சனி, நவம்பர் 04, 2006

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

கடந்த நான்கு மாதங்களில் மிகவும் ரசித்துக் கேட்ட பாடல்களின் பட்டியல். வலைப்பதிவில் எழுதி இரண்டு மாதங்களாகி விட்டன. இரண்டு மூன்று பதிவுகள் எழுதி வைத்தும், நேரமின்மையால் இறுதி வடிவம் கொடுக்க முடியவில்லை.

1. உன் பார்வையில் பைத்தியமானேன்

படம்: உனக்கும் எனக்கும்
பாடியவர்கள்: கார்த்திக், சுமங்கலி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

வழக்கம் போல, தேவி ஸ்ரீ பிரசாத், தெலுங்கில் வெற்றி பெற்ற தனது படத்தின் பாடல்களை அப்படியே தமிழிலும் கொடுத்துள்ளார். ஆனால் இம்முறை அதே படத்தின் பாடல்கள். தெலுங்கை விட, தமிழில் படம் நன்றாக அமைந்துள்ளது என்பது எனது கருத்து. தெலுங்கில் சந்தானம் போல ஒரு பாத்திரம் அமையாதது ஒரு சிறிய குறை. திரிஷாவின் பாத்திரமும் தமிழ் பதிப்பில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்பாடலின் ஆரம்பத்தில், கிடாருக்கு முன்பு வரும் இசை (என்ன கருவி என்று தெரியவில்லை) அற்புதம். மேலும் (2:03 - 2:08) & (3:50 - 3:55) இடத்தில் வரும் குழுவினரின் ஹம்மிங் மிக இனிமை.

கார்த்திக், சுமங்கலி இருவருமே சிறப்பாக பாடியிருக்கிறார்கள். சன் மியூசிக்கில் எப்பொழுதுமே 'சம்திங் சம்திங்' பாடலும், 'பூக்களுக்குள் கத்தி சண்டை' பாடல்களை மட்டுமே ஒளிபரப்புவது ஏனோ? மிக அரிதாகவே இப்பாடல் ஒளிபரப்பபடுகிறது (அல்லது நேயர்களால் விரும்பி கேட்கப்படுகிறது).

2. இன்னிசை அளபெடை

படம்: வரலாறு
பாடியவர்கள்: நரேஷ் அய்யர், சைந்தவி, (மஹதி)
இசை: ஏ.ஆர்.ரகுமான்

வரலாறு படத்தில் இடம் பெற்ற 'இளமை' பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஆனால் சமீபத்தில் திரைப்படம் பார்த்த பிறகு இந்த பாடலை மீண்டும் ஒரு நாள் கேட்டுக் கொண்டிருந்தேன். பாடலின் இடையில், நரேஷ்

'எழுவாய்;
வருவாய்;
திருவாய்;
தருவாய்'

என்று முதல் முறை பாடிய பிறகு, இரண்டாம் முறை அந்த நான்கு வரிகளையும் மீண்டும் பாட ஆரம்பிப்பார். அப்போது ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும், பாடகி சைந்தவி (மஹதியின் குரல் போலவே எனக்கு தோன்றுகிறது) 'ம் ம் ஹீம் ஹீம்', என்று பாடி , நான்காவது வரியின் முடிவில், 'ஆ ...........' என்று முடித்து

'சொல்லாய் இருந்தேன்
இசையாய் வந்தாய்
கல்லாய் இருந்தேன்
உளியாய் வந்தாய்
முகிலாய் இருந்தேன்
மழையாய் செய்தாய்'

என்று பாடுவது அருமை.



குழுவினரின் குரலும் பாடலின் தரத்தை வெகுவாக உயர்த்தியிருக்கிறது. படத்தின் இரண்டாம் பகுதியில் அஜீத் மிக அருமையாக செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருக்கு கிடைத்த வெற்றி.

