திங்கள், மே 21, 2007

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

1. பிரே ஃபார் மீ பிரதர் (Pray for me Brother)

இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், பிளாசே, மற்றும் குழுவினர்.

இப்பாடலின் காரணத்தைப் பற்றி நான் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இப்பாடல் இந்தியாவில் வெளிவருவதற்கு முன்பாக பல இணையத்தளங்களில் விற்பனைக்காக இருந்தது. நானும் வாங்கி ஒலிக்க முயற்சி செய்த போது, விண்டோஸ் மீடியா பிளேயர் பழைய பதிப்பினை நான் உபயோகித்த காரணத்தினால் DRM சோதனை செய்ய இயலாமல் தயங்கி நின்றது. அலுவலகத்தில் மீடியா பிளேயரினை புதுப்பிக்க இயலாமல் கஷ்டப்பட்ட போது, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் சென்ற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு தான் பாடலைக் கேட்க முடிந்தது. இது மிகச் சிறந்த பாடல் இல்லாவிடிலும், நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பிறகு வந்த சிவாஜி பாடலை விட சிறந்த பாடலிது.

2:35-ல் யாஹி யோகோ யாஹி யோகோ என்ற இடங்கள் இனிமையாக ஒலிக்கின்றது. 3:30 குழுவினரின் ஓசை அற்புதம்.

2. மனசு மருகுதே

திரைப்படம்: பள்ளிக்கூடம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: சுபிக்ஷா, டாக்டர் நாராயணன்

ஆரம்ப நாட்களிலிருந்தே பரத்வாஜ் பாடல்கள் மீது எனக்கு ஓர் இனம்புரியாத ஈர்ப்பு உண்டு. உணர்வுபூர்வமாக பாடல்களுக்கு இசையமைப்பவர்களில் பரத்வாஜிற்கு எப்போதும் இடம் உண்டு. பல பாடல்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். காதல் மன்னனில் இடம் பெற்ற 'வானும் மண்ணும் பாடல்', பூவேலியில் இடம் பெற்ற 'இதற்கு பேர் தான் காதலா', வசூல்ராஜாவில் இடம் பெற்ற 'காடு திறந்து கிடக்கின்றது' ஆட்டோகிராபில் இடம் பெற்ற 'நினைவுகள் நெஞ்சினில்' உள்ளிட்ட பல பாடல்களைக் குறிப்பிடலாம்.அவ்வகையில் 'பள்ளிக்கூடம்' படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நாராயணன், ரகுமான் குழுவில் சில ஆண்டுகளாக பாடி வருகிறார். தனியாக வித்யாசாகருக்கு சில பாடல்களையும் பாடியுள்ளார். 'பொய்'-ல் மூச்சு விடாமல் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்று நினைக்கிறேன். ஒரிரு முறை கேட்ட ஞாபகம். பாடல் நிச்சயமாக வெற்றி பெற்று இவருக்குப் புகழ் தேடி தரும் என்பது எனது எண்ணம்.

எதுக்கு தெரியலை
விவரம் புரியலை
....
மனசு மருகுதே

எதுக்கு தெரியுமா?
எனக்கு தெரியலை...

அற்புதமான ராகம்.

3. காற்றின் மொழி

திரைப்படம்: மொழி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா

மொழி சமீபத்தில் வந்த சிறந்த படங்களில் ஒன்று (விஜய் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால் :)).

'காற்றின் மொழி' என்று ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சுஜாதாவின் மென்மையான் குரல் பாடலுக்கு வளம் சேர்க்கிறது. வித்யாசாகரின் இசை பெரும்பாலும் சாதாரண இசைக்கருவிகளைச் சார்ந்திருக்கும். அதற்கு இப்பாடல் ஓர் சிறந்த உதாரணம். ரகுமான் கூட சில நாட்களுக்கு முன்பாக, 'கணினியின் உதவியில்லாமல் பாடல்களுக்கு இசையமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறேன்', என்று கூறியிருந்தார். அவ்வகையில், வித்யாசாகர் எப்போதோ தேர்ந்து விட்டார் எனக் கூறலாம். அவருடைய சமீப கால பாடல்கள் அனைத்துமே இது போல மிக எளிமையாக தான் இருக்கின்றன. உ.ம். தம்பி, ஜி.

