திங்கள், ஜூலை 31, 2006

நீ பாதி நான் பாதி

அலுவலகத்தில் தமிழ் பாடல்களை வழங்கும் இணையத்தளங்கள் முழுவதுமாகத் தடை செய்யப்பட்டுள்ளதால் புதிய படங்களின் பாடல்களை கேட்க முடியாமல் போய் விட்டது. எப்போதும் பாடல்களை கேட்டு விட்டு, நன்றாக இருந்தால் இசைக் குறுந்தட்டு வாங்குவது வழக்கம்.

நேற்று 'சில்லென்று ஒரு காதல்' இசைத்தட்டு வந்திருக்கும் என்ற நப்பாசையில் லேண்ட்மார்க் சென்றேன். ம்ஹீம். இன்னும் இரண்டு, மூன்று தினங்களாகும் என்று கூறிவிட்டனர். சரி வேறு என்னென்ன படங்கள் வந்திருக்கின்றன என்று பார்ப்போம் என்று நோட்டமிட்டேன். சம்திங் சம்திங்.. திமிரு போன்ற படங்களே இருந்தன. அருகில் ஆங்கில பாப் ஆல்பம் போல By2 என்று ஓர் இசைத்தட்டு இருந்தது. என்ன இது என்று பார்த்தால் இசை: விஜய் ஆண்டனி என்று எழுதப்பட்டிருந்தது.

'டிஸ்யூம்', படத்தின் இசைத்தட்டை சிறிது தயக்கமில்லாமல் (கேட்காமலேயே) வாங்கினேன். எதிர்பார்ப்பு வீணாகவில்லை. அதே போல இதுவும் சிறந்த பாடல்களைக் கொண்டிருக்குமா என்ற எதிர்பார்ப்பில் வாங்கிக் கொண்டேன்.

அருகில் சாசனம் படத்தின் இசைத்தட்டும் இருந்தது ஆச்சர்யம். இந்தப் படம் எப்போது வருமென பல ஆண்டுகள் எதிர்பார்ப்பு மேலோங்க காத்திருக்கிறேன். 2001-ம் ஆண்டே படத்தின் கதையை ஏதோ ஒரு வலைத்தளத்தில் படித்திருந்தது ஞாபகம். செட்டியார் சமூகத்தில், குழந்தையைத் தத்து கொடுத்தப் பின் தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தைக்கும், அதன் உண்மையான பெற்றோர்களுக்கும் இடையே உள்ள உறவில் உருவாக்கப்படும் சமூகத் தடை மீதான படம் என்று படித்தது ஞாபகம். அதாவது, குழந்தையின் பெற்றோர் இறந்தால் கூட அந்தக் குழந்தை இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூடாது என்ற அளவில். இதில் அரவிந்த்சாமி தந்தையாகவும், ரஞ்சிதா மகளாவும், சின்னப் பூவே மெல்லப் பேசு படத்தில் பிரவுவின் காதலியாக வரும் நடிகைக்குப் (பெயர் ஞாபகம் இல்லை) பிறந்த குழந்தை தான் ரஞ்சிதா என்பது போல் படித்த ஞாபகம். பின்னர் அரவிந்தசாமி-டெல்லிகுமாரின் உறவுமுறை பற்றி படித்த போது கூட எனக்கு இந்தப் படம் தான் ஞாபகத்திற்கு வந்தது.

கடைசி காட்சி வசனங்கள் அதிகமில்லாமல் அரவிந்த் சாமிக்கும், ரஞ்சிதாவிற்கும் இடையில் நடப்பது போல் அதில் விவரித்திருந்தனர். பார்க்கலாம் இப்போதாவது படம் வெளிவருகிறதா என. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் பாலபாரதி. ஒரு தயக்கமிருந்தாலும், மகேந்திரனின் படமென்பதால் இசைத்தட்டை வாங்கிக் கொண்டேன்.

வீட்டில் வந்து, முதலில் சாசனத்தை ஒலிக்கவிட்டேன். ஒரு பாடலைத் (முதல் பாடல்) தவிர பிற பாடல்கள் அவ்வளவு சிறப்பாக வரவில்லை. பாடல்களை நன்றாக கேட்டு விட்டு எழுதுகிறேன்.

