புதன், ஏப்ரல் 26, 2006
அந்தக் குழந்தைக்கு நான் அப்பா இல்லை
"என்னடா விசயம்?", என்று ராஜா பதட்டத்துடன் சந்தனைக் கேட்டான்.
"டேய் ராஜா.... தேன்மொழி கர்ப்பமா இருக்குறாடா"
"என்னது உண்மையாகவா?"
"ஆமாண்டா"
"உனக்கு எப்படிடா தெரியும்?"
"அவங்க வீட்டுல சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க... இப்ப தாண்டா அத கேட்டேன்"
"அய்யோ.. நல்லா மாட்டுன நீ...."
சில விநாடிகள் மெளனம்.
"எனக்குப் பயமா இருக்குடா... ஏதாவது செய்யேண்டா..."
"நான் என்ன செய்யறது?"
ராஜாவும், சந்தனும் ஒரே கிராமத்தை சார்ந்தவர்கள். ஒரே தெருவில் வீடு. இத்தனைக்கும் படிப்பதும் ஒரே வகுப்பில் தான். ஆம். ஏழாம்வகுப்பு.
பிளாஷ்பேக்.
ஒரு நாள் சந்தனும், ராஜாவும் குளத்தங்கரையில் விளையாடிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சந்தன், ராஜாவிடம் தனது சந்தேகத்தை கேட்டான்.
"டேய் ராஜா எப்புடிடா புள்ள பொறக்குது?"
"எதுக்குடா?"
"சும்மா தாண்டா. இல்ல அடுத்த வீட்டுல இருக்குற ராணியக்காவுக்கு புள்ள பொறந்துருக்கு. அதான் எனக்கு சந்தேகம். எப்புடி புள்ள பொறக்குதுன்னு உனக்குத் தெரியுமாடா?"
"அதுவா. ஒண்ணுமில்லைடா.. கல்யாண மாப்பிள்ளை, பொண்ணுக்கு முத்தம் கொடுப்பார். முத்தம் கொடுத்த கொஞ்ச மாசத்துல புள்ள பொறந்துடும்"
"டேய் என்னடா சொல்லுறா?"
"ஆமாண்டா"
"அய்யோ. அன்னைக்கு தேன்மொழிக்கு முத்தம் கொடுத்தேண்டா"
"எப்படா"
"அன்னைக்குத் தண்ணியெடுக்க நானும் தேன்மொழியும் போனோண்டா, அப்ப வீட்டுக்குத் திரும்ப போகும் போது அவங்க எனக்கு முத்தம் கொடுத்தாங்கடா. நானும் திரும்ப கொடுத்தேண்டா. என்னடா ஆகும்?"
"அடப்பாவி... தப்பு பண்ணிட்டியேடா? அவ தான் தப்பு பண்ணுனா நீ ஏண்டா அப்படி பண்ணுண?"
"இப்ப என்னடா செய்றது?"
"நல்லா மாட்டுன...."
அவன் சொன்னதிலிருந்து, சந்தனுக்கு இருப்பே கொள்ளவில்லை. எப்போது பார்த்தாலும் மனதில் பயம் தான். எப்போது தேன்மொழி வீட்டிலிருந்து ஆட்கள் வந்து ஏதும் கேட்பார்களோ என்ற பயத்திலேயே காலத்தை ஓட்ட ஆரம்பித்தான். ஒவ்வொரு நாளும் தேன்மொழி வீட்டின் மீதே அவன் காதுகள் இருந்தன. அதிலிருந்து தேன்மொழியை பார்ப்பதில்லை. தேன்மொழிக்கு வயது 19 இருக்கும். 12-ம் வகுப்பை முடித்து விட்டு வீட்டில் சும்மா தான் இருக்கிறாள்.
இப்போது நிகழ்காலம்.
சந்தனின் மனதில் ஆயிரம் கேள்விகள். நாளைக்கு என்னவாகுமோ? நான் முத்தம் கொடுத்த விசயத்தை சொல்லியிருப்பாளோ? நான் தான் அப்பா என்று இப்போது தெரிந்திருக்குமோ என்ற கவலை அவனை வாட்ட ஆரம்பித்தது. காலையிலேயே வீட்டுல கேட்டுக்கிட்டு இருந்தாங்களே.. என்ன ஆயிருக்குமோ என்று தயங்கித் தயங்கி வீட்டிற்குச் சென்றான். ஆனாலும் மனதில் ஒரு சந்தேகம் இருக்க தான் செய்தது. குழந்தை எப்படிப் பிறக்கிறது என யாரிடமாவது கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்ற அவசரம் இருந்தது. ஆனால் யாரிடம் கேட்பது? வீட்டில் கேட்டால் அடிப்பார்களே? யாரைக் கேட்பது?
அன்று மாலை வீட்டிற்கு வெளியூரிலிருந்து மாமா வந்திருந்தார். அவருடன், சந்தனின் குடும்பமே வீட்டின் முன்புறத்திலிருந்த கிணத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிந்தனர். அருகில் அமைதியாக நின்று சந்தன் கேட்டுக் கொண்டிருந்தான் சந்தன்.
ஏதோ ஒரு விசயமாக காரசாரமாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்க ஒரு தம் கட்டுவதற்காக ஒதுங்கிய மாமாவைப் பின் தொடர்ந்தான் சந்தன். அருகில் இருந்த சுவற்றின் மீது சாய்ந்து கொண்டே தயங்கித் தயங்கி நின்றான்.
ஓரக்கண்ணால் இவன் நிற்பதைப் பார்த்துக் கொண்டே மெதுவாக சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார் அவன் மாமா.
"கேட்கலாமா? கேட்டால் சொல்வாரா? அல்லது திட்டுவாரா?", என்று மனதில் ஆயிரம் கேள்வியுடன் அவர் முகத்தை பரிதாபமாக பார்த்தான் சந்தன்.
"என்னடா?"
"மாமா..."
"இம்...சொல்லு"
"அது... அது....எப்படி மாமா புள்ள பொறக்குது?"
கேட்டு விட்டு வீட்டுப்பாடம் எழுதி வராமால் மாட்டிக் கொண்டு தண்டனைக்கு காத்திருக்கும் மாணவனைப் போல தனது மாமாவைப் பார்த்தான்.
இவனின் இந்த கேள்வியை எதிர்பார்க்காத மாமா, ஊரே அதிரும் படி இடியெனச் சிரித்தார்.
கேள்வி கேட்டிருக்க கூடாது என்று நினைத்து அவமானம் மேலிட அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
"சே நல்லா மாட்டிக்கிட்டோமே.. அன்னைக்கு மட்டும் முத்தம் கொடுத்திருக்காட்டி இவ்ளோ பிரச்சினை இல்லியே... இப்ப மாட்டிக்கிட்டோமே....", என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டே இரவில் தூங்கச் சென்றான். ஒவ்வொரு நாளும் நரக வேதனையாக இருந்தது. ஒவ்வொரு நாளும் என்ன நேருமோ என்ற பயம் மட்டும் மனதில் அடித்துக் கொண்டது.
