செவ்வாய், மே 13, 2008

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

1. ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

படம்: யாரடி நீ மோகினி
பாடியவர்: கார்த்திக், ரீட்டா
இசை: யுவன் சங்கர் ராஜா

செல்வராகவனின் தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு, அவரது உதவியாளரின் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கார்த்திக் நன்றாக நடித்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் என்றாலும் இப்பாடல் இந்த ஆல்பத்தில் தனித்து நிற்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'வெண்மேகம்'(ஹரிஹரண் பாடியது) பாடல் தான் எனக்கு விருப்பமான பாடலாக இருந்தது. அப்பாடல், 'ஏய் உன் கைய வச்சிக்கிட்டு சும்மா இருடா பாடலின்' பிரதி என்பதை மறுக்க முடியாது. அதே சமயத்தில் அப்பாடலின் சரணத்தில் (2:02-ல்) வரும் கீழ்கண்ட வரிகளின் ராகமும்

"தேவதை வாழ்வது
வீடல்ல
கோவில் கடவுளின்
கால்தடம்
பார்க்கிறேன்"


இரண்டாம் சரணத்தில் (2:36 - 2:59) வரும் இசையயும் என்னை கிறங்கடித்தது.

'ஒரு நாளுக்குள் எத்தனை', என்ற இந்த பாடலின் இனிமையை சிறிது தாமதாகவே உணர்ந்தேன். கார்த்திகும், ரீட்டாவும் மிக அழகாகப் பாடியுள்ளார்கள்.

ஒரு நாளுக்குள்
எத்தனை கனவு
உன் பார்வையில்
விழுகிற பொழுது
தொடுவானத்தை
தொடுகிற உணர்வு

என்று கார்த்திக்கும்,

ஒரு நிமிடத்தில்
எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில்
எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும்ம்ம்
வரும் நடுக்கம் - என்றாலும்
கால்கள் மிதக்கும்

என்று ரீட்டாவும் பல்லவியை மிக அழகாக ஆரம்பித்து வைக்கிறார்கள்.

சரணத்தில் வரும் ராகம் மிக அருமை (02:40)

"இது ஏதோ
புரியா உணர்வு
இதைப் புரிந்திட
முயன்றிடும் பொழுது
ஒரு பனிமலை
ஒரு எரிமலை
பெருங்காற்றும் சேர்ந்தே
ஒன்றாய் சிரிக்கும்"


அதே ராகத்தில், இரண்டாம் சரணத்தில் வரும் வரிகள் மிகவும் கவர்கின்றன.

"தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் கிடையாது
அது புரியலாம்
பின்பு தெரியலாம்
அது வரையில்
நடப்பது நடக்கும்"

பாடல் முழுவதும் யுவன் மெல்லிய பீட்டை அசத்தலாக தழுவவிட்டிருக்கிறார். அவருக்கே உரித்தான, அழகான பியானோ இசையையும் (01:44 - 01:59, 05:16 - 05:31) இடையில் கோர்த்து பாடலுக்கு இனிமையை கூட்டியிருக்கிறார். மொத்ததில் மிக அருமையான பாடல்.




2. நறும் பூக்கள் தேடும் திருத்தும்பியே

படம்: உற்சாகம்
பாடியவர்: ஹரிஹரண்
இசை: ரஞ்சித் பரோர்

ரகுமான் தரத்திற்கு இணையாக, ரஞ்சித் பரோர் இசையமைத்திருக்கிறார். இதனை எனக்கு அறிமுகம் கொடுத்த பாஸ்டன் பாலாஜிக்கு நன்றி. அவர் கொடுத்த தொடுப்பில் கேட்டதும், உடனே கலாட்டாவில் பாடல்களை வாங்கினேன். என்னவொரு அருமையான பாடல்கள்! அத்தனையும் தேன். இப்பாடல், 'கண்கள் உன் கண்களோ' பாடல், 'நண்பா நண்பா', என அத்தனையும் அற்புதமான பாடல்கள். ரஞ்சித் பரோருக்கு ஒரு பெரிய ஓ! ஆனால் இத்தனை அருமையான பாடல்கள் இப்படத்தில் மாட்டிக்கொண்டதே என்ற வருத்தம் உண்டு. இவை மட்டும், ஒரு சூர்யா படத்தில் இருந்திருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்! பாஸ்டன் பாலா நன்றாகக் குறிப்பிட்டிருந்தார்' பிரகாஷிற்கு செல்லும் சில படங்கள் இவருக்குச் செல்லட்டும் என்று. அதனை ஆமோதிக்கிறேன்.