By2ல், விஜய் ஆண்டனி இம்முறையும் ஏமாற்றவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் இடம்பெற்ற ஒரு பாடலை மிகவும் லயித்துக் கேட்டேன். மிகவும் அரிதாகவே ஒரு பாடலைக் கேட்கும் போது, நமக்குள்ளேயே உற்சாகம் பிறக்கும்; பாடல் முடியும் வர முகத்தில் புன்னகை மாறாமல் இருக்கும். அப்படி ஒரு உற்சாகம் இந்தப் படத்தில் இடம் பெற்ற 'பூவின் மடியில் புறா குஞ்சுகள்' என்ற பாடலைக் கேட்கும் போது ஏற்பட்டது. வரிகளை சரியாக கவனிக்கவில்லை. என்னவொரு பாடல்! என்னவொரு இசை! என்னவொரு குரல்!. சாதனா சர்கம் அற்புதமாக பாடியுள்ளார்.

இதே பாடல் மூன்று முறை வெவ்வேறு கவிதை வரிகளில் இடம் பெற்றுள்ளது. மற்ற இரண்டு பாடல்களை விட சாதனா சர்கம் பாடியுள்ள பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ('பூவின் மடியில் புறா குஞ்சுகள்').

அற்புதம்.

மற்ற பாடல்கள் பரவாயில்லை. 'என் கால்கள்' பாடல் நன்றாக இருக்கிறது. சைத்ரா நன்றாக பாடியிருக்கிறார். 'அழகா அழகா' (சாதனா பாடியது) பாடலை எங்கேயோ கேட்டது போலிருக்கிறது (தேவா பாடல்??). பாடல் ஞாபகம் வந்ததும் தெரிவிக்கிறேன்.

வரிகளை பெரும்பாலும் கவனிக்கக் கூடாது என்று கவனத்துடன் சில பாடல்களை கேட்பேன். ஆனால் சில பத்து முறைகள் கேட்ட பின் தானாகவே மனதில் பதிந்து விடும். அப்படி பதிந்து விட்டால் பாடல்கள் சலிக்க ஆரம்பித்து விடும். இந்தப் பாடலும் சலித்துப் போகும் நாள் வரும். அது மட்டும் தான் ஒரே வருத்தம்.

சில மாதங்களுக்கு என்னுடைய ஒரு பதிவில் கூறியிருந்த கருத்தை மீண்டும் கூற விரும்புகிறேன். விஜய் ஆண்டனிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. என்னுடைய 'Songs\Vijay Antony' ஃபோல்டர் நிரம்பி வழிய வேண்டும் என்பது எனது அவா. அவரின் முதல் படத்தில் (சுக்ரன்) இடம்பெற்றிருந்த, 'உச்சி முதல் பாதம் வரை', 'உன் பார்வையோ தீயானது' பாடல்களை இப்போதும் கேட்பதுண்டு. முக்கியமாக, 'உச்சி முதல் பாதம் வரை' பாடலின் ஆரம்பத்தில் 'கோயோ மாயோ ....' என்ற இடத்தில் நடு நடுவே வரும் குழந்தைகளின் குரலையும், 'இமைகளில் இருக்கிறாய், கண்ணிரண்டில் கத்தியுடன் குதிக்கிறாய்' ராகத்தையும் விரும்பிக் கேட்பதுண்டு. ஆனால் சமயங்களில் இவரின் பாடல்கள் ஒன்று போல் இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கின்றன. அதில் மட்டும் சிறிது கவனம் செலுத்தினால் + (சில படங்களும் வெற்றியடைந்தால்) இவர் நிச்சயம் தமிழில் கொடி நாட்டலாம்.

படத்தின் பெயர் மாறக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன். சின்ன பட்ஜெட் படமாக இருப்பதால், கேளிக்கை வரி விலக்கை கருத்தில் கொண்டு படத்தின் பெயர் மாறக்கூடும். வசனத்தை பாடல்களின் ஆரம்பத்திலிருந்து நீக்கியிருக்கலாம் என்று கருதுகிறேன்.

குறிப்பு: சில்லென்று ஒரு காதல் படத்தின் மாதிரி பாடல்களை ராகா.காம் தளத்தில் கேட்டேன். ரகுமான் பாடிய நியூயார்க் நகரம் உறங்கும் வேளையில் பாடல் நன்றாக வந்திருக்கிறது.

வெள்ளி, ஜூலை 28, 2006

சில்லென்று ஒரு காதல்

சென்ற மாதம், 'ஜில்லென்று ஒரு காதல்' படத்தின் பாடல்கள் பட்டியல் என கீழ்கண்ட பாடல்களை பதித்திருந்தேன். அதில் சில திருத்தங்கள்.