வாசலில் பலத்த கூச்சலைக் கேட்டு படுக்கையில் இருந்து கண் விழித்தான். எழுந்து என்னவென்று வாசலில் பார்த்தான். நன்றாக விடிந்திருந்தது. தேன்மொழி வீட்டின் முன்பே கூட்டம்.
"ஆனாலும் இந்தப் பொண்ணு இப்படி பண்ணியிருக்க கூடாதுப்பா. இந்தப் பொண்ணா இப்படி? நம்பவே முடியலைப்பா. இந்த முத்துப் பயலும் இல்ல இப்படி பண்ணியிருக்கான். அப்பாவி பொண்ணைக் கெடுத்து வயத்துல புள்ளையைக் கொடுத்து இருக்கானே"
"அதான் அவமானம் தாங்காம ஊரை விட்டே ஓடிட்டாங்க... நல்லதுக்குக் காலம் இல்ல"
இதையெல்லாம் கேட்ட சந்தனுக்கு விண்ணுயரக் குதிக்க வேண்டும் போலிருந்தது. முதலில் ராஜாவை பார்த்து விசயத்தைச் சொல்ல வேண்டும் என ஓடினான். ஓடும் வழியெல்லாம் உரக்கக் கத்திக் கொண்டே ஓடினான்.
இவன் ஓடுவதைப் பார்த்த சந்தனின் சித்தப்பா அவனை நிறுத்தி "ஏண்டா இப்படி தலை தெரிக்க ஓடுற? என்னடா விசயம்", என கேட்டார்.
மெதுவாக மூச்சிறைத்து விட்டு, "தேன்மொழியும் முத்தண்ணாவும் ஊரைவிட்டு ஓடிப் போய்ட்டாங்க....", என்று சொல்லி மீண்டும் ஓட ஆரம்பித்தான்.
"அவங்க ஓடுனதுக்கு இவன் ஏன் இப்படி ஓடுறான்", என்று புரிந்து கொள்ள முடியாமல் நடக்க ஆரம்பித்தார்.
குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராஜாவை நோக்கி வேகமாக ஓடினான்.
"டேய் ராஜா....தேன்மொழியும், முத்தண்ணாவும் ஊரை விட்டே ஓடிட்டாங்கடா..."
"என்னடா சொல்லுற?"
"ஆமாண்டா அந்தக் குழந்தைக்கு நான் அப்பா இல்லடா.... முத்தண்ணா தான் அப்பா"
"உண்மையாவா?"
"நான் முத்தம் கொடுக்குறதுக்கு முன்னாடியே முத்தண்ணா முத்தம் கொடுத்துட்டார்டா" என்று மகிழ்ச்சி மேலிட தனது சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டான் நண்பனிடம்.
இது நான் எழுதிய சொந்தக் கதை அல்ல. சில வாரங்களுக்கு முன்பாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஜெயா டி.வியில் டாக்குமெண்ட்ரி படங்கள் காட்டப்பட்டன. அதில் கடைசி பத்து நிமிடங்கள் இந்தக் கதையை பார்க்கும் வாய்ப்பு பெற்றேன். கதையின் முன்பகுதி என்னவாயிற்று, எப்படி ஆரம்பமாயிற்று என ஒன்றும் தெரியவில்லை. பார்த்த மறு நிமிஷமே பிடித்து விட்டதால் சில புகைப்படங்கள் எடுத்தேன். அதனால் வசனங்களையும் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டேன். கதாபாத்திரங்களின் பெயரும் நினைவில் இல்லை. ஆனால் கதைக்கரு ஞாபகம் இருக்கிறது. அந்த கடைசி வரியும் கூட('நான் முத்தம் கொடுக்குறதுக்கு முன்னாடியே முத்தண்ணா முத்தம் கொடுத்துட்டார்டா'). மிக அருமையான விதத்தில் படமெடுக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் சந்தனின் பாத்திரம் மிக அருமை. இரண்டு சிறுவர்களின் பேச்சும், பாடி லாங்குவேஜும் மிக நுணுக்கமாக எடுக்கப்பட்டிருந்தது. சிறு வயதில், பலருக்கும் இதே போல் அனுமானங்கள் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
என்னால் முடிந்த வரையில் அதற்கு வடிவம் கொடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன். நான் இங்கே கொடுத்திருக்கும் விதத்தை விட, அந்தப் படம் பல நூறு மடங்கு அருமையாக இருந்தது. இது உறுதி. அதனை இந்தப் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும்.
குறிப்பு: யாராவது அந்த டாக்குமெண்ட்ரி படத்தை பார்த்திருந்து, அதன் பெயரும், இயக்குனரின் பெயரும் தெரிந்திருந்தால் சொல்லவும். இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள்.
இதோ அந்தப் புகைப்படங்கள் . (நன்றி: ஜெயா டி.வி)
கர்ப்பமா இருக்கா
யாரு அப்பான்னு சொல்லுடி
என்ன செய்யாலாம்னு சொல்லுடா
என்ன செய்யாலாம்னு சொல்லுடா - 2
ரெண்டு பேரும் ஓடிட்டாங்கய்யா
தேன்மொழி ஓடி போய்ட்டா
அந்தக் குழந்தைக்கு நான் அப்பா இல்லை
முத்தண்ணா முதலேயே முத்தம் கொடுத்துட்டார்டா
புதன், ஏப்ரல் 19, 2006
எங்கே செல்கிறது இந்த இடஒதுக்கீடு?
எங்கெங்கோ இருந்த இடஒதுக்கீடு இப்போது தனியார் நிறுவனங்களிலும் செயல்படுத்தப் படும் எனத் தெரிகிறது. பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கொடுத்த பேட்டியில், "தனியார் நிறுவனங்கள் இடஒதுக்கீட்டினை அமுல்படுத்துவதைப் பற்றி யோசிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது", எனத் தெரிவித்துள்ளார். இன்னும் வேறெங்கெங்கு இட ஒதுக்கீடு அமுலுக்கு வரும் எனத் தெரியவில்லை. உங்கள் வீட்டுக்கு வேலை பார்க்க வரும் ஒரு நபருக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றால் கூட, உங்களுக்கு பிடித்திருந்தால், திருப்தி இருந்தால் மட்டுமே கொடுப்பீர்கள். அதுவும் பேரம் பேசி, பத்து ரூபாய் கொடுக்கும் இடத்தில் எட்டு ரூபாயை மட்டுமே கொடுப்பீர்கள். பத்து ரூபாய்க்கே இவ்வளவு யோசனை என்றால், கோடிக்கணக்கில் முதலீடு செய்து நீங்கள் நிர்வாகிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர்களிடம் எவ்வளவு தரத்தை எதிர்பார்ப்பீர்கள்? (உடனே 'சிலர் தரம் தரம் என சல்லியடிக்கிறார்கள்'' என கூற ஆரம்பித்து விடாதீர்கள்).
