சனி, நவம்பர் 17, 2007

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

சென்ற மாதம் ரகுமானின் அழகிய தமிழ் மகன் பாடல்கள் வெளிவந்திருந்தாலும், அதனை மதிப்பீடு செய்ய இயலவில்லை. ஆடியோ சி.டியே பதினைந்து நாட்கள் கழித்து தான் கைக்கு கிடைத்தது. அதன் பிறகு அதனை நானகைந்து முறைகளுக்கு மேல் கேட்க முடியவில்லை. நேரம் கிடைக்கவில்லை என்ற அர்த்தம் இல்லை. கேட்பதற்கு சுவாரசியமாக இல்லை; இரண்டு பாடல்களைத் தவிர. ஆனால் அவ்விரண்டு பாடல்களைத் தவிர, மிக ஆச்சர்யப்படும் விதத்தில், இன்னும் மூன்று பாடல்கள் மிகவும் பிடித்துப் போயின. அவற்றின் பட்டியல். இவை சிறிது பழைய பாடல்களும் கூட. நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்க 99% வாய்ப்பிருக்கிறது.

1. அழகு குட்டி செல்லம்

படம்: சத்தம் போடாதே
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: சங்கர் மகாதேவன்

இயக்குநர் வசந்த்தின் படத்தில் பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆசை, நேருக்கு நேர். ரிதம் முதலிய படங்களைக் குறிப்பிடலாம். சாதாரண தேவாவையே, நல்ல பாடல்கள் இயற்றவைத்தவர் (அவை பிற மொழிப் பாடல்களின் நகல்களாக இருந்தாலுமே). ஆனால் இப்படத்தின் பாடல்களைப் பற்றி பெரிய எதிர்ப்பார்ப்பு எனக்கு எதுவும் இல்லை. காரணம் யுவன் சங்கர் ராஜா. யுவன் இவ்வருடத்தில் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். அவரின் சமீபத்திய படங்களில் ஒரு பாடல் அல்லது இரு பாடல்கள் மட்டுமே சிறப்பாகவும் மற்றவை மிக சாதாரணமாகவும் அமைந்திருந்தது. வேல் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்த படம். ஆதலால் ஓர் தயக்கம் இருந்தது.

'அழகு குட்டி செல்லம்
உனை அள்ளித் தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
என் நெஞ்சம் உடைந்து போனேன்

.....'

என்று இப்பாடல் ஒலிக்க ஆரம்பித்த சில நொடிகளுக்கு எவ்விதமான நல்ல எண்ணமும் ஏற்படவில்லை. ஆனால் 00:36-ல்

அம்மு நீ என் மொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேசத் தெரியலை

எனக்குத் தெரிந்த பாஷை பேச
உனக்குத் தெரியவில்லை

இருந்தும் நமக்குள்
இது என்ன
புதுப் பேச்சு
இதயம் பேச
எதற்கிந்த ஆராய்ச்சி

வரிகளின் ராகமும், அதன் பின்னணியில் மெல்லிய 'கொட்டு' போன்ற இசையும், எனது எண்ணத்தை முழுவதுமாக மாற்றின. அதுவும் சங்கர் மகாதேவன் 'இருந்தும் நமக்குள் இது என்ன', என்று குரலை உயர்த்தி பாடுவதை கேட்பதற்கே மிகவும் இனிமையாக இருக்கிறது.

இது பாதி தான். சரணத்தில், 2:29-ல்

எந்த நாட்டைப்
பிடித்து விட்டாய்
இப்படி ஓர்
அட்டினக்கால் தோரணை
தோரணை

வரிகளில் ராகமும், சங்கர் மகாதேவன் அதனை பாடிய விதமும் அற்புதம். அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த மெல்லிய 'கொட்டுடன்', 'மஞ்சரிஞ்ச மஞ்சரிஞ்ச', என்று தொடர்வது மிக இனிமை.

மொத்தத்தில் யுவன் மற்றும் சங்கருக்கு ஓர் பெரிய சபாஷ். இதே படத்தில் இடம்பெற்றுள்ள, 'ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்', என்ற பாடலும் மிக சிறந்த பாடல். அது இன்னுமொரு 'துள்ளுவதோ இளமை' ('கண் முன்னே'), 7G ரெயின்போ காலனி ('நாம் வயதுக்கு வந்தோம்') வகை பாடல் போல் ஒலித்தாலும், சில இடங்களில் மிக அற்புதமாக வந்துள்ளது. முக்கியமாக அத்னன் சாமியின் குரல், இப்பாடலுக்கு பெரிய பலம். மிக அருமையாகப் பாடியுள்ளார்.

