திங்கள், மே 05, 2008

வீணையின் நாயகன்

சென்ற வாரம் அருகில் உள்ள திரையரங்கில் 'சந்தோஷ் சுப்ரமணியன்' படத்திற்கு சென்றேன். நல்ல திரைப்படம் - நன்றாகவே ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஜெனிலியா பாத்திரம் தான் சிறிது ஓவர் ஆக்டிங் போல் தோன்றியது (சந்தோஷ்.... ஏன் சந்தோஷ்......... சாரி சந்தோஷ்). மற்றபடி ஓர் நல்ல படம்.

படத்திற்கு செல்வதற்கு முன்பாகவே பாடல்களை கேட்டிருக்கிறேன். இரண்டு பாடல்கள் பிடித்திருந்தது. முக்கியமாக, ஆஹாஹாஹா..... என்று ஒரு நிமிடத்திற்கு வரும் அந்த தீம் மியூசிக். 'உனக்கும் எனக்கும்' படத்திலேயே 'உன்பார்வையில் பைத்தியம் ஆனேன்' போன்ற சிறந்த பாடல்களை கொடுத்து அசத்தியவர் தேவி ஸ்ரீபிரசாத். தேவி ஸ்ரீபிரசாத்தின் பாடல்களை விட அவரது பின்னணி இசை எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக அவர் செண்டிமெண்ட், சோகக் காட்சிகளுக்கு இசையமைக்கும் விதம். செண்டிமெண்ட் காட்சிகளுக்கும், சோகக் காட்சிகளுக்கும் வயலின், வீணை இசைக்கருவிகளை விட மிகச் சிறந்த வாத்தியம் இல்லை என்பது எனது கருத்து.

அவற்றை மிகச் சிறப்பாக உபயோகப்படுத்துவதில் தேர்ந்தவர் பின்னணி இசையின் ராஜா, இளையராஜா அவர்கள்.

அதற்குப் பிறகு, வீணையைக் கொண்டு பின்னணி இசையை கோர்ப்பவர்கள் யாருமே இல்லை என்று உறுதியாக கூறலாம். அப்படியேயாயினும், ஒன்றிரண்டு படங்களுக்கு மட்டுமே சில இசையமைப்பாளர்கள் உபயோகப்படுத்தியிருப்பார்கள். ஆனால் தேவி ஸ்ரீபிரசாத் அவர்கள் (நான் பார்த்த) அனைத்துப் படங்களிலும் வீணை வாத்தியத்திற்கு முக்கிய இடம் கொடுத்து அதிஅற்புதமான இசையைக் கொடுத்திருக்கிறார். அதற்கு இப்படமும் விதிவிலக்கல்ல,

ஏ.ஆர்.ரகுமான் பாடல்களிலேயே அதிகமாக வீணை இசை இடம் பெறுவதில்லை என்ற வருத்தம் உண்டு. அதிலும் பின்னணியில் சுத்தம். ஆனால் தேவி ஸ்ரீபிரசாத் அதற்கு நேர் மாறானவர். இப்படத்திலும் சில முக்கியமான காட்சிகளில் அத்தகைய இசையினைக் கொடுத்து என்னை மிகவும் கவர்ந்திழுந்திருக்கிறார். அவற்றைப் பற்றியும், அவரது இன்ன இரண்டு படங்களில் எனக்குப் பிடித்த அத்தகைய காட்சிகளின் தொகுப்பு இது. தேவி ஸ்ரீபிரசாத்திற்கு வீணையின் மீது ஏன் அத்தனை ஓர் காதல் என்று தெரியவில்லை. ஆனால் அக்காதல் ஒர் அற்புதமான ஒரு காதல் என்று அவரது பின்னணி இசையைக் கேட்கும் போது தெரிகிறது. அது போன்ற காட்சிகளில் வீணையைத் தவிர வேறு வாத்தியத்திற்கு அந்தக் காட்சியின் சோகத்தையும், வலிமையையும் உணர்த்தும் திறமை இல்லை என்று கூறுவேன்.

முதலாவதாக சந்தோஷ் சுப்ரமணியம்
----------------------------------

தன்னிடம் சொல்லாமல், தொழில் தொடங்குவதற்காக, தனது மகன் வங்கியில் கடன் வாங்குகிறான் என்பதை உணரும் ரவியின் தந்தை, பிரகாஷ் ராஜ் தனது மனைவி கீதாவிடம், அவனுக்கு அந்தப் பெண் மட்டும் பிரச்சனை இல்லை, வேறு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று கூறுகிறார். அப்போது அதன் அர்த்தத்தை உணரும் கீதா அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதற்கு சில தினங்களுக்கு முன்பாக, தனது வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று ரவி, தனது தாய் கீதாவை திட்டிய பிறகு ரவியுடன் பேசுவதை தவிர்க்கும் கீதாவிற்கு இதனைக் கேட்கும் போது அதிர்ச்சியும், கவலையும் ஏற்படுகிறது.