ரஞ்சித் பரோர், ஏற்கனவே 'வி.ஐ.பி'-யில் நல்ல பாடல்களைக் கொடுத்திருந்தாலும் அதன் பிறகு தமிழில் இசையமைக்கவில்லை. ஏனோ தெரியவில்லை. ஆனால், உற்சாகத்தில், விஐபி-யை விட அற்புதமான பாடல்கள். இப்பாடல்களை தினமும் எத்தனை முறை கேட்கிறேன் என்ற கணக்கே இல்லை. இப்பாடலில் அனைத்துமே சிறப்பாக வந்துள்ளது. இசை, ஹரிஹரன் மற்றும் நந்தினியின் மயக்கும் குரல், வைரமுத்து அவர்களின் வரிகள். எத்தனை அற்புதமான வரிகள்!

'ஒரு பூவினோடு
ஒரு வாசம் தானே
கொடியோடு
யாம் கண்டனம்


வெவ்வேறு பாகம்
வெவ்வேறு வாசம்
நின்னோடு
யாம் கண்டனம்'


அற்புதமான வரிகள், ராகம்! மிகச் சிறப்பு.


பல்லவியில் முதல் சில வரிகள் முடிந்ததும், 'கொதித்தாடுதே குழைந்தாடுதே' (1:08) என்று நந்தினி மயக்கும் குரலால் பாடுவதும், அதன் பின்னணியில் அற்புதமான வயலினும் அற்புதம். அதே போல் 'உள்ளாவியை நீ தீண்டாவே காற்றாக வா தலைவா'(4:20) வரியில் வரும் ராகமும், வயலின் இசையும் தேன். நந்தினி இவர் குரலில் பாம்பே ஜெயஸ்ரீயின் தாக்கம் தெரிகிறது. மொத்தத்தில் 2007-ன் சிறந்த பாடல்.



3. அடடா அடடா அடடா

படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
பாடியவர்: சித்தார்த்
இசை: தேவி ஸ்ரீபிரசாத்

மற்றுமொரு தெலுங்கு ரீமேக் திரைப்படம். இப்படத்தின் பின்னணி இசையைப் பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தேன். இப்படத்தின் பாடல்களை படம் பார்ப்பதற்கு முன்பாக கேட்டுக் கொண்டிருந்தேன். நன்றாக இருந்தது - ஆனால் என்னை மிகவும் கவர்ந்ததுஅந்த தீம் இசை மட்டுமே.



ஆனால் திரைப்படம் நன்றாக இருந்த காரணத்தினால் படத்தின் பாடல்கள் மறுமுறை கேட்கும் போது பிடித்து விட்டது. அதிலிருந்து இப்பாடல் எனது விருப்பமான பாடலாகி விட்டது. நன்றாக பாடியிருக்கிறார். ஆனாலும், பாடலின் நடுவில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் அவர்கள், 'பா நி ச சா....' என்று பாடுவதும் பிடிக்கும். மொத்தத்தில் நல்ல பாடல்.



இப்படத்தில் இடம் பெற்ற 'உயிரே உயிரே பிரியாதே' என்ற பாடலும் மிக அருமையான பாடலும். அதிலும், அப்பாடலின் நடுவில் வரும் 'ஹான் ஹான் ஹான்' என்ற பெண்ணின் குரல் அற்புதம்.