------------------------------ பழைய பதிவு --------------------------------------

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் சூர்யா, ஜோதிகா நடித்து கிருஷ்ணா இயக்கி வரும் ஜில்லென்று ஒரு காதல் படத்தின் பாடல்கள் இன்னும் ஒரிரு வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. சென்ற மாதம் (மே மாதம்) வெளியிடப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் அது ஜூன் மாதம் இறுதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் தள்ளிப் போகவும் வாய்ப்பிருக்கிறது.

பாடல்களின் பட்டியல்: (உறுதி செய்யப்படாத தகவல்)

1. ஹிப் ஹிப் ஹிப்பிடா - கிளிண்டன், கைலாஸ் கீர், ரஃபீக், ஜார்ஜ் பீட்டர்ஸ்
2. ஜில்லுன்னு - ஏ.ஆர்.ரகுமான், சைந்தவி
3. Care For Her - (Instrumental - நவீன், அல்மா)
4. முன்பே வா - நரேஸ் அய்யர், ஸ்ரேயா கோஷல்
5. காதல் குளு குளு - கார்த்திக், ஹரிஹரண், மதுஸ்ரீ
6. ஸ்பரிசம் - உன்னி கிருஷ்ணன், சித்ரா, மகாலக்ஷ்மி அய்யர்
7. Care For Her - சுனிதா சாரதி, தன்வி, சுசித்ரா, ஃபெபி
8. இரவில் இமையில் - ஏ.ஆர்.ரகுமான், நரேஸ் அய்யர், சைந்தவி



கொசுறு:

* சுனிதா சாரதி, தமிழில் ஏ.ஆர்.ரகுமானுக்காக பாடும் இரண்டாவது பாடல். முதல் பாடல், ஆய்த எழுத்தில் இடம் பெற்ற "நீயாரோ நான் யாரோ" பாடல். இது தவிர "வாரியர்ஸ் ஆஃப் ஹெவன்", என்ற சீனப் படத்தில் "From the heavens up above", என்ற பாடலைப் பாடியிருந்தார்.

* ஸ்ரேயா கோஷல் ரகுமானுக்காகப் பாடும் மூன்றாவது பாடல். முதலாவது பாடல் உனக்கு 18 எனக்கு 20 என்ற படத்தில் இடம் பெற்ற "அழகின் அழகி". இரண்டாவது பாடல், அன்பே ஆருயிரேவில் இடம் பெற்ற "தழுவுது நழுவுது" பாடல்.

* சைந்தவிக்கு இரண்டாவது படம். காட் ஃபாதரில் 'இன்னிசை' பாடலைப் பாடியிருந்தார்.

* நீண்ட நாட்களுக்குப் பிறகு உன்னிகிருஷ்ணனுக்கு வாய்ப்பு (நியூவில் இடம்பெற்ற 'காலையில் தினமும்', இவரது கடைசி பாடல் என்று நினைக்கிறேன்)

* கார்த்திக்கிற்கும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்துள்ள வாய்ப்பு.

* 'முன்பே வா' என்ற பாடலின் ஆரம்பம் 'அன்பே வா, முன்பே வா', என்று அமையும் என்று கேள்விப்பட்டேன்.

* வழக்கம் போல பிளாஸே, நரேஸ், மதுஸ்ரீ ஆகியோருக்கு இந்தப் படத்திலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

* ரகுமான், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல், இளைஞர்களைச் சுண்டி இழுக்கும் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

* இந்தப் படத்திலும் ஹரிணிக்கும், சுஜாதாவிற்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. சுஜாதாவிற்கு வாய்ப்பு குறைந்து போனது எதனால் என்று எனக்குத் தெரியவில்லை. 1992 முதல் பல வருடங்களாக பல ரகுமான் படங்களில் பாடி வந்தார். 'புது வெள்ளை மழை', 'நேற்று இல்லாத மாற்றம்', 'போறாளே பொன்னுத்தாய்', 'ஆத்தங்கரை மரமே', 'பூ பூக்கும் ஓசை', 'மெல்லிசையே', 'காற்றுக் குதிரையிலே', 'என் வீட்டுத் தோட்டத்தில்', போன்ற பல பாடல்கள் அவருக்குப் புகழ் சேர்த்தது. ஆனால் சூர்ய வம்சம் படத்தில் இடம்பெற்ற 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' என்ற பாடல் அவருக்கு தினகரன் விருது வாங்கிக் கொடுத்தது. அந்த விழாவில், "நான் பல பாடல்கள் பாடியுள்ளேன். ஆனால் இந்தப் பாடல் பாடிய பிறகு தான் எனக்குப் பெரும் புகழ் கிடைத்தது', என்ற தோரணையில் ஏதோ கூறினார். ஏதோ ரகுமானுக்கு அவர் பாடிய பாடல்கள் எதுவுமே வெற்றியடையாதது போல் அவர் கூறியதாகத் தோன்றியது. அவர் என்ன நினைத்து அப்படிச் சொன்னாரோ? அதன் பிறகு கூட ஒரு சில படங்களில் அவர் பாடியுள்ளார். பார்த்தாலே பரவசம் படத்தில் இடம் பெற்ற அதிசய திருமணம் பாடல்.