4. யாரோ யாருக்குள் இங்கு யாரோ

திரைப்படம்: சென்னை - 28
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி. சரண்

இப்பாடல் ஒரு வகையில், இளையராஜா, கார்த்திக் ராஜா இசையில் பாடிய 'யாரோ யார் யாரோ' பாடலின் கருத்தை சிறிது ஒத்திருக்கிறது.ஆரம்பத்தில் வரும் வயலின் இசை அழகு.

5. காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்

திரைப்படம்: பச்சைக்கிளி முத்துசரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: நரேஷ் அய்யர்

இவ்வாண்டின் ஆரம்பத்தில் சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா (சரியாக ஞாபகம் இல்லை) விளையாடிய போட்டியைக் காண சேப்பாக்கம் சென்றிருந்தேன். அப்போது ஒவ்வொரு ஓவர் முடிவிலும் இப்படத்தின் டிரைலர் காட்டப்பட்டது. அதிலிடம் பெற்ற இசையால் கவரப்பட்டு இப்பாடல் வந்ததும் ஆவலுடன் இசைத்தட்டு வாங்கினேன். எல்லா பாடல்களையும் ஒரு முறை ஒலிக்கவிட்டு, பிடிக்காமல் வீட்டிலேயே வைத்துவிட்டேன். ஆனால் ஐ.பாடில் மட்டும் ரிப் செய்து வைத்திருந்தேன். ஒரு நாள், மற்ற பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த போது, இப்பாடலும் ஒலித்தது.

நானும், சரி தான், 'உன்னாலே உன்னாலே' படம் என்று நினைத்து பின்னர் ஒலிக்கவிடலாம் என்று நினைத்திருந்தேன். மறு நாள் மீண்டும் இப்பாடலை ஒலிக்க விட எனது ஐ-பாடில் முயற்சித்த போது, 'உன்னாலே உன்னாலே' ஆல்பத்தில் இப்பாடல் எங்கும் இல்லை. 'பச்சைக்கிளி' கண்ணில் பட்டது. ஆனால் அதில் இருக்காது என்று நம்பி முயற்சி செய்யவே இல்லை. சோர்ந்து போய்விட்டேன். மீண்டும் ஒரு நாள் அதிசயம் நிகழ்ந்தது. அதே போல் மீண்டும் ராண்டமாக பாடல்களை கேட்டுக்கொண்டிருந்த போது இப்பாடல் ஒலித்தது. குறித்து வைக்க படத்தின் பேரைப் பார்த்த போது ஆச்சர்யம். என்னவொரு அற்புதமான பாடலை இத்தனை நாட்களை கையில் வைத்திருந்தும் கேட்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தமாக இருந்தது. சரி பாடலுக்கு வருகிறேன்.

நரேஷ் அய்யரின் குரலா இது? அற்புதம். ரகுமானுக்குப் பல பாடல்கள் பாடியிருந்தாலும், ஹாரீஸின் இசையில் இவரது குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.

1:26 -ல் வரும்

எதிர்காலம் என்னை வந்து முட்டுமோ..
கொஞ்சம் மிச்சம் உள்ள அச்சம் விடுமோ
அரியாத ஒஉது ஆசான், அகம் இனி வீசும்
அதில் தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்

ஏ மல்லிச்சரமே .... உன் கண்கள் இன்று...

அற்புதம்! அற்புதம்.

