செவ்வாய், நவம்பர் 11, 2008

சமீபத்தில் ரசித்த பாடல்கள்

கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் மிகவும் ரசித்த பாடல்களின் பட்டியல். இவற்றுள் சென்ற வருடம் வெளியான படத்தின் பாடலும் அடக்கம். அவற்றின் பட்டியல் இதோ.

1. கண்கள் இரண்டால்

திரைப்படம்: சுப்ரமணியபுரம்
பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்

தமிழகத்தில் இப்பாடலை முணுமுணுக்காதோர் யாரும் உண்டோ இப்போது?. சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது இப்பாடலை எனது வீட்டில் விரும்பி பார்த்துக்கொண்டிருந்தனர். என்னடா பாடல் இது, கேட்கவே இல்லையே என்று பார்த்த போது தான் சுப்ரமணியபுரம் என்று தெரிய வந்தது. இரண்டு,மூன்று தடவை பார்த்த பிறகு, மனதிற்குள் ஒட்டிக்கொண்டது. அடுத்த சில நாட்களுக்கு இப்பாடலை கண்ட நேரங்களிலும் பாடிக் கொண்டிருந்தேன். வீட்டில், 'ஆரம்பிச்சுட்டாண்டா' என்று கேட்க ஆரம்பித்து விட்டனர். அது முதல் இப்பாடல் எனது பாடலாகி விட்டது. மிக அற்புதமான பாடல் - படமாக்கிய விதமும் ஒரு முக்கிய காரணம் என்று கூறுவேன். ஜேம்ஸ் வசந்தனுக்குள் இப்படி ஒரு திறமையா என்று வியக்கும் வண்ணம் அமைந்த பாடல். தமிழ் திரையுலகத்திற்கு ஒரு புதிய இசையமைப்பாளர் - நன்று.



2:03 ல் வரும் புல்லாங்குழல் நாதம் அற்புதம். ஆனால் அந்த புல்லாங்குழல் முடியும் தருவாயில் அது 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடலை சிறிது ஞாபகப்படுத்துகிறது. மற்றபடி, சரணத்தில் வரும் ராகம் இனிமை மட்டுமல்ல, வரிகளை கவிஞர் தாமரை மிக அற்புதமாகவும் எழுதியிருக்கிறார்.

கரைகள் அண்டாத
காற்றும் தீண்டாத
மனதில் எப்போது
நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத
உருவமும் கொள்ளாத
கடவுளைப் போல்
வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு
நினைவில்லை
இனி இந்த ஊன்உயிர்
எனதில்லை
தடையில்லை சாவிலுமே....
உன்னோடு வர

இரண்டு சரணங்கள் முடியும் போதும், பாடகர்கள் 'சொல்லாத கதை....' (முதல் சரணத்தில்), என்றும் 'உன்னோடு வர' (இரண்டாம் சரணத்தில்) என்றும் இழுத்து முடித்து, 'கண்கள் இரண்டால் என்று ஆரம்பிப்பது கொள்ளை அழகு. பாடல் மட்டுமல்ல, பாடலின் ஒளிப்பதிவும் மிகவும் அருமை. நன்றாக படமாக்கியிருக்கிறார்கள்.

பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை மட்டும் சிறிது (00:12 ல் வரும் டின் டின் டின் என்ற பியானோ இசை மட்டும்), கருத்தம்மா படத்தில் வரும் 'தென் மேற்கு பருவக்காற்று' பாடலின் ஆரம்ப இசையை ஞாபகப்படுத்துகிறது. மற்றபடி, வசந்தன் அவர்களின் இசைத்திறமை வியக்க வைக்கிறது. 'வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' பாடலையும் 'நாக்க மூக்க பாடலையும் இளைஞர்களின் விருப்பமான பாடலாக்கி காட்டுவது பெரிய விசயமில்லை - இது போன்ற மெல்லிசை பாடலை அனைவருக்கும் பிடித்தமான பாடலாக்கி காட்டுவதில் தான் திறமை இருக்கிறது. இது ஒரு புதிய 'வசீகரா'.

2008-ன் சிறந்த தமிழ் பாடல் என்று கூறினால் தகும் என்று நினைக்கிறேன்.