------------------------------- புதிய பட்டியல் ------------------------------------


1. கும்மி அடி - டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம், சொர்ணலதா, நரேஷ் அய்யர், தேனி குஞ்சரம்மா, விக்னேஷ் மற்றும் குழுவினர்.
2. முன்பே வா - நரேஸ் அய்யர், ஸ்ரேயா கோஷல்
3. மாச மாச - எஸ்.பி.பி.சரண், ஸ்ரேயா கோஷல்
4. மச்சக்காரி - சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ்
5. நியூயார்க் - ஏ.ஆர்.ரகுமான்
6. மாரிச்சாம் - கரோலிஷா, முகமது அஸ்லம், கிருஷ்ணா
7. ஜில்லென்று ஒரு காதல் - தன்வி


குறிப்பு:

* மொழி மாற்றம் செய்ததால், பட்டியலில் எழுத்துப் பிழைகள் இருக்கலாம்.

* நேற்று 'ஜில்லென்று ஒரு காதல்' என்றிருந்த படத்தின் தலைப்பு, 'சில்லென்று ஒரு காதல்' என்று மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. (தமிழ் தலைப்புகளுக்கு, கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு காரணமாக இருக்கலாம்).

* பாடல்கள் அடுத்த வாரம் வெளியாகிறது.



* சில வாரங்களுக்கு முன்பாக, டாக்டர். சீர்காழி சிவ சிதம்பரம் சன் மியூசிக்கில் (ஞாயிறு 8.30 மணி சிறப்புப் பகுதியில்) ஏ.ஆர்.ரகுமானுக்குப் பாடிய பாடல்களைப் பற்றி பெருமையுடன் கூறிக்கொண்டிருந்தார். அவர் ரகுமானுக்கு இது வரை இரு பாடல்கள் பாடியுள்ளார் என நினைக்கிறேன்.

1. ஓடக்கார மாரிமுத்து (படம்: இந்திரா)
2. அஞ்சாதே ஜீவா (படம்: பெயர் நினைவில்லை. பிரசாந்த், சிம்ரன் நடித்தது)

-------------------------------------------------------------------------------------

கடந்த சில வாரங்களாக கடுமையான வேளைப்பளு காரணமாக பதிவுகள் இட முடியவில்லை. சென்ற மாதம் ஒரு பதிவினைத் தட்டச்சு செய்து வைத்திருந்தேன். இறுதி வடிவம் கொடுத்து பதிவிடலாம் என்றால் தயக்கமிருக்கிறது. அது ஆங்கிலப் பாடல்களின் பட்டியல்.

செவ்வாய், ஜூலை 04, 2006

மறைந்திருந்து கண்காணிக்கப்படுகிறது

நண்பனின் திருமணத்திற்காக நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்ற சனிக்கிழமை ஊருக்குச் சென்றிருந்தேன். ஊரில் இறங்கியதும் கண்ணில் பட்ட காட்சி ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்விளாகம் திருக்கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் சுவரொட்டி. சென்ற வருடம் ஆவணி மாதம் முடிப்பதற்காகத் திட்டம் தீட்டி அது இந்த வருடம் ஆனி மாதம் தான் முடிந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் பலருக்கு ஞாபகத்திற்கு வருவது கீழ்கண்ட மூன்றில் ஏதாவது ஒன்றிரண்டு. 1. ஆண்டாள் கோவில். 2. பால்கோவா 3. தாமரைக்கனி