உங்களுடைய நிறுவனத்திற்கு தேவைப்படும் ஆட்களைத் தேர்வு செய்யும் உரிமை உங்களுக்கு இருக்க வேண்டாமா? யார் யார் பணியில் சேர வேண்டும் என்ற முடிவை அரசு எடுத்தால் எப்படி? அரசு சொல்கிறது, 'உன்னோட நிறுவனத்தில் இந்த ஜாதிகாரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த ஜாதிக்கு 10% இடத்தைக் கொடு' என்று கூறினால் உங்களுக்கு எவ்வளவு எரிச்சலாக இருக்கும். இயல்பாகவே அத்தனை சதவீதம் அவர்களை அறியாமலேயே கொடுக்கப்பட்டிருக்கும் / நடைமுறையில் இருக்கும். ஆனால் '10% கொடு', என்று அழுத்தும் போது தான் சிக்கல் ஏற்படுகிறது. இது போல ஜாதி, மத, மொழி சிக்கல்கள் இல்லாத காரணத்தினால் தான் தனியார் நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது. மற்றவர்கள் வெற்றிகரமாக நடத்தும் நிறுவனங்களில் மட்டும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று நினைக்கும் சிலர் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்திப் பார்த்தால் இதன் வலி தெரியும்.
எனக்கு யார் யார் என்ன ஜாதியைச் சார்ந்தவர்கள் முக்கியமல்ல. வேலை பார்த்தால் சரி. திறமையுடன் வேலை பார்க்காவிட்டால் தூக்கி விட்டு இன்னொரு திறமையான நபரை நியமித்து விட்டுச் செல்கிறேன். இது இப்போது சாத்தியம். ஆனால் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட பின் ஒரு நபர் பணியில் இருந்து தற்காலிகமாகவோ / நிரந்தரமாகவோ நீக்கப்பட்டால் அங்கு ஜாதியின் பெயரால் பெரிய கூத்து நடக்க வாய்ப்பிருக்கிறது.
சாதி தாள்களை வைத்துக் கொண்டு, 'இவன் என்ன சாதி, அவன் என்ன சாதி', எனச் சரி பார்த்து ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, எனது நிறுவனம் என்ன தாலுகா அலுவலகமா அல்லது கிராம சாவடியா? யார் வேலையில் சேர வேண்டும் என்பதைச் சட்டமாகக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த எனது நிறுவனம் என்ன தலைமைச் செயலகமா?
ஆண்டுகள் செல்லச் செல்ல பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில் ஒன்றுமே இல்லை. பின்னர் கல்வியில், அரசு வேலை வாய்ப்பில், அரசியலில் (தனித் தொகுதிகள்) இப்போது தனியார் வேலை வாய்ப்பில். நாட்டை இது கூறு போடும் வேலை இல்லையா? ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரை செய்த போது, 'நீங்கள் கூறும் திட்டத்தை அறிமுகப்படுத்தி எனது நாட்டைத் துண்டாடச் சொல்கிறீர்கள். என்னால் நிச்சயமாக முடியாது', என்றார்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு சாதிச் சான்றிதழ்களை நம்பி பிழைக்கப் போகிறோம் எனத் தெரியவில்லை? உங்களது மதிப்பெண் சான்றிதழ்களை நம்பி நிலைக்கும் வழியைப் பாருங்கள். தனியார் நிறுவனங்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் காரணிகளில் முக்கியமானதாகத் திகழ்கிறது. அதையும் கெடுத்துத் தொலைத்தால் நன்றாக இருக்கும். சட்டம் என்ற ஒரு ஆயுதத்தை வைத்துக் கொண்டு, அடுத்தவனின் உழைப்பில் சலுகைகளைப் பெறுவதற்கு நாமெல்லாம் வெட்கப்பட வேண்டுமா? (இதை தனிப்பட்ட சமுதாயத்தின் மீதான தாக்குதலாக நினைக்க வேண்டாம். இது எனக்கோ / நான் சார்ந்திருப்பதாக கூறப்படும் சமூகத்திற்கும் பொருந்தும்.)
ஒரு வேளை இந்த சட்டம் அமுல் செய்த பிறகு, ஒரு நிறுவனத்தில் இருந்து குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு நபரை சரியாக பணிபுரியவில்லை என்ற காரணத்திற்காக வெளியேற்றினால் என்னவாகும்?
1. அவரின் மேலதிகாரி என்ன ஜாதியைச் சார்ந்தவர் என்று பார்ப்பர். அவர் மீது பழி போடப்படும்.
2. நீக்கப்பட்டவரின் சமூகத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு, அதனை ஒரு பெரிய சிக்கலாக மாற்றுவார்கள்.
3. மீண்டும் நீக்கப்பட்ட நபரின் பிரிவிலிருந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து பணியை நிரப்ப வேண்டும். செய்தித் தாள்களில் இந்த ஜாதி / பிரிவின் கீழ் இத்தனை இடங்கள் காலியாக இருக்கின்றன. அந்தப் பிரிவைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்படும். விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் தங்களது விண்ணப்பத்திலும், நான் இந்த ஜாதி, இந்தப் பிரிவை சார்ந்தவன் என்று பெருமையாகக் குறிப்பிட்டுக் கொள்வார்கள்.
4. இன்னும் சில ஆண்டுகளில், 'பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்த நபர்கள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நீக்கப்படுகிறார்கள்', என்ற குற்றச்சாட்டு வலுத்து, அதற்கும் ஏதாவது ஒரு சட்டம் இயற்றப்பட்டு, இங்கும் அனனவரும் (எல்லா சமூகத்தினரும்) அரசு நிறுவனங்களைப் போல நிரந்தர சீட்டை போட்டு விடுவார்கள்.
5. இப்போது இருப்பது போல, Skillset-ஐ அடிப்படையாக வைத்து அந்த இடத்திற்கு இன்னொருவரைப் பணியில் அமர்த்த முடியாது. சென்றவர், எந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்று பார்க்க வேண்டும். அதே பிரிவைச் சார்ந்த இன்னொருவரை பணியிலமர்த்த வேண்டும். நீங்களும் நினைத்த நேரத்தில் பணி மாற முடியாது. ஏனென்றால் குறிப்பிட்ட நிறுவனத்தில் உங்கள் பிரிவிற்கு வேலை காலியாக இருக்காது.