மறுநாள் காலையில் தாயுடன் பேசுவதற்காக ரவி தயங்கி நிற்பதையும், பின்னர் பேசாமல் சென்றதை கவலையுடன் பார்க்கும் கீதாவின் உணர்வினையும் மெருகேற்றும் விதமாக பின்னணியில் வரும் இசை அற்புதம். (05:10)




அதே போல், ஜெனிலியா, ரவி வீட்டிற்கு வரும் போது ரவி ஜெனிலியாவிற்கு அனைவரையும் அறிமுகம் செய்கிறார். அப்போது கீதாவைப் பார்த்து ஜெனிலியா, 'ஆன்ட்டி, உங்க குரல் அழகா இருக்கு ஆன்ட்டி', என்று கூறும் போது அதே இசை. அற்புதம். (00:42)




இரண்டாவதாக உனக்கும் எனக்கும்
--------------------------------

இப்படத்தின் 'உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்', பாடல் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த பாடல்களில் சிறந்த பாடல் என்று கூறுவேன். அப்பாடல் எப்படி பின்னணி இசையாக, அருமையாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இங்கே காணலாம்.

காதலியிடம், தான் லண்டனுக்கு திரும்ப செல்வதாக சோகத்துடன் கூறும் போது வரும் இசை:



00:20-ல் 'பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதலி செய்தேன்', என்ற வரிகள், வீணை இசையாக உருமாறியிருக்கிறது)

பாக்யராஜூம், பிரபுவும் ரவியினைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கும் போது, வெட்டி விடுவேன் என்று பிரபுவை அரிவாளை ஓங்குகிறார். எங்கே வெட்டு என்று பாக்யராஜ் கூறும் போது, 'டாட்', என்று கூப்பிடும் ரவியினைத் திரும்பிப் பார்க்கிறார். அங்கே அழுக்கு பனியன், பாண்டில், உடல் முழுவதும் புழுதியுடனும், காயங்களுடனும் நிற்கும் ரவியினைப் பார்த்து பாக்யராஜ் கண்ணீர் வடிக்கும் காட்சிக்கு எவ்வளவு அற்புதமாக இந்த வீணை மெருகேற்றுகிறது என்று பாருங்கள்.(09:48)




அதே இசை, திரிஷா பேசுவதை கேட்கும் மகிழ்ச்சியுடன் பாக்கியராஜ் கேட்கும் போது: (07:44)



ஆர்யா - தெலுங்கு படம்
------------------------

அல்லு அர்ஜீன் நடித்த 'ஆர்யா' என்ற தெலுங்குப் படத்தின் இறுதிக் கட்ட காட்சியில் காதலிக்கு திருமணம். நாயகன் காதலியின் திருமணத்தில் அவரை சந்தித்து, அவரை இன்னும் தான் காதலிப்பதாக கூறி காதலியை அழ வைக்கிறார். ஆனால் தான் நடித்ததாக கூறி, காதலிக்கு திருமண வாழ்த்துக்கள் என்று ஒரு ரோஜாப் பூவினைக் கொடுக்கிறார். சில நொடிகளே வந்தாலும், அந்த வீணை இசை என்னவொரு அற்புதமான இசை! (02:00)



தேவி ஸ்ரீபிரசாத் இது போல இன்னும் நூற்றுக்கணக்கான படங்களில் மனம்
மயக்கும் இசையைக் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டி இத்துடன் இவ்விடுகையை முடிக்கிறேன்.

2 கருத்துகள் :

தயா சொன்னது…

நான் ரொம்ப ரசித்த பதிவு இது! உண்மையில் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் உணர்வுகள் அழகாக தெரியும்! நீங்க சொன்னது போல வீணை வயலின் போன்ற வாத்தியங்களுக்கு அவரது இசையில் முக்கியத்துவம் அதிகம்! உங்களைப் போல நானும் அவரை வாழ்த்துகிறேன்! நிறைய படங்கள் இன்னும் பண்ணவேண்டும்! மீண்டும் வாழ்த்துக்கள் உங்களுக்கும்! அழகான பதிவு ஒன்று

ஸ்ருசல் சொன்னது…

நன்றி தியா...