்தார்.

நம்மால முடியாதுப்பா என்று நாங்களும் கூட்டத்தோடு கூட்டமாம் ஐக்கியமானோம். படிக்கட்டுகளின் மீதேறி அரங்க நுழைவாயிலிருந்த 20 அடி உயரமான திண்டின் மீது, விழுந்து விடுவோமோ என்ற பயத்துடனே, அமர்ந்தோம்.

6.30-க்கு சோ பேச ஆரம்பித்தார். வாசகர்கள் கேள்வி கேட்டார்கள். பதிலளித்தார்.

ஒருவர், 'சென்னையில் பல இடங்களில் நடைபாதைகளில் சில்லரை வியாபாரிகள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்கிறார்கள். அவங்களால நிறைய பேருக்குப் பிரச்சினை. இதுக்கு நீங்க தான் ஏதாவது செய்யணும்'

'இவரை எல்லாம் யார் கேள்வி கேட்ட விட்டது', என்று சோ தனது இரு கைகளையும் பின்புறம் துளாவி சிலரை தேடினார். ஆனால் அவர் துளாவியதற்கு 1 கி.கிராம் காற்று மட்டுமே கிடைத்தது. அவரின் கோபம் புரிந்தோ என்னவோ அருகிலிருந்த உதவியாளர் பல அடிகள் தள்ளி நின்று கொண்டிருந்தார்.

ஆதலால் வழக்கம் போல, இரு கைகளையும் நம்பியார் போல் சேர்த்து, 'இக் கூம் இக் கூம்' என்று இருமியபடியே

'பிளாட்பாரங்கள்ல் ஏன் மக்கள் கடை போடுறாங்கன்னு பார்த்தோம்னா... இட நெருக்கடி..', என்று 'மக்கள் ஆட்சி' மம்மூட்டி போல் ஏதோ சமாளித்தார். (இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதியது).

8 மணியளவில், அத்வானி பேச ஆரம்பிக்கும் போது, 'நாம எஸ்கேப் ஆகிடுவோம் என்று நினைத்து வெளியேற நினைத்தால், படியெங்கும் கூட்டம்.

சரி திண்டின் மீது குதித்தேறி வெளியேறலாம் என்று திண்டின் மீது நடப்பதற்கு ஆயத்தமானேன்.

'சார். பிளாக் கேட்ஸ் இருக்காங்க சுட்டுடுவாங்க....', அருகிலிருந்த நபர் தடுத்தார்.

அதிர்ச்சியில் இரு அடி பின்னெடுத்து வைத்து, 'ஏன்?' என்றேன்.

'ஏதோ தீவிரவாதின்னு நினைச்சு சூட் பண்ணிடப்போறாங்க', என்றார்.

'என்னங்க அத்வானி உள்ள பேசிட்டு இருக்கார். நாமெல்லாம் வெளிய உட்கார்ந்திருக்கோம். நான் அரங்கத்தை விட்டே வெளிய போகலாம்னு போறேன். இதுக்கு ஏன் சுடுறாங்க'

'பிளாக் கேட்ஸ்க்கு அதெல்லாம் புரியாது. டவுட் வந்து சுட்டிடுவாங்க', என்று மீண்டும் எச்சரித்தார்.

'என் அறிவுச் சுடரே...மணியே', என்று அவரைப் பாராட்டி விட்டு அவர் கூறியபடியே, படி வழியாக மக்களை விலக்கி வெளியே வந்து சேர்ந்தோம்.

மறுநாள் காலை 9 மணிக்கு தான் எழுந்தோம்.

10.30 மணிக்கு சரவண பவனில் சாப்பிடலாம் என்று கிளம்பினோம். கோவிலுக்கு சென்று விட்டு சாப்பிட வந்திருக்கலாமோ என்று தோன்றிற்று.

சரி விடு. அடுத்த வருஷம் பார்த்துக்கலாம் என்று மனசைத் தேற்றிக் கொண்டு, ஆட்டோவில் ஏறி சரவண பவனை நோக்கிச் சென்றோம்.