பல நாட்களாக, இப்பாடலில் இடம்பெற்ற 'காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றது' (00:25) வரிகளை என்னையுமறியாமல் உச்சரித்துக்கொண்டிருந்தேன்.


2. புத்தம் புது காத்து தான்


படம்: கண்ணாமூச்சி ஏனடா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், சங்கர் மகாதேவன்

ப்ரியா, தனது 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலமாக பலரையும் கவர்ந்தவர். அது மட்டுமல்லாமல், அப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலம். அவரது இசை ரசனையை, அப்படத்தின் பாடல்கள் மூலம் அறிய முடிந்தது. அப்படத்தின், 'மேற்கே மேற்கே', பாடல் எனக்கு எப்போதும் பிடித்த பாடல்களில் ஒன்று. எப்போது கேட்க வாய்ப்பு கிடைத்தாலும், 'Forward', செய்யாமல் கேட்பேன்.

அதே ப்ரியா + யுவன் கூட்டணி. அதன் காரணமாக, 'கண்ணாமூச்சி ஏனடா', படத்தின் பாடல்களை 'வேல்', போல் இருக்கும் என்று என்னால் கருத முடியவில்லை. முதல் பாடலில் இருந்து அனைத்துப் பாடல்களும் என்னைக் கவர்ந்தது. யுவனின் ஒரு பாடல், இரு பாடல் சூத்திரத்தை இப்படம், நீண்ட நாட்களுக்குப் பிறகு உடைத்துள்ளது. இப்படத்தில் மூன்று பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவற்றில் மிக மிகப் பிடித்த பாடல், 'புத்தம் புது காத்து தான்' பாடல். ஏன், இந்தப் பட்டியலில் எனக்கு மிகவும் பிடித்த பாடலே இது தான்.

என்னவொரு அற்புதமாக பாடல். பாடல் முழுவதுமே.

'ஹே ஹே', என்று ஒலிக்கும் ஆரம்பம் முதலே. இது தான், அழகு; அது தான் அழகு என்று சொல்ல முடியாது. பாடல் முழுவதுமே இனிமை. சங்கர் மகாதேவனும், விஜய் ஜேசுதாஸ் இருவருமே அற்புதமாக பாடியிருக்கிறார்கள்.

புத்தம் புது காத்து தான்
என்னை வாவான்னு அழைக்கிறதே
ஒத்து ஊதும் நெல்லு தான்
அட ஆமான்னு சிரிக்குறதே...

என்று ஆரம்ப வரிகளிலேயே ராகம் அழகு.

அதனைத் தொடர்ந்து, 0:27-ல் விஜய் பாடியுள்ள இவ்வரிகள் தான் என்னை மிக மிகக் கவர்ந்தவை.

தென்னம் இளம் நீரால்
என் வாயெல்லாம் ஈரம்
எட்டு வச்சு எட்டு வச்சு
தேரோடும் ஊராகும்

அற்புதம்! மிகவும் உணச்சிவயப்படச் செய்த வரிகளா?. என்ன சொல்வது? நல்ல இசை கேட்ட ஆனந்தப் பெருக்கு என்பார்களே. அது! யுவனுக்கு நன்றி.

இது போதாதென்று, அதனைத் தொடர்ந்து, சங்கர் மகாதேவன் தன் பங்கிற்கு,

சாமி வரும் தேரிலே
சந்தனங்கள் மார்பிலே
ஹே
சாற்றுகிற போதிலே
இங்கு யாருக்கும் யாரோடும்
எப்போதும் பகையில்லையே
ஹே
புத்தம் புது....

நீண்ட நாட்களுக்குப் பிறகு, பல்லவி முழுவதுமே சிறப்பாக அமைந்த அற்புதமான பாடலை கேட்கிறேன். யுவனுக்கு பாராட்டுக்கள். சென்ற பதிவில், சங்கர் மகாதேவனை, யாரும் சரியாக பயன்படுத்துவதில்லை என்று குறைபட்டிருந்தேன். அதைப் போக்கும் விதமாக, சென்ற பாடல், இந்த பாடல், மற்றும் அடுத்த பாடல் என மூன்று அற்புதமான பாடல்கள் சங்கருக்கு கிடைத்திருக்கிறது. அதுவும் யுவனிடமிருந்து. 2:27-ல் ஒலிக்கும் இசை, 'அறிந்தும் அறியாமலும்', படத்தின் 'ஏலே ஏலே', பாடலின் நடுவில் வரும் இசையை ஒத்திருக்கிறது.