6. அடுத்து எல்லா மாநிலங்களிலும் மொழி வாரியாகவும், மத வாரியாகவும் நிரப்பபடும். பிற்காலத்தில் பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் சட்ட விரோதமாகக் குடியேறுபவர்களுக்கும் ஏதாவது ஒரு அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
7. நிறுவனங்கள், லாபத்தை உயர்த்துவது எப்படி என்று கூட்டம் நடத்தி திட்டமிடுவதற்குப் பதில், சாதி சங்கங்களுடன் சமரசம் பேசிக் கொண்டிருப்பார்கள்.
8. சிறிது ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு உயர்ஜாதியினருக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது. அதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆரம்பிப்பார்கள். பின்னர் பதவி உயர்வு இட ஒதுக்கீடு முறைப்படி கொடுக்கப்படும்.
இங்கே, 'பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் நிலைமை மோசமாக இருக்கிறது; அவர்கள் முன்னேற வேண்டும். அதற்காக தான் இடஒதுக்கீடு', என்று கூறுபவர்கள் தயவு செய்து வடகிழக்கு மாநில மக்களின் நிலைமையையும் கருத்தில் கொள்ளட்டும். அனைவரும் அவரவருக்கு எது நல்லதோ அதற்கு மட்டுமே போராடுகிறார்கள். இவர்களுக்கு சலுகைகள் என்றால், அரசியல்வாதிகளுக்கு ஓட்டுகள்.
'வடகிழக்கு மாநில மக்களின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அனைத்து அரசு வேலை வாய்ப்புகளும் இன்னும் பத்து வருடங்களுக்கு அஸ்ஸாம், மேகலாயா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம், மிசோராம், நாகலாந்து மாநிலங்களைச் சார்ந்த மக்களுக்கு கொடுக்கப்படும். மேலும் கல்லூரிகளிலும் அவர்களுக்கு 55% இட ஒதுக்கீடு கொடுக்கப்படும். மற்ற மாநில மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கும் காரணத்தினால் அவர்கள் அங்கு பணிபுரிந்து கொள்ளலாம்', என்று அரசு ஒரு ஆணையை வெளியிட்டால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
உங்களுக்கோ அல்லது உங்களது உறவினருக்கோ முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கிறது. பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த ஒரு மருத்துவர் இருக்கிறார். அவ்வளவாக பெயரெடுக்காத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு நபர் மருத்துவரோ இருக்கிறார். யாரிடம் செல்வீர்கள்? அப்போதும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினை சார்ந்த ஓர் மருத்துவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்து வேண்டி இரண்டாமவரையா தேர்ந்தெடுப்பீர்கள்? மருத்துவரின் ஜாதியைப் பார்ப்பீர்களா? அதைத் தெரிந்து கொண்டு தான் அறுவைச் சிகிச்சைக்கு ஒப்புக் கொள்வீர்களா? இப்படி கூறுவதால், பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சார்ந்தவர்கள் அனைவரும் திறமை குறைந்தவர்கள் என நான் கூறுகிறேன் என எண்ண வேண்டாம். நான் கூறுவதெல்லாம், சலுகைகள் இருக்கட்டும், ஊக்கங்கள் தொடரட்டும். ஆனால் அவற்றை ஒரு இடத்தில் நிறுத்த தான் வேண்டும். இது போன்ற உயிர் காக்கும் விசயங்களில் கூட இடஒதுக்கீடு என்றால் அபத்தம் இல்லையா அது?
அய்யா.... இவருக்கு வசதி இல்லை என்றால், வசதியை ஏற்படுத்திக் கொடுங்கள். விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பது போல், மானியம் கொடுங்கள்; சைக்கிள் கொடுங்கள்; லவச வீடு கட்டிக் கொடுங்கள்; கல்வியை இவர்களுக்கு இலவசமாக்குங்கள்; இலவசப் பயிற்சி கொடுங்கள். இவ்விதமான எதிப்பும் இல்லை. ஆனால் இன்னொருவனை முன்னேற்றுகிறேன் என்று கூறி நன்றாகப் படிக்கும் ஒரு மாணவனின் உரிமையைப் பறிப்பது எவ்விதத்தில் நியாயம்? என்னுடைய நண்பர்கள் சிலர் மாவட்டத்திலேயே சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவமோ, அல்லது பொறியியல் துறையில் புகழ்பெற்ற கல்லூரிகளிலோ சேர முடியாமல் போனதை அறிவேன். அத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்ததற்கு இது தான் விலையா?
இப்படி சலுகைகளாகக் கொடுத்துக் கொடுத்து அவர்களின் திறமையை நீங்கள் மட்டுப்படுத்துகிறீர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. அவர்களை சுதந்திரமாக விட்டிருந்தால், நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலாக திறமையை வளர்த்து விசுவரூபமெடுத்திருப்பார்கள். ஆரம்பத்திலிருந்தே, அவர்கள் எப்போதும் சுகமாக அமர்ந்திருப்பதற்கு ஏதுவாக ஒரு எலெக்ட்ரானிக் சற்கர நாற்காலியைக் கொடுத்து, அவர்களை நொண்டியாக்கி விடாதீர்கள்.
சலுகைகளை (இடஒதுக்கீடு) எதிர்பார்த்து ஒரு முறை வாழப் பழகிவிட்டால், பின்னர் மனம் அதையே எதிர்பார்க்காதா? இப்படி இடஒதுக்கீட்டினை மட்டுமே (தன்னிடம் திறமை இருந்தும் அதனை உபயோகப்படுத்தாமல்) நம்பி வாழ்பவர்களுக்கும் இவர்களுக்கும் உடல் திறனிருந்தும் வேலை செய்யாமல் பிச்சையெடுக்கும் நபருக்கும் என்ன வித்தியாசம்? நாட்டில் சமத்தும் பரவ, ஏற்ற தாழ்வு மறைய இடஒதுக்கீடு அவசியம் என சிலர் ஆணித்தரமாகக் கூறுகிறார்கள். அனைத்து அதிகாரமும், சலுகைகளும், வாய்ப்புகளும் உங்களுக்கு மட்டுமே கிடைப்பது தான் சமத்துவம் என்றால், அதற்குப் பெயர் சமத்துவம் அல்ல. சமூகத்திற்கு அடிக்கும் சாவு மணி. (இதை தான் ஒரு சில பிரிவினர் அந்த காலத்தில் செய்து வந்தனர் என மீண்டும் ஆரம்பிக்காதீர்கள்)
இன்னும் சிலர் வாய்ப்பு கொடுத்தால் தான் திறமை வரும். வாய்ப்பு கொடுக்காமல் திறமை வளராது என்கிறார்கள். திறமையை வளர்ப்பதற்கு பயிற்சி தான் அத்தியாவசியம். பயிற்சியின் போது தூங்கி விட்டு, எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. போரில் சண்டையிடுவதற்கு போதிய பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலத்தின் போது பயிற்சியில் கவனமெடுக்காமல் காலத்தை ஓட்டி விட்டு, எனக்கு வாய்ப்பு வேண்டும் என்று அழுது போரிடும் வாய்ப்பை பெறுவதனால் இறப்பது நீங்கள் மட்டுமல்ல; உங்களைச் சார்ந்திருக்கும் நாடு என்பதையும் நினைவில் கொள்தல் வேண்டும். இடஒதுக்கீட்டினை கல்வியில் புகுத்துவதே தவறு. அனைவருக்கும் கல்வி என்றே இருந்திருக்க வேண்டும். அது முடியாத பட்சத்தில் மேல்நிலைப்பள்ளி அளவிற்காவது அது இருக்க வேண்டும். (அப்படித்தான் இருக்கிறது என்றே கருதுகிறேன்.) நல்ல ஆசிரியர்கள் அமைந்தால், ஒருவனின் திறமையை வளர்க்க 12 ஆண்டுகள் போதாதா? உடனே, 'கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் மேல்சாதியினருக்கு ஒரு மாதிரியும், கீழ் சாதியினருக்கு ஒரு மாதிரியும் சொல்லிக் கொடுப்பார்கள்', என்று அபத்தமாகக் குற்றம் சாட்டாதீர்கள். அப்படியானால் என்னைப் போன்றோர்கள் யாருமே படித்திருக்க முடியாது.