3. வெண்ணிலா வெண்ணிலா

படம்: டான் சேரா
பாடியவர்கள்: தெரியவில்லை
இசை: தெரியவில்லை

எனக்குப் பிடித்த இந்த பாடல்கள் பட்டியலில், என்னிடம் இல்லாத பாடல் இது. கடந்த சில மாதங்களாக தமிழகம், மற்றும் பெங்களூரில் பல இசைத்தட்டு விற்பனையகங்களில் இந்தத் திரைப்படத்தின் இசைத்தட்டு இருக்கிறதா என்று கேட்டு விட்டேன். எங்குமே இல்லை என்று தான் பதில் வந்தது. பலர் இத்திரைப்படத்தை பற்றி அறிந்திருக்கவே இல்லை. இந்த பாடலை நான் 'சன் மியூசிக்'-ல் தான் சில முறை கேட்டிருக்கிறேன். பாடலின் ஆரம்பத்தில், பச்சை பசேலென்று இருக்கும் மலைகளை மேகக் கூட்டங்கள் தழுவிச் செல்லும் போது, பின்னணியில் ஒரு வயலின் இசை ஒலிக்கப்பெறும். அற்புதம். படத்திற்கு இசையமைத்தது யாரென்று தெரியவில்லை.

எனக்குப் பிடித்த மற்றொரு வயலின் இசைத் தொகுப்பும் இன்று வரை கிடைக்கவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பாக தற்செயலாக 'Blink' என்றொரு ஆங்கில படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படத்தின் கதாநாயகி பார்வையில்லாத வயலின் கலைஞர். அப்படத்தில் இரண்டு, மூன்று இடங்களில் இடம்பெற்ற குறிப்பிட்ட வயலின் இசை என்னை வெகுவாக கவர்ந்தது. இது வரை எவ்வளவோ முயன்றும், அப்படத்தின் OST-யையோ, DVD-யையோ வாங்க முடியவில்லை. எங்கு கேட்டாலும், Blink-182 இசைக்குழுவினரின் பாடல்களையே எடுத்துத் தருகின்றனர்.

4. வல்லவா எனை வெல்ல வா

படம்: வல்லவன்
பாடியவர்: சுனிதா சாரதி
இசை: யுவன் சங்கர் ராஜா

இந்தத் திரைப்படம் எனக்கு சிறிதும் பிடிக்கவில்லை. ஆனால் ஓரளவிற்கு ஓடிக்கொண்டிருப்பதாக கேள்வி. எவ்வளவு தூரம் உண்மை எனத் தெரியவில்லை. சிம்பு அவரின் தந்தையை விட அதிகமாக பேசுகிறார்; சிம்புவின் வாரிசுகள் எப்படியிருக்குமோ என்று நினைக்கும் போதே சிறிது அச்சமாக இருக்கிறது.

சுனிதா சாரதியின் குரல் இந்த பாடலுக்கு சிறப்பு.

'பாதிக் கண்கள் மூடியும்
பார்வை உன்னைத் தேடுதே

உன்னை எண்ணி எண்ணியே
உள்ளமும் வாடுதே',

என்ற இடத்தில் ராகம் அழகு.