2. முன் தினம் பார்த்தேனே

திரைப்படம்: வாரணம் ஆயிரம்
பாடியவர்கள்: நரேஷ் அய்யர், பிரஷாந்தினி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

இந்தியாவில் இருந்த போது, இந்த இசைத்தட்டு வெளியானது. ஆவலுடன் வாங்கி பாடல்களை ஒரு முறை ஒலிக்க விட்டு கேட்டேன் அந்த அளவிற்கு (வழக்கம் போல்) ஈர்க்கவில்லை. 'அடியே கொல்லுதே' பாடலை மட்டும் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே யூடியூப்பில் கேட்டிருந்தேன் - அது கூட 'என்றென்றும் புன்னகை' பாடலின் சாயலில் இருந்ததால் என்னைக் கவரவில்லை. இங்கே ஊருக்கு வந்த பிறகு, சில நாட்கள் கழித்து கேட்க ஆரம்பித்த பிறகு, சில பாடல்கள் பரவாயில்லை - மோசமில்லை என்று தோன்றியது. ஆனால் அவற்றுக்கும் மத்தியில் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இது ஒரு மற்றுமொரு 'என்னைக் கொஞ்சம் மாற்றி', 'ஏ அழகிய தீயே' ரகம். அருமையான பாடல்.

நரேஷ் அய்யர் வழக்கம் போல் மிகச் சிறப்பாக பாடியிருக்கிறார். மேலும் பாடலினை ஆரம்பிக்கும் அந்த கிடார் இசை பாடல் முழுவதும் பரவியிருப்பதுமாகட்டும், பீட்டினை இழுத்துச் செல்லும் அந்த பெர்க்யூஷன் ஆகட்டும் பாடலினை இனிமையாக்கியிருக்கின்றன.

முன் தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாலே
நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ
நாட்களும் வீணானாதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன?
ஊர்பார்க்க ஒன்றாக சென்றாலென்ன?




[2:14]

துலா தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே

[2:35]
ஓ நிழல் போல விடாமல்
உன்னைதொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு
நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி


என்ற இடங்களில் வரும் ராகமும், [2:14] வரிகள் ஆரம்பிப்பதற்கு முன்பு வரும் பீட்டும் அட்டகாசம்.

ஆனால் யூடியூப்பில் யாரோ இது Faith என்ற ஆங்கில பாடலின் அப்பட்டமான தழுவல் என்று குறிப்பிட்டிருந்தர். அப்பாடலையும் கேட்டேன். அது உண்மையே!

இப்படத்தில் குறிப்பிடத்தக்க விஷயம், முதன் முறையாக பாம்பே ஜெயஸ்ரீ கெளதம் மேனனுக்காக பாடாதது தான். நிம்மதி!

3. சீக்கி சீக்கி

திரைப்படம்: சரோஜா
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா
இசை: யுவன் சங்கர் ராஜா

சென்னையில் இருந்த ஆறு நாட்களில் ஆறு படங்கள் பார்த்தேன். அவற்றுள் சரோஜா இரு முறை. இப்படம் என்னைப் பெரிதாக கவரவில்லையெனினும், சக்கரைக்கட்டி போன்ற மகா காமெடி படங்களுக்கு மத்தியில் இது எவ்வளோ பரவாயில்லை என்று தோன்றிற்று. மறு முறை திரையரங்கிற்கு செல்லும் போது, இப்படத்தை பார்ப்பதற்காக செல்லவில்லை ஆனால் வேறு எந்தப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காத காரணத்தினால், இப்படம் தேர்ந்தெடுத்தோம் நானும் நண்பனும். எனக்கு இப்படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதற்கு இப்பாடலும் ஒரு முக்கிய காரணம். பாடல்கள் வந்த பொழுது, 'தோஸ்து படா தோஸ்து' பாடலை மட்டும் விரும்பிக் கேட்டிருந்தேன். ஆனால் இப்படத்தை முதல் முறையாக பார்க்கும் போது, இப்பாடல் அவ்வளவு இனிமையாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது. முக்கிய காரணம் - யுவன் சங்கர் ராஜாவின் தோற்றம், அவர் நடுநடுவே 'யே ஒவ்வே யோவ், யே ஒவ்வே யோவ்' 'Baby girl you are messed up ho ho ha ha move your body' என்று பாடுவதுமாகும். சத்யம் தியேட்டரில் இப்பாடலை கேட்பதற்கு நானே எழுந்து யுவன் போல் ஆடலாம் போலிருந்தது. அற்புதம்.




பாடலில் உள்ள பீட் சொல்லவே தேவையில்லை. அற்புதம். யுவன் மறுபடியும், மறுபடியும் தனது திறமையை நிரூபிக்கிறார்.

'தோஸ்து படா தோஸ்து' பாடல் அப்படியே 'ஏம்மா இன்னும் மயக்கமா' என்ற பழைய பாடலினை ஞாபகப்படுத்துகிறது.