இடஒதுக்கீடு அமுல் செய்த பிறகு, ஒரு பிற்படுத்தப்பட்டவரோ / தாழ்த்தப்பட்டவரோ தனது திறமையினால் (இடஒதுக்கீடு அவருக்கு தேவையில்லாத பட்சத்திலும்) சிறிது சிறிது முன்னேறி நல்ல பதவியை அடைந்தாலும் நாளைக்கு சமுதாயம் என்னுடைய திறமையை எந்த அளவிற்கு மதிக்கும்? 'ஆமாம் இவன் இடஒதுக்கீடினால் வந்தவன் தானே', என்று தானே கூறுவார்கள்? எனது சந்ததியினர் சலுகை கிடைக்காமல் நாளைக்கு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. அவர்கள் தங்களது திறமையினால் முன்னுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இடஒதுக்கீடு என்ற ஊன்றுகோல் எனக்கும் / அவர்களுக்கு தேவையில்லை. அவர்களுக்கு தேவையானது எல்லாம் நடப்பதற்கு பயிற்சி மட்டுமே. அதனை என்னால் தரமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு அந்த நம்பிக்கை இருந்தால், அந்த ஊன்றுகோலைத் தூக்கி எறியுங்கள். முயற்சியுங்கள். விழுங்கள்; எழுந்திருங்கள். எவரின் துணையில்லாமல் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
உலகம் உங்கள் வசமாகும்!
விமானத்தில் பறப்பவர்கள், அலுமினிய கூண்டுக்குள் அடைபட்டு கீழே மேகங்களை மட்டுமே பார்க்க முடியும். அதில் பறக்கும் போது சுதந்திர உணர்வையும், நிம்மதியையும் விட எப்போது விமானம் விழுந்து விழும் என்ற அச்சம் மட்டுமே மனதில் குடியிருக்கும். ஆனால் தனது சிறகை விரித்துப் பறக்கும் பறவைக்கு அது போன்ற எந்த கவலையும் இருக்காது. அவற்றினால் நிற்காமல், உணவு உண்ணாமல் கண்டம் விட்டு கண்டம் கூட பறந்து செல்ல முடியும். விமானம் என்ற ஊன்றுகோலை விடுத்து, திறமையினால் பறக்க முயலுங்கள். உங்களால் உயரப் பறக்க முடியும்.
ஒருவனுக்கு 'அவன் கருப்பினத்தைச் சார்ந்தவன்' என்ற காரணம் காட்டி சலுகை கொடுப்பதற்கும், அவன் 'கருப்பினத்தைச் சார்ந்தவன்' என்ற காரணத்தினால் இது வரை உரிமை மறுக்கப்பட்டதற்கும் அதிக வித்தியாசமில்லை. உடனே, 'அவர்கள் செய்தார்கள். இப்போது நாங்கள் செய்கிறோம்', என்று கூற ஆரம்பித்து விடாதீர்கள். உங்களுக்கென்று தனிப்பட்ட வரலாறும் கிடையாது; இனிமேலும் இருக்கப் போவதுமில்லை. அதையும் மீறி வரலாற்றில் நிலைத்தவர்கள் எல்லாம். அவர்களின் நிறம், மொழி, ஜாதி, நாடு என்ற சலுகையினால் நின்றதில்லை. 30 ஆண்டுகள் புகழ் என்பதும் ஒரு புகழே அல்ல. ஏன் 2000 ஆண்டுகள் கூட மனித சமுதாயத்தின் வயதினை ஒப்பிடும் போது, இந்த பூமியின் வயதை ஒப்பிடும் போதோ வெறும் தூசு மட்டுமே. இந்த 2000 ஆண்டுகளில் ஓரளவு பெயர் தெரிந்தவர்களே சிலரே (அலெக்ஸாண்டராக இருக்கட்டும்; திருவள்ளுவராக இருக்கட்டும்) மிஞ்சி மிஞ்சி போனால் 10 பெயர்களைச் சொல்வதே மிகக் கடினம். அவர்கள் யாரும் சலுகையினால் ஞாபகம் வைத்துக் கொள்ளப்படுபவர்கள் அல்ல. அசாத்திய திறமையினால் மட்டுமே என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே திருவள்ளுவர் என்ன ஜாதி என்று கூட ஆராயப்படுவது ஜாதி என்ற கொடூர அமைப்பின் இறுதி கட்ட சீர்கேடு.
சமுதாயம் ஒன்றுபட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் ஏதாவது ஓர் மகாத்மா ஒரு படியெடுத்து வைக்க முயலும் போதெல்லாம், அதில் பலத்த பின்னடைவு ஏற்பட்டு பல படிகட்டுகள் சறுக்கல் தான் ஏற்படுகின்றன. நாட்டை கோடிக்கணக்கான துண்டாக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று இங்கிருப்பவர்களை, வெளி மாநிலத்திற்கு கொண்டு சென்று விட்டால் கூட, அங்கேயேயும் நாமெல்லாம் இந்தப் பிரிவின் கீழ் வருபவர்கள், அந்தப் பிரிவின் கீழ் வருபவர்கள், அவர்கள் நமக்கு நண்பர்கள், இவர்கள் நமக்கு எதிரிகள் என்று மொழி தெரியாதவனைக் கூட கூட்டிக் கொண்டு கூட்டம் சேர்க்கும் கூட்டமய்யா இது!
இது இங்கேயே நின்று விடுமா அல்லது ஹோட்டல்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சினிமா எனத் தொடருமா?