முன்பெல்லாம், மாடர்ன் கதாநாயகி கதாபாத்திரங்களுக்கு 'சந்திரலேகா' புகழ் அனுபமா பாடி வந்தார். தற்போது பலர் இருக்கிறார்கள். அனுபமாவின் அலைவரிசையில் பாடக்கூடியவர்களில் சுனிதா சாரதியும் ஒருவர். பல மாதங்களாக பாடாமல் இருந்த அனுபமா சமீபத்தில் கூட இரு பாடல்களை பாடியுள்ளார். அவை, கஜினியில் இடம் பெற்ற 'ரஹத்துல்லா ரஹத்துல்லா' பாடலும், 'திமிரு' படத்தில் 'தித்திக்கிற வயசு, பத்திக்கிற மனசு', பாடலும் தான். அனுபமாவின் 'ஆங்கில வாடை' கலந்த உச்சரிப்பின் காரணமாக, ரகுமான் அவரை 'இங்கிலீஸ் ஈஸ்வரி' என்று தான் அழைப்பாராம். அதே போல் 'ராம்' படத்தில் இடம் பெற்ற 'பூம் பூம்', பாடலை பாடிய ஜோஸ்னாவும், 'இதயத் திருடன்' படத்தில் இடம் பெற்ற 'அக்டோபர் காற்று' பாடலைப் பாடிய மாதங்கியும் இவர்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறார்கள். அதாவது 'இங்கிலீஸ் ஈஸ்வரிகள்'.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'லூசுப் பெண்ணே' பாடலும் ஓரளவிற்கு நன்றாக வந்திருக்கிறது. ஆனால் அந்த பாடலின் ஆரம்பத்தில் (0:43 - 1:01) வரும் கிடார் இசை, குஷி படத்தில் விஜய்யும், ஜோதிகாவும் சந்திக்குமிடங்களில் வரும் பின்னணி இசையை ஒத்துள்ளது. இந்தப் பாடல் கூட குஷி படத்தில் இடம் பெற்ற 'கட்டிப்புடி கட்டிப்புடி' பாடல் போலவே ஒளிப்பதிவு செய்ய்ப்பட்டிருக்கிறது.

5. பூவின் மடியில்

படம்: பை-டு
பாடியவர்: சாதனா சர்கம்
இசை: விஜய் ஆண்டனி

இந்தப் பாடலைப் பற்றி ஏற்கனவே எனது பதிவில் எழுதியிருந்தேன். அதனைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

6. உருகுதே மருகுதே

படம்: வெயில்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஸல், சங்கர் மகாதேவன்
இசை: ஜி. வி. பிரகாஷ்

இந்த படத்தின் பாடல்கள் வந்த புதிதில் சில பாடல்களை கேட்டு விட்டு, மறந்து விட்டேன். சமீபத்தில் கே.எல் ரேடியோவில் இந்தப் பாடலை கேட்டேன். பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'வெயில்' என்று கூறிய போது எனக்கு ஆச்சர்யம். கடந்த ஒரு மாதமாக, இப்பாடல் நம்மிடமிருந்தும் இப்படியொரு அருமையான பாடலை எப்படி கவனிக்காமல் விட்டோம் என்று வருத்தமாக இருந்தது.

மிக மிக அருமையான பாடல். ஸ்ரேயா கோஸலின் குரல் அற்புதம்.

'உருகுதே மருகுதே
ஒரு பார்வையாலே

உலகமே சுழலுதே
உன்னை பார்த்ததாலே',

என்று பாடலின் ஆரம்பத்திலேயே உருகியிருக்கிறார்.

'தங்கம் உருகுதே
அங்கம் கரையுதே

வெட்கம் உடையுதே
முத்தம் தொடருதே'

என்ற இடத்தில் ராகமும், ஸ்ரேயா கோஸலின் குரலும் அற்புதம். அதே போல் பாடல் முடியும் தருவாயில் மீண்டும் ஸ்ரேயா கோஸல் மீண்டும் 'உருகுதே மருகுதே' என்று ஆரம்பிப்பார் என்று நான் ஆவலுடன் காத்திருந்த போது, சங்கர் மகாதேவன் 'உருகுதே மருகுதே', (4:45) என்று சுருதியை உயர்த்தி பாடி ஏமாற்றம் கொடுத்தார். ஸ்ரேயா கோஸலே பாடியிருக்கலாமே என்று நான் நினைத்த மறுகணமே ஸ்ரேயா 'ஒரு பார்வையாலே' என்று பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதனை விட அவ்விடம் சிறப்பாக ஒலித்திருக்க முடியாது. இரண்டும் இணைத்த போது, ஸ்ரேயாவின் குரல் இன்னும் சிறிது மயக்கம் கொடுக்கிறது. ஆனால் "ஒலகமே" என்று அவர் உச்சரிக்குமிடம் தான் நெருடலாக இருக்கிறது.