4. யாரோ மனதிலே

படம்: தாம் தூம்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
இசை: ஹரீஷ் ஜெயராஜ்

மற்றுமொரு வழக்கமான ஹரீஷ் ஆல்பம். இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கின்றன. அதில் இப்பாடலும் ஒன்று. படத்தில் இரண்டு மூன்று பாடல்கள் வேறு படத்தின் பாடல்களை ஞாபகப்படுத்துகின்றன. அவற்றுள் முதல் பாடல்: 'அன்பே என் அன்பே' பாடல். இப்பாடல் 'ஓ மனமே ஓ மனமே' பாடலின் ராகத்தை ஒத்திருப்பதால், அப்பாடல் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டாவது 'ஆழியிலே முக்குழிக்கும்' பாடல் அப்படியே 'ரட்சகன்' படத்தில் இடம்பெற்ற 'கையில் மிதக்கும் காற்றாக' பாடலின் நகல் போன்று தோன்றுகிறது. 'புதிய மனதில்' என்ற பாடல் வித்தியாசமான முயற்சி. கவர்கிறது. 'சரி சரி சரி... அட அது சரி சரி'. :). ஆனால், இப்பாடலில் ஆரம்பத்திலும் (0:08), நடுவிலும் (1:30), இறுதியிலும் (4:18), 'டாட டடண்டன்' என்ற இசையோ எங்கேயோ கேட்டிருக்கிறேன். தலை காய்கிறது. இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

'யாரோ மனதிலே' என்ற இப்பாடலை தூக்கி நிறுத்தியிருப்பவர், பாம்பே ஜெயஸ்ரீ. பொதுவாக, பாம்பே ஜெயஸ்ரீ, ஹரீஸின் எல்லா படங்களிலும் பாடுவதால் எனக்கு அவர் பாடிய பாடல்கள் பெரிய ஈர்ப்பாக அமைந்ததில்லை. இப்பாடல் பெரிதாக கவரவில்லையென்றாலும், அவர் தான் பாடலுக்குப் பலம் என்று கூறலாம். ஓரளவிற்கு நல்ல இசை கூட. இப்பாடலில் 2:41-ல் வரும் 'தத்தத்தா தார தத்தத்தா' என்று வரிகளில் வரும் ராகத்தை எங்கேயோ கேட்டிருக்கிறேன். :-(




5. உன்னை கேள் உன்னை கேள்

படம்: இனிமே நாங்க தான்
பாடியவர்: இளையராஜா
இசை: இளையராஜா

தமிழில் வந்த கம்ப்யூட்டர் அனிமேட்டட் திரைப்படம். யூ டியூப்பில் ஒரு பாடலை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. பரவாயில்லையே என்று அதன் தொடர்பான வீடியோக்களைப் பார்க்கும் போது தான் இசை இளையராஜா என்று தெரிந்து கொண்டேன். அப்போது இப்பாடலைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. அற்புதமான பாடல். இசையிலும், முக்கியமாக மெல்லிசையிலும், இளையராஜாவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்திருக்கிறார். அதற்கு இப்பாடலும் விதிவிலக்கல்ல. இசையினை விட என்னவொரு அற்புதமான குரல், இளையராஜாவினுடையது.

உன்னை கேள்
உன்னை கேள்
என்ன செய்தாய்
எண்ணிப் பார்
எண்ணிப் பார்
என்ன சொல்வாய்?


ஊருக்காக நீ ஓடி
உழைத்தாயோ - இல்லை
உன்னை மட்டுமே பார்த்துக்
கிடந்தாயோ

நன்மைகளா
தீமைகளா
செய்ததென்ன
உண்மை சொல்வாய்

நல்ல ராகம். நல்ல குரல். பல்லவி(1:12 - 1:31) மற்றும் முதல் சரணம் முடிந்ததும் வரும் இசை அற்புதம்.

'மனத்தை அழுக்காக்கி
சிரிக்கிறாய்
முகத்தை முகமூடியாக்கி
மறைக்கிறாய்'


என்னவொரு அற்புதமான வரிகள்! அழகான பாடல். YouTube வீடியோ இதோ: (1:50 முதல் பார்க்கவும்)



இப்படத்தின் பாடல்கள் கலாட்டா.காமில் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன.

கருத்துகள் இல்லை :