அந்தப் பாடகி பிராமண வகுப்பைச் சார்ந்தவள், இனிமேல் அவள் 100 பாடல்களில் 5 பாடல்கள் மட்டுமே பாட வேண்டும், மீதமுள்ள பாடல்கள் மற்ற பிரிவைச் சார்ந்த பாடகிக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறுவார்களா? யுவன்சங்கர் ராஜா ஒரு பிரிவைச் சார்ந்தவர். அவர் மட்டும் அதிகமான படங்களுக்கு இசையமைக்கிறார். ஆதலால் இனி அவருக்கு வரும் வாய்ப்புகள் இமானுக்கும், விஜய் ஆண்டனிக்கும் கொடுக்க வேண்டுமா? ரஹ்மானும் அதே போல அவரது படங்களை மற்ற பிரிவினருக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டுமா? அங்கே மட்டும் உங்களது விருப்பமும், கலைஞரின் திறமையைப் பார்க்கும் நீங்கள், ஏன் தனியார் துறைகளிலும், அரசுத் துறைகளிலும் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு பார்க்க கூடாது?
இடஒதுக்கீடு வைத்தா இளையராஜாவும், வைரமுத்துவும், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், யுவன்சங்கர் ராஜாவும், ஹாரிஸ் ஜெயராஜூம், விக்ரமும், விஜயும், ரஹ்மானும் திரையுலகில் சாதனை புரிந்து வருகிறார்கள். அவரவரின் திறமையினால் இங்கே அங்கீகாரம் பெற்று, நிலைத்து வருகிறார்கள். இங்கு சாத்தியாமானது, மற்ற இடங்களில் சாத்தியமில்லாமல் போய் விடுமா? இது வரை நன்றாகத்தானிருக்கிறது. இதனை கெடுத்து விடுவது ஆரம்பித்து வைக்கும் அரசியல் வாதிகள் கையிலும், அதனை உடும்பு போலப் பிடித்துத் தொங்கும் உங்களைப் போன்ற படித்தவர்கள் கையிலும் தான் உள்ளது.
சிலர், 'இட ஒதுக்கீட்டு முறை ஏன் தனியார் நிறுவனங்களுக்கு வரக்கூடாது? அங்கு தானே உயர்ஜாதியினர் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படி செய்தால் தான் அவர்களுக்கு அடி விழும்', என்கின்றனர். இப்படி கூறுவதால், இடஒதுக்கீடு என்ற கருவி இல்லாமல் அவர்களை விஞ்சி நீங்கள் உயரமுடியாது என்பதனை ஒப்புக் கொள்வது போலிருக்கிறது. மேலும் உங்களின் நோக்கம் என்ன? சமுதாயத்தில் கீழே இருப்பவர்கள் மேலே வர வேண்டும் என்பதா? அல்லது உயர்ஜாதியினர் ஒழிய வேண்டும் என்பதா? உங்களின் நோக்கத்தில் தான் குறை இருப்பதாக உணர முடிகிறது. உங்களுடைய முயற்சி கஷ்டப்படும் மற்றவர்களை முன்னேற்ற வேண்டும் என்பதில் இருப்பதாக தோன்றவில்லை; அவன் நன்றாக இருக்கிறானே. இப்படி செய்வதனால் தான், அவன் அழ முடியும். ஆதலால் இதைச் செய்தே முடிக்க வேண்டும் என்ற ஆத்திரம் இருப்பதையும் பார்க்க முடிகிறது. இணைந்து செயலாற்றி சிகரங்களைத் தொடுவதற்குப் பதில், அழிந்தாலும் பரவாயில்லை; தனித்தாற்ற வேண்டும் என்று நினைப்பதில் எவ்வளவு தூரம் நியாயம் இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். எப்போது இது போன்ற பிரிவுகளைத் தாண்டி இணைந்து பணியாற்றப் போகிறோம்?
என்னைத் திட்டி பின்னூட்டம் இடுவதற்கு முன் எனது கருத்தையும் கொஞ்சமாவது சிந்தித்து பாருங்கள் என வேண்டுகிறேன். தமிழ் வலைப்பதிவார்களுக்குள் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டு விட்டதால், இதைப் பற்றி எழுதுவதற்குத் தயக்கம் இருந்தது. இந்தத் தலைப்பில் எழுத வேண்டாம் என்று தான் நேற்று வரை நினைத்திருந்தேன். இந்தப் பதிவினைப் பற்றிய மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். ஆக்கபூர்வமான விவாதத்திற்குத் தயார். ஜாதி என்னும் முகத்திரையை கிழித்து விட்டு, உங்களின் உண்மையான முகத்துடனும், மனத்துடனும் இந்த உலகில் உலா வாருங்கள். உலகம் ஒன்றும் மோசமில்லை. "கீழே இருப்பவர்களை உயர்த்துவதற்கு வழி, மேலே இருப்பவனை கீழிறக்குவதில் இல்லை", என்ற கூற்றை மறுபடியும் கூறி இந்தப் பதிவை முடிக்கிறேன். என்னுடைய வார்த்தை உபயோகத்தினால் யாருடைய மணமும் புண்படும் படியாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.
வாழுங்கள்! ஆனால் மற்றவர்களையும் வாழ விடுங்கள்!.
இந்தப் பதிவிற்கு சிறிது தொடர்புடைய இன்னொரு பதிவு: கெட்ட புத்தியும் பச்சரிசி சாப்பாடும்
வியாழன், ஏப்ரல் 13, 2006
பெங்களூரில் இரண்டு நாட்கள்
"நான் வீட்டுக்கு கிளம்புகிறேன்", என்றார்.
"ஏன்?"
"ஆமா. ராஜ்குமார் செத்துட்டார்"
"பொய் சொல்லாதப்பா"
"உண்மை தான். வேணும்னா செக் செய்து கொள்", என்றார்.
அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எங்கெங்கோ தேடிப் பார்த்தார். ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியாக சிபியில் மட்டும் 'ராஜ்குமார் மரணம்', என்று ஒரு வரியில் செய்தி கிடைத்தது. இதை பார்த்து கொண்டிருந்த கல்கத்தாவைச் சார்ந்த மற்றுமொரு மானேஜர்,
"ராஜ்குமார் இறந்தால் என்ன?"
????
"அதுக்கு ஏன் வீட்டுக்குப் போகணும்", என்று அப்பாவியாக கேட்டார்.
செய்தியை உறுதி செய்வதிலேயே அரை மணி நேரம் சென்றது.
நண்பர் நேராக ஹெ.ஆரிடம் சென்று, "வீட்டுக்குப் போகலாம்ல", என்றார்.
"ஏன்?"
"நியூஸ் தெரியாதா? ராஜ்குமார் செத்துட்டார்"
"அப்படியா? வெரிஃபை செய்துட்டு சொல்லுறேன்", என்றார்.