'ஆட்டோ எவ்வளவு?'

'முப்பது'

'அங்க போறதுக்கே 20 தான். நூறு மீட்டர்க்கு முப்பதா? 15 தர்றோம்'

'சார் இன்னும் அஞ்சு ரூபா கொடுங்க சார்...'

'இதுவே சாஸ்தி தான் சார்'

சரவண பவன் வாசலில் வந்து ஆட்டோ நின்றது.

'இன்று விடுமுறை' என்ற அறிவிப்புப் பலகை தொங்கியது. அடப்பாவியா சக்கரைப் பொங்கல் சாப்பிடலாம்னு வந்தா.. என்று புகைந்து கொண்டிருக்கும் போதே ஆட்டோ ஓட்டுநர்,

'என்ன சார்... சாப்பிட வந்தீங்களா', என்று வெறுப்பேற்றினார்.

'பின்ன சரவண பவனுக்கு படம் பார்க்கவா வருவாங்க... ஏன் சார் நீங்க வேற', என்று நொந்து பணத்தை கொடுத்தேன்.

சரி ஆசைப்பட்டபடியே கோயில். வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்று விட்டு, வசந்த பவன்.

காலையில் சினிமா; மாலையில் புத்தகக் கண்காட்சி; இரவு இனிதே ஊர் திரும்புதல் என்று இன்பச் சுற்றுலாவிற்கு பிளான் போடுவது போல் பிளான்.

மணி 12.00. நேராக தேவி.

வாசலில் யாரும் பிளாக்கில் டிக்கெட் கிடைப்பதற்கான அடையாளமே இல்லை. ஆஹா மாட்டுனோம்டா என்று டிக்கெட் கவுண்டரை நெருங்கினோம்.

'போக்கிரி டிக்கெட் இருக்கா'

'இங்க இல்ல. முன்னாடி விப்பாங்க அங்க வாங்கிக்கங்க...'

'அடப்பாவியா? அந்த அளவுக்கு ஆகிடுச்சா நிலைமை?' என்று அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பாக, அத்தியேட்டர் ஊழியர் நேராக வந்து,

'என்ன டிக்கெட் வேணுமா?', என்றார்.

'ஆமா'

'ஒரு டிக்கெட் தான் இருக்கு'

'எனக்கு ரெண்டு வேணுமே'

அருகிலிருந்த இரண்டாம் முந்திரிக்கொட்டை புலிகேசி, எனக்கு கொடுங்க நான் வாங்கிக்கிறேன் என்று கையை நீட்டினார்.

தியேட்டர் ஊழியர், பழனி விபூதியை எடுத்து மு.கொ.புலிக்கேசிக்குக் கொடுப்பது போல், ஒரு பொட்டலத்தைத் திறந்து போக்கிரி டிக்கெட் எடுத்துக் கொடுத்தார். கஞ்சா விக்கிற மாதிரிலடா விக்கிறீங்க!

எத்தனை கோடி ரூபாய்க்கு டீல் முடிந்தது என்று தெரியவில்லை.

வெளியே சுட்டெரிக்கும் வெயில்; மாலை தான் புத்தகக் கண்காட்சி என்று திட்டம். என்ன செய்வது? டிக்கெட் வேண்டுமே என்று யோசித்து கொண்டிருந்த கணம் ஒரு டிப்-டாப்பான ஆசாமி,

'டிக்கெட் வேணுமா?', என்று கேட்டார்.

'எவ்வளவு' என்று கேட்டபடியே அவரது தோளின் மீது கையைப் போட்டு தள்ளிக் கொண்டு சென்றேன்.

'200'

'200-ல்லாம் ஆகாது. 000 ரூபாய் தர்றேன்'

'ப்ச்'

'அட ஆகுங்க. கொடுங்க'

'ஃப்ரண்ட் வர்றதா இருந்தது. வரலை. அதான் விக்கிறேன்'

'அப்ப என்ன? உங்களுக்கு இதுவே நல்ல லாபம் தானே'

'சரி ரூபாயைக் கொடுங்க'

'டிக்கெட்டைக் கொடுங்க. அது சரி பால்கனி தானே?'

