செவ்வாய், ஜூலை 15, 2008

சக்கரகட்டி இசை மதிப்பீடு

நீண்ட நாட்களுக்குப் பிறகு (அதாவது சிவாஜிக்குப் பிறகு), ஏ.ஆர்.ரகுமான் இசையில் தமிழில் ஓர் திரைப்படம். படத்தின் பாடல்கள் சென்ற வாரம் சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இன்னும் இசைத்தட்டு கைக்கு வரவில்லை. பாடல்களை, ஏதோ ஒரு புண்ணியவான், யூடியூப்பில் வெளியிட்டிருந்தார். அதனை நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்தார். அவருக்கு நன்றி. இருவரின் புண்ணியத்திலும் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் விடாமல் கேட்க முடிந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ரகுமானிடமிருந்து வித்தியாசமான ஆல்பம். சிவாஜியின் பாடல்கள் என்னை மிகவும் கவரவில்லை. ஆனால், 'சில்லென்று ஒரு காதல்' படத்தின் பாடல்கள் மிகவும் பிடித்திருந்தன - அவற்றை இன்னும் கேட்டுக்கொண்டிருக்கின்றேன். இந்த ஆல்பத்தில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது. அது என்னவென்று கூறமுடியவில்லை. படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அவற்றில் இரண்டு பாடல்கள், 'மீனாட்சி' என்ற இந்தி படத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. பாடல்களைப் பற்றிய எனது மதிப்பீடு.

1. ஏலே (3 / 5)

பாடியவர்கள்: கிரிஷ், நரேஷ் அய்யர்
பாடலை எழுதியவர்: நா.முத்துக்குமார்

நண்பர்கள் பாடும் பாடல். இப்படத்தில் இரண்டு நண்பர்கள் பாடும் பாடல்கள் உள்ளன. 'டாக்ஸி டாக்ஸி' மற்றுமொரு பாடல்.

'ஏலே
நேரம் வந்திடுச்சு ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவை திறந்து போலே
புதையல் பங்கு போட வா

வாழ்க்கை என்னும் கேமராவில் நாம்
புன்னகை என்னும் புகைப்படம் எடுப்போம்'

என்று தொடங்கி செல்லும் 'ஏலே' என்ற இந்த பாடல் ஒரு சாதாரண பாடல். இப்பாடலில் எதுவே என்னைக் கவரவில்லை என்ற உண்மையைக் கூறியே ஆக வேண்டும். ரங் தே பசந்தியில் இடம் பெற்ற 'ரூபாரூ' பாடலினை இப்பாடல் ஞாபகப்படுத்துவதாலும், அப்பாடலின் இனிமை பாதி கூட இதில் இல்லாத காரணத்தினாலும் இருக்கலாம்.




2. நான் எப்போது பெண்ணானேன் (4 / 5)

பாடியவர்: ரீனா பரத்வாஜ்
பாடலை எழுதியவர்: பா.விஜய்

இப்பாடல் 'மீனாட்சி' படத்தில் இடம் பெற்ற 'ஏ ரிஸ்தா கியா' என்ற பாடலின் தமிழாக்கம். படத்திற்கு முதலில் ஹிந்தி பாடல்களை மட்டுமே பயன்படுத்துவதாக எண்ணம் இருந்ததாவும், அப்போது பதிவு செய்யப்பட்ட இரு பாடல்களில் இது ஒரு பாடல் என்று ரகுமான் விழாவில் தெரிவித்திருந்தார். இன்னொரு பாடல், 'சின்னம்மா சிலுக்கம்மா'.

உண்மையைக் கூற வேண்டுமானால், இது ஒரு அற்புதமான மெலோடி பாடல். மிக அற்புதமான மெல்லிசைப் பாடல். இப்பாடலை பல மாதங்களாக இந்தியில் கேட்டு வருகிறேன். பிடித்தமான பாடல்களில் ஒன்று. அற்புதமான இசை; அற்புதமான குரல். தமிழில் இப்பாடலைக் கெடுத்த பெருமை கவிஞர் பா.விஜய் அவர்களைச் சாரும். இப்படி கூட ஒரு பாடலை எழுத முடியுமா என்பதை அவரிடம் தான் தெரிந்து கொள்ள வேண்டும், என்பது எனது கருத்து. ஏனோ பாடலும், வரிகளும் ஒட்டவில்லை என்பது எனது கருத்து. 'ஜோதா அக்பர்' படத்தின் பாடல்களைக் கூட இவர் தமிழில் சரியாக மொழி பெயர்க்கவில்லை என்பது எனது கருத்து. வைரமுத்து அவர்கள், 'குரு' படத்தின் பாடல்களை மிகவும் அற்புதமாக (வழக்கம் போல்) தமிழில் மொழி பெயர்த்திருந்தார்.




'நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

முதல் புன்னகை பூத்தது அப்போதா
முதல் வார்த்தை பேசிய அப்போதா
அவள் விளக்குகள் ஏற்றிய திருநாளில்
அன்னை தேவதை என்றாய் அப்போதா

என் உறக்கத்தின் நடுவில் சின்ன பயம்'

எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. உங்களுக்குப் பிடிக்கலாம் - நீங்கள் ஹிந்தியில் கேட்டிருக்காவிடில் - பிடித்துப் போக வாய்ப்புகள் அதிகம். ஆனால் இப்பாடலின் இசை மிகவும் சொல்லப்பட வேண்டிய ஒன்று. ரீனா பரத்வாஜூம் மிகவும் அற்புதமாகப் பாடியிருக்கிறார். (ஹிந்தியிலும் இவரே பாடியிருக்கிறார்). ஆரம்பத்தில் 'ஹீம் ஹீம் ஹீம்' என்று இவர் பாடலை ஆரம்பிக்கும் அழகே தனி.

3. சின்னம்மா சிலுக்கம்மா (4 / 5)

பாடியவர்கள்: பென்னி தியோல், சின்மயி
பாடலை எழுதியவர்: பா.விஜய்

இது மீனாட்சி படத்தில் மிகவும் புகழ்பெற்ற பாடல். இந்தியில் சுக்விந்தர் சிங் அற்புதமாக பாடியிருப்பார். மேடைகளில் அவர் இப்பாடலை பாடும் அழகே தனி. தமிழில் ஆண், பெண் இருவரின் குரலும் பரவாயில்லை. சின்மயியின் குரல், ரெய்ஹானாவின் குரலை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் மிகவும் வித்தியாசப்படுத்திப்பாடியிருக்கிறார்.

இப்பாடலின் பீட்டும், இசையும் அற்புதம்.

"சின்னம்மா சிலுக்கம்மா நில்லு நில்லு
சேலம்மா சிலையம்மா சொல்லு சொல்லு

சின்னம்மா சிலுக்கம்மா நில்லு நில்லு
சேலம்மா சிலையம்மா சொல்லு சொல்லு"

என்று (00:30)-ல் ஆரம்பித்து (00:52)-ல்

'அம்மம்மா அழகம்மா
அடி நெஞ்சில் யாரம்மா
விழியம்மா மொழியம்மா
<ஏதோ> எவனம்மா'

என்று மாறும் போதும், 3:05-ல் 'நீ உருகி வந்திடும் தங்கம்' என்று மாறுமிடத்தில் ராகம் அற்புதம்.



அதே போல் முதல் சரண்த்திற்கு முன்பு. 2:13'- 'டிட்டு டிட்டு' என்று ஆரம்பித்து 2:25-ல் டிரம்ஸ்-ஆக மாறும் போது இசை அபாரம். மிகச் சிறந்த பாடல். தமிழில் கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. பாடியவர்களும், பாடலை எழுதியவரும் நன்றாக அவர்களது பணியைச் செய்திருந்தால் இப்பாடல் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

4. மருதாணி (5 / 5)

பாடியவர்கள்:
மதுஸ்ரீ, ஏ.ஆர்.ரகுமான்
பாடலை எழுதியவர்: வாலி

இப்படத்தின் சிறந்த பாடல் இது தான் என்று உறுதியாக கூறுவேன். அற்புதமான மெலோடி - சிறந்த இசை - மதுஸ்ரீ மிகச் சிறப்பாக பாடியிருக்கிறார். பிரிந்த காதலன் (அல்லது காதலுடன் சண்டையிட்டு தன்னையே திட்டிக்கொள்ளும்), நாயகி பாடும் பாடல். இப்பாடல் முழுமையாக அற்புதமான பாடல். இப்பாடலை கேட்ட மாத்திரமே பிடித்து விட்டது.

பாடலின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை 'டிட்டுடு டிட்டுடு' என்று அற்புதமான பீட் தொடர்கிறது - கேட்பதற்கே அற்புதமாக இருக்கிறது. பாடலுக்கு பெரும் பலம் அந்த பீட். அந்த பீட்டைத் தொடர்ந்து குழுவினர் 00:11-ல் 'ஹான்ன்ன்ன் ஹா ஆ ஆ ஆ' என்று ஆரம்பிப்பதே இதமாக இருக்கிறது. அவர்களைத் தொடர்ந்து 'மதுஸ்ரீ' 'மருதாணி விழியில் ஏன்?' என்று ஆரம்பிக்கும் போது காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கிறது.



மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி (இது புரியவில்லை)
கங்கை என்று கானலைக் காட்டும்
கானல்
காதல் என்று கங்கையைக் காட்டும்

வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்

மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி (இது புரியவில்லை)
காதல் மண் மீது சாயாது

நிஜமான காதல் தான்
நிலையானப் பாடல் தான்
அதன் ஓசை என்னாளும் ஓயாது

வாலி மிக அற்புதமாக, பாடலுடன் ஒன்றிப்போகும்படி எழுதியிருக்கிறார். அற்புதம்.

முதல் சரணத்தை ஒட்டி வரும் பியானோ இசையை மற்றுமொரு ரகுமான் பாடலில் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் என்னால் ஞாபகத்திற்கு கொண்டு வரமுடியவில்லை. அதே போல் இரண்டு சரணத்திலும் ஓஹோ தார ரா ரா ரா ரா ரா ரா தா ரீ ரா' (2:48, 4:19) ரகுமான் பாடுவது பாடலுக்கு வளம் சேர்க்கிறது. அற்புதம்.

மொத்தத்தில் இது ஒரு மிகச் சிறந்த பாடல்.


5. டாக்ஸி டாக்ஸி (5 / 5)

பாடியவர்கள்: பென்னி தியோல், பிளாசே, Viviane Chaix
பாடலை எழுதியவர்: வாலி

இது மற்றுமொரு நண்பர்கள் பாடும் பாடல். ஆனால் முதல் பாடலைப் போல் சாதாரணப் பாடல் அல்ல. இப்பாடல் 'முஸ்தாபா முஸ்தா' + 'முக்காலா முக்காப்புலா' பாடலின் கலவை என்றும் கூறலாம். பீட்டில் தூள் பரத்தியிருக்கிறார் ரகுமான். இது ரகுமானுக்கு 'சிக்குபுக்கு', 'முக்காலா' போன்று புகழை இப்பாடல் நிச்சயமாக பெற்றுத்தரும். ஆனால் பாடலின் பீட் மட்டும் எங்கேயோ கேட்டது போல் இருக்கிறது.

'ராசி ராசி
நண்பன் கிடைத்தால்
எல்லாம் ஓசி

டாக்ஸி டாக்ஸி
நண்பா நீ ஒரு
இலவச டாக்ஸி

நீ நீ இல்லையேல்
நான் நான் எங்கு போவது

தோள் சாய தோள் இல்லையேல்
என் வாழ்க்கை
என்னாவது'

'நான் மம மம' என்று ஆரம்பிக்கும் போதே பாடலில் வித்தியாசம் தெரிகிறது. அந்த பிரெஞ்ச் பாடகி பாடலுக்கு வளம் சேர்த்திருக்கிறார் 'நான் மம மம' என்று ஆரம்பத்தில் பாடும் போதும் சரி, நடு நடுவில் 'ஊலா ஊலாலா' (1:40) என்றும், 'ஞன்சமிஞ்சா ஞன்சமிஞ்சா' என்று பாடும் போதும் சரி, மிக இனிமையாக இருக்கிறது. அதே போல் பென்னி தியோலும், பிளாசேயும் நன்றாக பாடியிருக்கிறார்கள். முதல் சரணத்திற்கு முன்பு வரும் இசை (1:50 - 2:15) ஆஹா. அற்புதம். என்ன வாத்தியம் என்று தெரியவில்லை - மிக இனிமை.



மொத்தத்தில் அற்புதமான பாடல்.


6. ஐ மிஸ் யூ டா (3 / 5)

பாடியவர்கள்: சின்மயி
பாடலை எழுதியவர்: நா.முத்துக்குமார்



நாயகனை நினைத்து நாயகி பாடும் பாடல். சின்மயி பாடியிருக்கிறார். இசை, பாடிய விதம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இன்னும் என்னைக் கவரவில்லை. ஆரம்பத்தில் வரும் இசை, 'தாஜ்மஹால் ஓவியக் காதல்' (யுவன் சங்கர் ராஜா) பாடலை ஞாபகப்படுத்துகிறது.

தாராளமாக சி.டியை வாங்கலாம் - வருத்தப்படமாட்டீர்கள்.