இப்பாடலை எத்தனை முறை கேட்டிருக்கிறேன என்ற கணக்கே இல்லை.

3. மேகம் மேகம்

படம்: கண்ணாமூச்சி ஏனடா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிச்சரண், சுவேதா

இப்பாடலும் கண்ணாமூச்சி ஏனடா படத்திலிருந்து தான். பொதுவாக, Shuffle-ல் வைத்து பாடல்கள் கேட்கும் வழக்கம் எனக்கிருந்தாலும், இப்படத்தின் பாடல்கள் ஒன்று வந்தாலும், இந்தப் படத்தில் இம்மூன்று பாடல்களை முழுவதுமாக கேட்டு விட்டு தான் அடுத்த பாடலுக்குத் தாவுகிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு, இப்படி ஒரே படத்தில் மூன்று, நான்கு பாடல்கள் பிடித்திருக்கிறது.

பாடலின் ஆரம்பம், ஏதோ ஓர் ஹிந்தி பாடலினைப் போல் தான் ஒலிக்கிறது. ஆனால் அதே இசை 00:11-ல் மிக அற்புதமாக மாறுகிறது. சுவேதா மிக அருமையாக பாடியிருக்கிறார். கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கிறது. முதலாம் சரணத்தில் பாட ஆரம்பித்து, சரணம் முழுவதுமே இவரே பாடுவதற்கு கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இவரது குரல், சுஜாதாவின் குரலை ஞாபகப்படுத்துகிறது.

பாதையின் ஓரத்தில் நடந்து
நானும் போகையில்
முகத்தை காட்ட மறுத்திடும்
ஒற்றைக் குயிலும் கூவுதே
காலையில் எழுந்ததும்
ஓடிச்சென்று பார்க்கிறேன்
நேற்று பார்த்த அணில்களின்
ஆட்டம் இனறும் தொடருதே
முதன் முதலில் வாழ்வில் தோன்றும்
வண்ணக்குழப்பம் வானவில் தானா
நதிகளில் வாழ்ந்தே பழகி
கடலைக் கண்டால் தாவிடும் மீனா
போதும் போதும் என்று உள்ளம்
எச்சரிக்கை செய்யும் போதும்
வேண்டும் வேண்டும் என்று கேட்கும்
மனதின் உள்ளே இன்னோர் உள்ளம்

சரணம் முழுவதும் வரும் ராகமும், சுவேதாவின் குரலும் மிக இனிமை. அதே போல், சுவேதாவின் குரலில், பல்லவி (2:42; 4:16) இன்னும் இதமாக இருக்கிறது. 'கூவுதே', என்று உச்சரிக்கும் இடமும், 'சென்று பார்க்கிறேன்', வார்த்தைகள் புன்சிரிப்புடன் உச்சரிப்பதும், 'வானவில் தானா', வரிகளை உச்சரிக்கும் இடமும், 'போதும் போதும்', வரிகளை உச்சரிக்கும் இடமும் இனிமையோ இனிமை.

முதலாம சரணத்திற்கு முன்பு வரும் (1:28) இசையும், இரண்டாம் சரணத்திற்கு முன்பு வரும் கிடார் இசையும் அருமை.

4:38-ல் சுவேதாவின் குரலுடன், குழுவினரின் குரலை சேர்த்து, 'நெஞ்சில் ராட்டினம், எனைச் சுற்றித்தான் தூக்க', ஒலிக்க வைத்திருப்பது, மிக அழகு. அற்புதமான பாடல்.

4. சஞ்சாரம் செய்யும் கண்கள்

படம்: கண்ணாமூச்சி ஏனடா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், மதுஸ்ரீ

இன்னுமொரு நல்ல பாடல்; இப்படத்திலிருந்து. இப்பாடலில் மிக அழகானது என்று இரண்டு விசயங்களைக் குறிப்பிடுவேன்.

1. முதலாம் சரணத்திற்கு முன்பு, 1:03 முதல் 1:24 வரை ஒலிக்கும், வயலினிசை. இனிமையோ இனிமை. யுவனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சிறப்பான வயலினிசைகள் அமைகின்றன.