'தேவில ஏதுங்க பால்கனி....', என்று செவிட்ல விட்டார்.

'சரி சரி விடு விடு..' (மனதிற்குள்)

'.... கார்னர் சீட் தான். இங்க கதவுக்குப் பக்கத்துல தான்', என்று கூறி அரங்கு வாயிலை நோக்கிச் சென்றார்.

'இல்ல இல்ல. நான் பார்த்துக்குறேன். சீட்டைக் கொடுங்க'

ஆனால் அவர் நான் சொல்வதைக் கேட்காமல், நேராக காவலாளியுடம் சென்று 'ரெண்டு', என்று கூறி சீட்டைக் கொடுத்தார்.

'என் ஃபிரண்ட் வெளில இருக்காருங்க. அவர் வரட்டும்', என்றேன்.

'அவருக்கு டிக்கெட்?', என்று கேட்டார்

'அதான் நீங்க கொடுப்பீங்கல்ல....'

'அப்ப நானு?'

'நீங்க தான் உங்க ஃபிரண்ட் வரலைன்னு சொன்னீங்க'

'ஆனா நான் பாக்கணுமே'

'அட நீங்க இன்னொரு நாள் பார்த்துக்கங்க'

'என்னங்க...', என்று இழுத்தார்.

'நீங்க என்ன லோக்கலா?'

'ஆமா'

'என்னோட பிரண்ட் ஊர்ல இருந்து வந்திருக்கார். அவருக்காகத் தான் இப்ப நான் உங்ககிட்ட இந்த டிக்கெட்டையே வாங்குறேன். நாம லோக்கல் தான எப்பனாலும் படம்
பார்த்துக்கலாம். டிக்கட்டை கொடுங்க'

'இல்ல... நான்...'

'அட சும்மா கொடுங்க.... ரெண்டு டிக்கெட் நல்ல லாபம். திரும்ப அதே ஃபிரண்டோட வந்து இன்னொரு நாள் பாருங்க', என்று கூறி டிக்கெட்டை இழுத்து, பணத்தைத் திணித்தேன்.

'கார்னர் சீட்', பார்ட்டியின் வருத்தம் புரிந்தது. பாவம் புள்ள, ரெண்டு நாளைக்கு முன்னாடியே ரிசர்வ் பண்ணி, கேர்ள் ஃப்ரண்ட்டுக்கு சேர்ந்து கார்னர் சீட்டை புக் செய்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த பார்ட்டி எஸ்கேப். இந்தப் பார்ட்டியும் வந்த வரை லாபம்ன்னு டிக்கெட்டை கொடுத்துட்டு போயிடுச்சு.

அவரை சரிகட்டி டிக்கெட் வாங்குன பாவத்துக்கு விஜய ராஜேந்தர். மன்னிக்கவும். விஜய் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் அடிச்சார். அடியாட்களை மட்டுமல்ல. என்னையும் சேர்த்து தான்.

ஃபிரண்ட்ஷிப் பற்றியும், காதல் பற்றியும் விஜய் ரகுநாதர் வசனம் பேசிய போது விசில் பறந்தது.ஆனால் இப்படமும் ஓடும்!

அடுத்து சாப்பிட்டு விட்டு... புத்தகக் கண்காட்சி.

அதை, சாப்பிட்டு விட்டு நாளைக்குத் தெம்பாக எழுதுகிறேன்.

ஸ்ருசல்

2 கருத்துகள் :

Boston Bala சொன்னது…

கையப் பிடிச்சு கூடவே வந்த திருப்தி :)
அருமையா சொல்றீங்க

ஸ்ருசல் சொன்னது…

மிக்க நன்றி பாலா.

தமிழ் வலைப்பதிவு வாழ்க்கை எப்படி இருக்கிறது? நான் இடையில் காணாமல் போய் விட்டேன். நிறைய மக்களை காணவில்லையே தமிழ்மணத்தில்.

ஸ்ருசல்