6.முதல் நாள் இன்று எதுவோ ஒன்று

உன்னாலே உன்னாலே..
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கே.கே. மஹாலக்ஷ்மி

நீண்ட நாட்களாக உன்னாலே உன்னாலே பாடல்களை கேட்டு வருகிறேன். ஆரம்பத்தில் 'ஜூன் போனால்' (Blue Rise பாடலின் அச்சு அசலான நகல்) கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படத்தில் இப்பாடலும், ஹரிணி பாடிய 'உன்னாலே உன்னாலே' பாடலும் சிறந்த பாடல்கள். வழக்கம்
போல், ஹரிணியின் குரல் அற்புதம். அதிலும் 3:05-ல்

'சரியென்று தெரியாமல்,
தவறென்று புரியாமல்
எதில் வந்து சேர்ந்தேன் நான்...'

இனிமை!

'முதல் நாள்' பாடலில்,

2:57 'உதட்டாலே காதல் எனும் சொல்லை
உரைத்தாலே கூட வரும் தொல்லை'

இடத்தில் வரும் ராகம் நன்று. கே.கே. வழக்கம் போல் சிறப்பாக பாடியிருக்கிறார். மஹாலக்ஷ்மி பரவாயில்லை. நிச்சயம் பாம்பே ஜெயஸ்ரீயை விட நன்று.

7. ஒரே கனா

திரைப்படம்: குரு
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், சித்ரா, மெட்ராஸ் கரோலே குழுவினர்.

இதே பாடலை சென்ற பதிவிலும் தெரிவித்திருந்தேன். இன்னும் இப்பாடல் மீதான மோகம் குறையவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போது, புத்துணர்ச்சி ஊட்டுகிறது இப்பாடல். சோர்ந்திருக்கும் தருணங்களில் புத்துயிர் ஊட்டும் பாடல்களில் இப்பாடலுக்கு, என்னுடைய பிளே லிஸ்டில் இனி எப்போதும் இடமுண்டு. இப்பாடல்களைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன். இந்தி பதிவினை விட, தமிழ் பதிவு பிடிக்க காரணம், தமிழில் பாடலில் அர்த்தம் புரிய முடிவதால் தான்.

சென்ற பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.

எனக்கு 'தேரே பினா' பாடல் பிடித்திருந்தாலும், 'ஜாகே ஹே' பாடலை நான் மிகவும் விரும்பிக் கேட்பதற்குக் காரணம், இப்பாடலில் இழைந்தோடும் சோகமும், பாடலின் நடுவில் வரும் இசையும், குழுவினரின் குரலும் தான். பாடலின் ஆரம்பத்தில் சித்ராவின் குரலையொட்டி வரும் குழுவினரின் ராகமும், வயலின் இசையும், மீண்டும் 1:50-ல் ஒரு முழக்கத்துடன் குழுவினரின் ராகம் தொடர்வது இனிமை. ரகுமான், மிக மெதுவாக, சித்ராவினைத் தொடர்ந்து பாடிவிட்டு, 3:21-ல் ரகுமான் சுருதியை உயர்த்தி பாடுவதும், 4:28-ல் அதனைத் தொடர்ந்து வரும் குழுவினரின் முழக்கமும் அற்புதம்.

இப்பாடல் தமிழில் இன்னும் அற்புதம். மெட்ராஸ் கரோலே குழுவினர் மிக மிக அருமையாக பாடியிருக்கிறார்கள். சொல்வதற்கு வார்த்தையில்லை.

ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
கனா மெய்யாகும் நாள் வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்

வானே
என் மேலே
சாய்ந்தாலுமே
நான்
மீண்டு காட்டுவேன்

நீ என்னைக்
கொஞ்சம்
கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்'

அற்புதமான ராகம், உயிரைக் கொல்லும் வரிகள், உயிரை உருக்கும் குரல்கள்!

குறிப்பு: அடுத்த வாரம் முதற்கொண்டு ரகுமான், வட அமெரிக்காவில் சில மாகாணங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். முடிந்தால் சென்று கண்டுகளிக்கவும்.