வெளியூரைச்(தமிழகம்) சார்ந்தவர்களுக்கு இம்மூன்றில் ஏதாவது ஒன்றைக் கூறினால் ஏறத்தாழ ஸ்ரீவில்லிபுத்தூர் ஞாபகம் வந்து விடும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பிரசித்தி பெற்றது. தமிழக அரசின் சின்னமும் ஆண்டாள் கோவில் (வடபத்ர சயனர் கோவில்) கோபுரம் தான். ஆனால் ஆண்டாள் கோவிலைப் பற்றி அறிந்த பலர், அதே ஊரில் உள்ள மடவார்விளாகம், வைத்தியநாத சுவாமி கோவிலை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கும் கோவிலின் வரலாறு ஒன்றும் தெரியாது. இது கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் வருடங்களாகலாம் என்று கருதுகிறேன். ஆனால் சிறு வயதிலிருந்து அடிக்கடி செல்லும் கோவில். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, அர்ச்சனை செய்யச் சொல்லி வாரா வாரம் சனிக்கிழமை வீட்டிலிருந்து என்னை அந்தக் கோவிலுக்குப் போகச் சொல்வார்கள். எரிச்சலுடன் பல முறை சென்று வந்துள்ளேன்.



நன்றி: தினமலர்

ஞாயிறு கும்பாபிஷேகத்திற்கு கூட்டம் அதிகமிருக்கும் என்பதால், சனிக்கிழமை இரவே கோவிலுக்குச் சென்று சாமி தரிசனத்தை முடித்து விட்டு வரலாம் என்று சென்றேன். கோபுரம் சீர்செய்யப்பட்டு புதிய சிமெண்ட் கலவையை சுமந்து நின்றது. அலங்கார விளக்குகளால், அழகு மிளிர்ந்தது. பெரும்பாலான கோவில்களில் கோபுரங்களைச் சீர் செய்த பின்னர், அதற்கு பச்சை, சிகப்பு, மஞ்சள் வண்ணங்களால் பூச்சு செய்வதுண்டு. இது கோபுர அழகை கெடுப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் சிமெண்ட் பூச்சு எளிமையாக இருப்பதுடன், கோபுரத்தின் அழகையும் உயர்த்திக் காட்டுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டாள் கோபுரத்திற்கு இட்ட வண்ணப் பூச்சு அதன் கம்பீரத்தைக் குறைப்பதாகவே எனக்குப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக கோவில் தெப்பக்குளத்தில் அதிகமான தண்ணீர் இல்லாமல் இருந்தது. இந்த வருட ஆரம்பத்தில் பெய்த மழையின் காரணமாக தெப்பக்குளம் நிரம்பி இருந்தது விசேஷம். அந்தத் தெப்பக்குளத்தைப் போலவே கோவிலின் எதிரில் புதிதாக ஒரு தெப்பக்குளம் நிர்மானிக்கப்பட்டு அதன் மத்தியில் சிவன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

சாமி தரிசனம் முடித்து விட்டு, கோவில் வாசலில் நடந்து கொண்டிருந்த சொற்பொழிவுக்குச் சென்றேன். முன்பு போல சொற்பொழிவுகளுக்கு அதிகமாக கூட்டம் வருவதில்லை. ஆண்டாள் கோவில் தேரோட்ட விழாவிற்காக பத்து நாட்களுக்கும் மேலாக சொற்பொழிவு நடக்கும். அந்த பத்து நாட்களும் கோவில் நுழைவாயிலைக் கடப்பதே பெரும் பாடாகி விடும். அவ்வளவு கூட்டமிருக்கும். ஆனால் வைத்தியநாத சுவாமி கோவில் சொற்பொழிவில் கூட்டம் ஐம்பதைத் தாண்டாது. ஆனால் கோவிலின் நுழைவாயிலில் இலவசமாகக் கொடுத்த தயிர்சாதத்தை வாங்குவதற்காக உண்டான வரிசை 200 மீட்டர் நீளத்திற்கு இருந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான செண்பகத்தோப்பு காடு, பல்லாயிரக்கணக்கான சதுர கி.மீ பரப்பளவில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் அமைந்துள்ளது. நான் ஊருக்குச் சென்றால் தவறாமல் செல்லும் இடங்களில் அதுவும் ஒன்று. அந்த காட்டின் வாயிலில் இறங்கி, இரண்டு கி.மீட்டர் காட்டில் நடந்தால், செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோவில் வரும். பெரும்பாலோனோர்கள் அந்தக் கோவிலை ஒட்டியே அடுப்புகளை வைத்து சமைத்து விட்டு அருகிலுள்ள ஆற்றில் குளித்து விட்டு, சமைத்ததை உண்டு ஊர் கிளம்பி விடுவர். சிலர் அதனைத் தாண்டி இரண்டு-மூன்று கி.மீட்டர்கள் நடந்து அமைதியான இடத்தில் குளிப்பதுமுண்டு.