2. மதுஸ்ரீயின் குரல். எனக்கு மதுஸ்ரீயின் குரல், சில பாடல்களில் முற்றிலும் பிடிக்கவில்லை. அவை அனைத்துமே ரகுமானுக்கு பாடியவை. மயிலிறகே, வாஜி வாஜி பாடல்கள் உதாரணம். ஆனால் அவர் பிற பாடகர்களுக்குப் பாடிய பாடல்கள் அனைத்துமே அற்புதமானவை. அவரது குரல், அப்பாடல்களுக்கு வளம் சேர்த்தவை. உதாரணம். ஜி படத்தில் இடம் பெற்ற 'டிங் டாங் கோயில்' பாடல், 'பீமா' படத்தில் இடம் பெற்ற 'ரகசிய கனவுகள்', பாடல். 'ரகசிய கனவுகள்', பாடலில் அவரது குரல் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அதுவும், 3:52-ல் வரும்

'எனது இரவினில் கசிகிற
நிலவொளி நீயே
படர்வாயே

நெருங்குவதாலே
நொறிங்கி விடாது
இருபது வருடம்'

இடத்தில் அவரது குரல், வாவ்! அதே போல், இப்பாடலுக்கும் இவரது குரல் வளம் சேர்த்துள்ளது. மற்ற இரு பாடல்களை போலவே, இப்பாடலிலும் யுவனின் இசை அற்புதம். சில இடங்களில் ராகம் மிக அருமை. 1:55-ல் வரும் இவ்வரிகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

'நதிவோடிட நீ அங்கே
நான் இங்கே என
நின்று நின்று விட

படகாகிடும் பார்வைகள்
ஒன்றே சேர்க்காதோ?

5. கேளாமல் கையிலே

படம்: அழகிய தமிழ் மகன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: சைந்தவி, ஸ்ரீராம் பார்த்தசாரதி

இப்படத்தின் பாடல்கள் மேல் ஆரம்பத்திலிருந்தே எவ்விதமான எதிர்பார்ப்புமில்லை எனக்கு. காரணம் விஜய் படம் என்பதால். அதனை உறுதி செய்வது போல், 'மதுரைக்குப் போகாதடி', 'வலையப்பட்டி தவிலே', 'மர்லின் மன்றோ', பாடல்களும் அமைந்தன. விதிவிலக்காக, 'எல்லா புகழும்', பாடலும், 'கேளாமலே கையிலே', பாடலும் அமைந்துள்ளன. ஆனால் இப்பாடல் தான் படத்தின் ஒரே சிறந்த பாடல்.

சில இடங்களில் ராகமும், வரிகளும் ஒத்திசைக்கவில்லை. உதாரணத்திற்கு, 3:59-ல்

'பார்வை ஒன்றால் உனை அள்ளி
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்
அதில் நிரந்தமாய நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்'

குறிப்பிடலாம். கேட்பதற்கு இனிமையாக இல்லை.

ஆனால், சில இடங்களில், அது மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

'கேளாமல் கையிலே', என்று சைந்தவி பாடும் அனைத்து இடங்களுமே இனிமையாக இருக்கின்றன. ஆரம்பத்தில் அவர் 'கேளாமல்', என்று பாடியபிறகு, வரும் வயலின் இசையும், அதனைத் தொடர்ந்து, 'கேட்டு ரசித்த பாடலொன்றை', என்று மீண்டும் பாடுவதும் நன்று.

அதே, 'கேளாமல்'-ஐ, 1:42-ல் சிறிது வித்தியாசப்படுத்தி பாடுவதும், 3:25-3:51 வரை குழுவினருடன் இணைந்து பாடுவதும் மிக மிக அருமை. அற்புதம்!

அதே போல்,

'மேற்கு திசையை நோக்கி நடந்தால்
இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா' ,என்ற இடத்தில் ராகம் மிகவும் அற்புதம்.

இப்படத்தின் பாடல்கள் மீது எனக்கு எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லையென்றாலுமே, ஒரு சில பாடல்கள் இந்த அளவிற்கு மோசமாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவில்லை. அதிலும், மர்லின் மன்றோ பாடலில் வரும் பெண் குரலும், அதன் ராகமும் சுத்தம்!

ஹே சாட்டர்டே நைட்
பார்ட்டிக்கு போகலாம்
வாறியா?

ஆண்டவா? என்ன குரல் இது; அது பாடப்பட்ட விதம்! சில யுவன் சங்கர் பாடல்களில் (செல்வராகவன் படங்களில்) வரும் பெண் குரல் போல் ஒலிக்கிறது. ரகுமான் சார்! யுவன் ('கற்றது தமிழ்', 'கண்ணாமூச்சி ஏனடா', 'சத்தம் போடாதே'), ஒரு பக்கம் அடிப் பின்னியெடுத்துக் கொண்டிருக்கும் போது, ரகுமான் இது போன்ற பாடல்கள் தருவது மிகவும் வருத்தம்.