இந்தப் பாடல் எனக்கு மேலும் இரண்டு பாடல்களை ஞாபகப்படுத்துகிறது.

1. முதல்வன் படத்தில் இடம் பெற்ற குறுக்கு சிறுத்தவளே பாடல். இந்த பாடலை ஹரிஹரண் பாடியிருந்தால், இரு பாடல்களுக்குமுள்ள வித்தியாசம் இன்னும் குறைந்திருக்கும்.

2. தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு வந்த 'ஜெய்ராம்' ('சின்ன நெஞ்சிலே' என்ற அற்புதமான பாடல் இடம் பெற்ற படம்) என்ற படத்தில் வரும் 'வானும் உண்டு, வையம் உண்டு' என்ற பாடலை சிறிது ஒத்துள்ளது. அந்த பாடல் என்னிடம் இல்லாத காரணத்தால் என்னால் சரியாக ஒப்பிட முடியவில்லை.

திரையுலகிற்கு இப்படத்தில் மூலம் அறிமுகமாகும் ஜி.வி.பிரகாஷ், அனைத்து பாடல்களில் இல்லாவிட்டாலும்,. இந்தப் பாடலில் அவரது மாமாவின் தரத்திற்கு நெருங்கி வந்திருக்கிறார். அதற்கு அவருக்கு பாராட்டுக்கள். அதே போல் சிறந்த பாடகியான ஸ்ரேயா கோஸலுக்கு, ஓரளவிற்கு, 'முன்பே வா' பாடலைத் தவிர சிறப்பான பாடல் ரகுமான் பட்டறையிலிருந்து அமையாத குறையை ஜி.வி.பிரகாஷ் நீக்கிவிட்டார்.

7.நியூயார்க் நகரம்

படம்: சில்லுன்னு ஒரு காதல்
பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமானுக்கே பெரிய ஏமாற்றமாக அமைந்த படமாக இந்தத் திரைப்படம் இருந்திருக்கும் என நினைக்கிறேன். எதிர்பார்த்ததில் பாதியை கூட இந்தத் திரைப்படம் நிறைவு செய்யாமல் சென்று விட்டது. நடிகர் சூர்யா கூட, விஜய் தொலைகாட்சியில், படம் வெளியாவதற்கு முன்பு ரகுமான், வாலி, டைரக்டர் கிருஷ்ணாவுடன் கலந்து கொண்டு உரையாடிய நிகழ்ச்சியில் இவ்வாறாக கூறினார்.

'படத்துல ரகுமான் சார் தான் ரொம்ப ஈடுபாட்டோட உழைச்சிருக்கார். பூஜை முடிஞ்சதுமே, மூணு பாட்டை ஒலிப்பதிவு செஞ்சிட்டு, 'எப்ப சூட்டிங் கிளம்புறீங்க? எப்ப ஆரம்பிக்கிறீங்க' அப்படின்னு விரட்டிட்டே இருந்தார். இந்தப் படத்துக்கு உழைச்சது மாதிரி எந்த படத்திற்குமே ரகுமான் சார் இந்த அளவிற்கு உழைச்சதில்லை அப்படின்னு உங்களோட ஆஃபிஸ்லே உள்ளவங்க கூட சொன்னாங்க. அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு நீங்க கொடுத்த பாடலை எப்படி ஒளிப்பதிவில் ஈடுகட்டப் போறோம் அப்படின்ற பயத்தோட தான் ஒவ்வொரு பாடலையும் எடுத்தோம். முக்கியமாக நியூயார்க் நகரம் பாடல். முதன் முறையா ரகுமான் சாரே, "நானே இந்த பாடலை பாடுறேன்னு சொன்னார்", எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். அதனால தான் ஒவ்வொரு ஷாட்டையும் கஷ்டப்பட்டு எடுத்திருக்கோம்', என்றார்.