நமது கல்கத்தா மானேஜரின் அணியில் பணிபுரிந்த தமிழ்ப் பெண் அவரிடம் சென்று,
"அப்ப நான் வீட்டுக்கு கிளம்பலாமா", என்றார்.
"எதுக்கு, இப்பவே போகணும். வொர்க் பெண்டிங் இருக்கே..."
"இல்ல. ராஜ்குமார் இறந்துட்டார். பிரச்சினை வரும். அதான்.. நான் போகட்டுமா?"
"நான் ஒண்ணும் சொல்லமுடியாது. ஹெச். ஆர் தான் சொல்லணும்", என்று கூறினார்.
ஏமாற்றத்துடன் அந்தப் பெண் தனது இருக்கையில் சென்றமர்ந்தார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே செய்தி அனைவருக்கும் பரவி, வதந்திகளும் பரவ ஆரம்பித்து விட்டன.
"அங்க பஸ்ஸை எரிச்சிட்டாங்க... இங்க டிராபிக் blocked", அப்படி இப்படியென்று....
இதனை பார்த்த கல்கத்தா மானேஜர் உடனே எங்கோ வேலை பார்க்கும் தனது மனைவிக்கு போன் செய்து நிலைமையை விளக்கி,
"உடனே வீட்டுக்குப் போயிடு; நானும் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்", என்றார்.
அருகில் அமர்ந்திருந்த கன்னடிகா மேனேஜர், "உங்க வொய்ஃப் மட்டும் பத்திரமா வீட்டுக்குப் போயிடணும்னு எதிர்பார்க்குறீங்க... ஆனா உங்க டீம் மெம்பர் போகக் கூடாதுன்னு சொல்லுறீங்க? எந்த விதத்துல நியாயம்? உங்க டீம் மெம்பர்ஸை பத்திரமா வீட்டுக்கு அனுப்புற கடமை உங்களுக்கு இருக்கு மறந்துடாதீங்க", என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
அவர் அசடு தான் வழிய முடிந்தது.
சிறிது நேரத்தில் மின்னஞ்சல் வந்தது. "அனைவரும் வீட்டிற்கு செல்லுமாறு....நாளை நிலவரத்தைப் பார்த்து விட்டு அலுவலகம் வரவும்", என்றிருந்தது.
மின்னஞ்சல் வந்ததும் தான் தாமதம்; அலுவலகமே வாசலை நோக்கி ஓடியது.
அருகில் தான் வீடு என்பதால் நான் இன்னும் சீட்டில் அமர்ந்திருந்தேன். அருகில் வந்த மேனேஜர், "வீட்டுக்குப் போ", என்று அழைத்து வாசல் வரை கொண்டு சென்று விட்டார். அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பலருக்கு, முன் அனுபவம்(?) இருந்ததால் கார்களை எடுக்காமல், வீட்டிற்கு நடந்து செல்ல ஆரம்பித்தனர்.
வீட்டிற்கு வரும் வழி முழுவதும் ஒரே பதற்றம். கார்கள் குறுக்கும் நெடுக்குமாக ஒழுங்கற்று செல்ல ஆரம்பித்தன. எங்கும் ஒலிப்பான்களின் சத்தம். அனைவருக்கும் தான் முதலில் வீட்டுக்குச் சென்று விட வேண்டும் என்ற அவசரம் முகத்தில் தெரிந்தது.
சரி இரவு சாப்பாடு கோவிந்தா என்று, வீட்டிற்கு வரும் வழியிலேயே சிறிது பழங்களை வாங்கி வீடு வந்து சேர்ந்தேன். ஆனால் இரவில் ஒரு ஹோட்டலில் பார்சல் கிடைத்தது. பழங்களுக்கு அவசியமில்லாமல் போனது.
இப்போதெல்லாம் பெங்களூரில் நடக்கும் பந்த், போராட்டம், மரணம் போன்ற நிகழ்ச்சிகள் எவ்விதமான அதிர்ச்சியையோ, ஏமாற்றத்தையோ தருவதில்லை. ஆனால் பதற்றம் உண்டு. புதிதாக வருபவர்களுக்கு இது ஏமாற்றமாகவும், அதிர்ச்சியாகவும் அமைகிறது.
ஆனால் நான் எதிர்பார்த்ததை விட இம்முறை குறைவான அளவே சேதாரங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன எனக் கருதுகிறேன். ஆனால் இன்னும் நேரம் இருக்கிறது.
இன்று காலையில் சாப்பிடுவதற்கு ஒரு கடையும் திறந்திருக்கவில்லை. இரவு வாங்கி வைத்திருந்த பழங்கள் உதவின. நமது தமிழ்நாடு ஹோட்டலான, நாயுடு மெஸ் கடையின் பின்புறத்திலிருந்து பார்சல் கொடுத்ததால் மேலும் சிறிது நிம்மதியாக சாப்பிட முடிந்தது. அந்தக் கடை மட்டும் இல்லாதிருந்தால், பல பேச்சிலர்கள் இன்று பட்டினி தான்.
எதிர்பார்த்தது போலவே, சில செய்தி சேனல்களைத் தவிர்த்து, அனைத்து சேனல்களும் தடை செய்யப்பட்டன. "தமிழ் சேனல்கள் கட்", என்று சில இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டது தவறு. அனைத்து மொழி சேனல்களுமே தடை செய்யப்பட்டுள்ளன. நேற்றே தடை செய்யப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் காலையில் தான் தடை செய்யப்பட்டன.
இது எதற்கு?, யாரை திருப்திபடுத்துவதற்காக இதெல்லாம்? என்பது யோசிக்க வேண்டியது தான். இன்று அலுவலகம் விடுமுறை என்று ஓரளவிற்கு உறுதியாகத் தெரிந்திருந்தாலும், அலுவலம் புறப்பட்டேன்.
4 கி.மீட்டர்கள் இருக்கும் அலுவலகத்திற்கு.
குறிப்பிடத்தக்க அளவில் வாகனங்கள் ஓடின. பல கால் சென்டர் வாகனங்கள் "ராஜ்குமார்" படத்தை முன்புறமும், பின்புறமும் தாங்கியபடி தனது வேலையை செய்து கொண்டிருந்தன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த ஒரு போராட்டம் கொடுத்த அனுபவத்தினால், வழக்கம் போல இண்டெல் அலுவலகத்திற்கு பெரிய வலை போட்டு, கண்ணாடி கட்டிடத்திற்குப் பாதுகாப்பு கொடுத்திருந்தனர். சிறு போராட்டம், கடையடைப்பு என்றாலே இண்டெல் நிறுவனம் இது போல் செய்வது வழக்கம் தான்.
ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக, இண்டெல் அலுவலகத்தின் இரண்டு வாயிற்கதவுகளிலும், ராஜ்குமார் படங்களை வேறு ஒட்டியிருந்தார்கள். சும்மா பாதுகாப்பிற்குத் தான். மற்ற போராட்டங்களிலிருந்து தப்பிப்பதற்க்காக, மஞ்சள்-சிகப்பு கொடியை, கட்டிடங்களிலும், வாகனங்களிலும் மாட்டி வைத்திருப்பார்கள். பெரிய மருத்துவமனையான மணிப்பாலில் கூட அந்தக் கொடி எப்போதும் இருப்பது வெட்கக்கேடு.
ராஜ்குமார் கடத்தப்பட்ட போது, டையமண்ட் டிஸ்டிரிக்ட் என அழைக்கப்படும் பெங்களூரின் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு, வர்த்தக அலுவலகம் பெரிய பெரிய கற்களைக் கொண்டு தகர்க்கப்பட்டது (200 மீட்டர் நீளமிருக்கும். முழுவதும் கண்ணாடியால் செய்யப்பட்டது). இம்முறை எவ்விதமான பிரச்சினையும் அங்கில்லை. இரண்டு காவல்துறையினர் வேறு அங்கு அமர்ந்திருந்தார்கள்.
ஆனால் நன்கு அடி வாங்கியிருந்தது, கோரமங்களா இன்னர் ரிங் ரோடில் இருந்த வர்த்தக / தனியார் நிறுவங்கள் தான். வரிசையாக கல்லெறிகளை வாங்கியிருந்தன. போன வாரம் திறக்கப்பட்ட வசந்த் & கோ மாதிரியான எலெக்ட்ரானிக் விற்பனை நிறுவனத்தின் கண்ணாடிகள் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து வரிசையாக சில நிறுவனங்களும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.
சிறிது தூரத்திலிருந்த பெரிய சாப்ட்வேர் நிறுவனம் பல கல்லடிகளைப் பட்டிருந்தது. நேற்று பட்ட கல்லடி காரணமோ என்னவோ, காலையில் பெரிய ராஜ்குமார் படத்தை ஒரு மேஜையில் வைத்து, மாலை போட்டு, ஊதுபத்தி கொளுத்தி வைத்திருந்தார்கள். தலையிலடித்துக் கொள்ளத் தோன்றியது. அவர்களின் செயலுக்காக அல்ல. இங்குள்ளவர்களின் நிலைமையைப் பார்த்துத் தான்.
இது போன்ற வன்முறையில் ஈடுபடும் பலர், அங்கே சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதில் கூட அக்கறை காட்ட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அவர்களுக்கு வேண்டியதெல்லாம், ஒரு காரணம். மற்றவர்களைத் தொல்லை செய்வதற்கு, உடைக்கப்பட்ட நிறுவனங்களில் எத்தனை தனிமனிதக் காழ்ப்புணர்ச்சியினால் உடைக்கப்பட்டதோ?. ஒவ்வொரு நாளும் அந்த சாலை வழியாகச் செல்லும் போதெல்லாம், "ஆமா பெரிய கண்ணாடி பில்டிங். எனக்கு ஒரு நாள் நேரம் வரும். அப்ப நான் உடைக்கத் தான் போறேன்", என்று எத்தனை முறை இது போன்ற கெட்ட எண்ணங்களை மனதில் சுமந்து கொண்டு அலைந்தார்களோ? இதோ நேரம் வந்து விட்டது. இவர்களுக்கெல்லாம் யார் மீது கோபம் எனத் தெரியவில்லை. சமூகம் நம்மை பணமில்லாத காரணத்தினால் அலட்சியம் செய்கிறதே என்ற கோபமா? நம்மால் முடியாததை, இன்னொருவன் வைத்து அழகு பார்க்கிறானே என்ற பொறாமையா? ஒருவேளை சில தமிழக அரசியல் தலைவர்களிடம் கேட்டால், அதற்கான காரணம் தெரியவரும்.
தொலைக்காட்சியில் கூட பல நபர்கள் கொடிகளைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே கோஷங்கள் எழுப்பியதையும் பார்க்க முடிந்தது. அழுது கொண்டே பேட்டி கொடுக்கும் நபருக்கு அருகில் சிரித்துக் கொண்டு, கேமராவில் தெரியவேண்டும் என்று முண்டியடித்தவர்களையும், ராஜ்குமாரின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வேனின் கண்ணாடிகளை உடைத்த நபர்களையும், அவரது உடலுக்குப் பாதுக்காப்பாக சென்ற போலீஸ் வாகங்களை உடைத்த நபர்களையும் பார்க்க முடிந்தது. அவர்கள் முயல்வது எல்லாம், எப்படியாவது இதனை ஒரு பெரிய சிக்கலாக்கி விட வேண்டும். இந்த நேரத்தில் தான் காவல்துறையினரிடம், சாதாரண ரவுடி கூட மல்லுக்கு நிற்க முடியும். கடைசியாக ஒரு நபர் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஆரம்பமா அல்லது முடிவா எனத் தெரியவில்லை.
இதை விட கொடுமை, பலர், "இது போல் நிகழ்வது இயல்பு தான்", என்று கருதி இதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறுப்பது. அது அரசுத் தரப்பாக இருக்கட்டும்; பொதுமக்களாக இருக்கட்டும். இன்னும் சிலர், "இது போன்ற விசயங்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இது போன்ற வன்முறைகள் இயல்பு", என்கின்றனர். எது போன்ற விசயங்களுக்கு? 'உங்களது வீட்டை உடைக்கும் போதும், வாகனத்தில் நீங்கள் செல்லும் போது, பெரிய பாறாங்கல்லைத் தூக்கி உங்கள் வாகனம் மீது போடுவதையும் யாரும் கண்டுகொள்ள வேண்டாம்; காவல்துறையினர் காப்பாற்ற முயல வேண்டாம்; அது சாதாரணம் தான்', என்று நீங்கள் எண்ணினால் மற்றவர்களும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை.
இப்போதெல்லாம், இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கவில்லையென்றால் மரணத்திற்கு அர்த்தமே இல்லை என்ற கருத்து பல பெரிய மனிதர்களின் குடும்பத்தில் நிலவுகிறதோ என்ற அச்சமும் மேலோங்குகிறது. அவரது குடும்பத்தார் ஒரு பேச்சுக்குக் கூட "ரசிகர்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்", என்று இது வரை வேண்டுகோள் விடுக்கவில்லை. இதைப் பார்க்கும் போது, அவர்களும் இதைத் தான் விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. ராஜ்குமார் மரணம் நினைவில் இருக்கிறதோ இல்லையோ, இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் அழியாமல் நினைவில் இருக்கும்
என்ன உலகமோ! சீக்கிரம் அழியட்டும் இந்த பூமி! (இருக்கும் நீர், தாவரங்களுக்கு சேதாரம் விளைவிக்காமல்)
(நானும் வீடு சென்று சேர வேண்டும். நேரமாகிறது)