தமிழகத்தின் ஒரு முக்கிய புள்ளியின் குலதெய்வமும் பேச்சியம்மன் கோவில் என்று தான் கேள்வி. சென்ற ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பாக அவர் அந்தக் கோவிலின் கும்பாபிஷேகத்தையும் நடத்தினார். அப்போது அவருடைய வருகைக்காக, காட்டின் நுழைவாயிலில் இருந்து கோவில் வரையுள்ள இரண்டு கி.மீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு காட்டில் சாலை வசதி செய்ய்ப்பட்டுள்ளது. இப்போது அந்த சாலையைக் கடப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது. முன்பெல்லாம் அதனைக் கடந்து செல்வதற்கே சுகமாக இருக்கும். இப்போது ஆட்டோக்களும், கார்களும் பெரிய வேன்களும் கூட காட்டின் மத்தி வரை வந்து விடுவது வேதனை அளிக்கிறது. இதனைப் பற்றி ஏன் யாருமே கேள்வி எழுப்பவில்லை எனத் தெரியவில்லை.

------------

ஊரில் பள்ளியின் அருகில் ஐஸ் விற்பவர்கள் கிட்டத்தட்ட சின்ன பசங்களுடன் பழகிப் பழகி அவர்கள் அளவிற்கு சமயங்களில் இறங்கி வந்து பேசுவதுண்டு. எப்படி தான் இது போன்ற சிறுவர்களுடன் இவர்கள் வியாபாரம் வைத்துக் கொள்கிறார்களோ என்று ஆச்சர்யமாக இருக்கும்.
சனிக்கிழமை ஒரு பள்ளியைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு ஐஸ் விற்பவர், பள்ளியின் அருகில் வியாபாரமில்லாமல் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக ஒரு 8 வயது பையன் ஒருவன்
அருகிலிருந்த கடையில் வாழைப்பழம் வாங்கி, அதைத் தின்று கொண்டே இவரைக் கடந்து சென்றான்.

ஐஸ் விற்பவர், "டேய் ஐஸ் வேணுமாடா", என்றார்.

"வேணாம். வேணாம்.", என்று அலட்சியமாகப் பதில் சொல்லி விட்டு அவரைப் பார்க்காமலேயே கடந்து சென்றான்.

இதனால் சிறிது கடுப்படைந்த அவர், அவனை ஏமாற்றும் பொருட்டு,

"டேய், துட்டை கீழே போட்டுட்டுப் போற... வேண்டாமாடா?", என்றார்.

அவன் லேசாகத் திரும்பி அவரை குறுகிய கண்ணால் ஒரு பார்வை பார்த்து விட்டு,

"ஹீம். போய்யா....நான் துட்டே கொண்டு வரலே...", என்று நக்கலாக கூறினான்.

பையன் பயங்கர உஷார் பார்ட்டியாக இருப்பதைக் கண்டு இவர் தான் ஏமாற்றமடைந்தார். ஆனாலும் விடாமல்,

"அப்புறம் வாழைப்பழம் திங்குற?"

"நான் வரும்போது துட்டு வச்சிருந்தேன். எல்லாத்துக்கும் பழம் வாங்கிட்டேன்.... இப்ப எங்கிட்ட துட்டு இல்ல", என்று அலட்சியமாக பதில் சொல்லி விட்டு ஓடி விட்டான்.

------

இரண்டு சுவாரசியமான சுவர் விளம்பரங்கள்.

1. இது மதுரை ரயில் நிலையத்தின் வாசலில் உள்ள சுற்றுச் சுவரில் எழுதப்பட்டிருந்தது.

"இங்கு சிறுநீர் கழிக்காதீர்.
மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மறைந்திருந்து கண்காணிக்கப்படுகிறது."

2. மதுரையில் ஒரு நிறுவனம் வைத்திருந்த விளம்பர போர்டில்

"ஆணுறை இல்லா உடலுறவு
ரிஸ்க் கண்ணா ரிஸ்க்
ஆணுறை அணிந்த உடலுறவு
பெஸ்ட் கண்ணா பெஸ்ட்"