ஆனால் எனக்குப் படம் பிடித்திருந்தது. இந்த வருடத்தின் சிறந்த பாடல் என்று நிச்சயமாக இதனை தான் குறிப்பிடுவேன். ஆனால் வசூலிலும், விற்பனையிலும் சாதனை படைத்த திரைப்படம் (பாடல்கள்) 'வேட்டையாடு விளையாடு' என்று கேள்வி. படத்தின்
தோல்வியால் இந்த சிறந்த பாடல், பலரது கவனத்திற்கு வராமலும், அதற்குரிய மதிப்பினையும் பெறாமல் போனது வருத்தமே.

இந்தப் பாடலின் இறுதியில் (5:22 - 5:53) ரகுமான், 'ஹோ ஹோ ஹோ ஹொ ஹோ' என்று பாடுவது வித்தியாசமாக இருக்கும். சமீப கால பாடல்களில், ரகுமான் இசையமத்து பாடிய மூன்று திரைப்படங்களிலும் இதே போல் அமைந்துள்ளது சிறப்பம்சம்.

முதல் பாடல், 'அன்பே ஆருயிரே' படத்தில் இடம் பெற்ற 'ஆறரை கோடி பேர்களில் ஒருவன்' பாடல். பாடலின் ஆரம்பத்தில் 'ஆஹ்ன்ன்ன்ன்' (0:01 - 0:10) என்று ஆரம்பிப்பார். மிகவும் அருமையாக இருக்கும். இந்த பாடலின் பீட், ரகுமானின் குரலுக்காக இப்போதும் விரும்பி கேட்கும் பாடல்.

இரண்டாவது பாடல், 'வரலாறு' படத்தில் இடம் பெற்ற 'தீயில் விழுந்த தேனா' (1:46 - 1:53, 5:09-5:16) பாடலிலும் 'ஹோ' என்று சுருதியை உயர்த்தி பாடியிருந்தார். மூன்றாவதாக இந்த பாடல். நீங்கள் கவனித்ததுண்டா?

8. ஸ்ரீராம சோவித்திரி ஜடாயு வேதா

இசை தொகுப்பு: Sacred Chants Volume 3
பாடியவர்கள்: உமா மோகன், காயத்திரி தேவி
இசை: தகவல் தற்சமயம் இல்லை

ஒரு நாள் லேண்ட் மார்க்கில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த போது, இந்த இனிமையான பாடல் அங்கு ஒலிபரப்பபட்டது. கேட்ட மறு நிமிடமே மிகவும் பிடித்து விட்டது. என்ன ஆல்பம் என்று கேட்டதற்கு இந்த சி.டியை எடுத்து நீட்டினார்கள். அது முதல், பல நாட்கள் இந்த இசைத்தொகுப்பில் இந்த பாடலை மட்டும் எத்தனை முறை கேட்டிருப்பேன் என எனக்கே தெரியாது. இந்த பாடல் இசைத்தட்டில் மூன்றாவதாக இடம் பெற்றிருந்தது. சமஸ்கிருதத்தில் அமைந்த பாடலென்பதால், பாடல் தலைப்பில் எழுத்துப் பிழையிருக்க வாய்ப்புள்ளது. சமஸ்கிருத மந்திரங்கள் (அல்லது வார்த்தைகள்) அடங்கிய பாடல்கள் என்றாலும் கேட்பதற்கு மிக இனிமையாகவும், இருக்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு சரணம் முடியுமிடத்தில் 'ஸ்ரீவைத்திய நாதாயா நம்சிவாயா' என்று பாடுமிடம் அற்புதம். இது Sacred Chants தொகுப்பு மூன்று என்று அறிகிறேன். ஆதலால், முதல் இரு தொகுப்புகளையும் பெறுவதற்கு முயற்சித்து வருகிறேன். எட்டாவது பாடலாக இடம்பெற்றிருந்த 'சர்வேஷாம்' பாடலும் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று.

ஸ்ருசல்