4. காதல் வைத்து காதல் வைத்து மற்றும் போகாதே

திரைப்படம்: தீபாவளி
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், யுவன் சங்கர் ராஜா
இசை: யுவன் சங்கர் ராஜா

இப்படம் வந்த வேளையில் இப்படத்தின் பாடல்களையும் தவற விட்டு விட்டேன் படத்துடன். நீண்ட நாட்களுக்குப் பிறகு (நான்கு மாதங்களுக்கு முன்பாக) எனது வீட்டில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனது சகோதரியின் மகன் இப்படத்தில் வரும் 'கண்ணன் வரும் வேளை' என்ற பாடலுக்கு பள்ளியில் ஆடுவதாகக் குறிப்பிட்டிருந்தனர். அந்தப் பாடலை ஒன்றிரண்டு முறை கேட்டிருக்கிறேன். அவ்வளவாக கவரவில்லை. அப்படியே விட்டு விட்டேன். அவர்கள் குறிப்பிட்ட பிறகு மீண்டும் இரண்டு, மூன்று முறை கேட்டுப்பார்த்தேன். மிகவும் பிடித்தது. அதுவும் அப்பாடலில் வரும்

[1:22]
கூறவா இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு மீதியை
கோடி கோடி ஆசை தீர மாலை

நீண்ட நாள் கண்ட கனவு தீரவே
....
நீயில்லாமல் நிலவும் எனக்குத் தொலைவே


என்ற வரிகளும் அவற்றின் ராகமும் மிக, மிக இனிமை. அனுராதா ஸ்ரீராம் அற்புதமாகப் பாடியிருப்பார்.

அப்படியே இப்படத்தில் வரும் இன்ன பிற பாடல்களையும் கேட்டேன். அவை அற்புதம். முதலாவதாக 'கண்ணன் வரும் வேளை'. பாடல் பிடித்துப் போனது. அதன் பிறகு, 'போகாதே' பாடலைக் கேட்டேன். அப்பாடலின் மீது ஏனோ ஒரு இனம்புரியாத மயக்கம். இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அதுவும் அப்பாடலில் [0:53] 'கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி' வரிகள் முடியும் போது ஒரு பீட் வருமே! ஆஹா.



அந்த பீட் நிற்காமல் அப்படியே பாடல் முழுவதும் தொடர்வது மிகவும் அற்புதம்! அதே போல் 2:41 முதல் 3:20 வரை வரும், யுவனின் டிரேட்மார்க் வயலினும், அந்த வயலினைத் தொடர்ந்து வரும் கிடாரும் மிக இனிமை. அந்த வயலினும், கிடாரும் முடிந்த பிறகு, இரண்டாவது சரணம் ஆரம்பிப்பதற்கு முன்பாக [3:34] 'டொய்ன்' :) என்று இரண்டு விநாடிகள் வரும் இசையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதன் பிறகு, இப்பாடலை பார்த்தேன். அது முதல் இப்பாடலின் மீது மயக்கம். மூன்று பாடல்களுமே அற்புதமானவை அவற்றுள் எனக்கும் மிகவும் பிடித்தது இப்பாடல்.

என்ன அற்புதமாக ராகம், குரல் (குரலுக்கு சொந்தக்காரர் விஜய் யேசுதாஸ்), இசை, வரிகள்! பாடலினை ஆரம்பித்து வைக்கும் அந்த சோகமான ஆலாபனையே மிகவும் அருமையாகவும், மனதிற்கு இதமாகவும் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வரும் பீட்டும், அது அப்படியே பாடல் முழுவதும் தொடர்வதும் கொள்ளை அழகு.



'தேவதை கதைகேட்ட போதெல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு தான்
நம்பிவிட்டேன் மறுக்கவில்லை

அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்த்த மயக்கத்தில் தான்
அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில் தான்"

அற்புதமான ராகம். இனிமையான வரிகள் கூட. 'தேவதை கதை கேட்ட போதெல்லாம்' என்ற வரிகளில் வரும் பாவனாவும் அழகு தான்.

தமிழில் ஏ.ஆர்.ரஹ்மானை விட மிகச் சிறந்த இசையை கொடுப்பது யுவன் தான் என்று கூறலாம். ஹாரீஷ் போன்றவர்கள் எல்லாம் அதற்குப் பின் தான் வருகின்றனர் என்பது எனது கருத்து. எத்தனை அருமையான பாடல்களைக் கொடுத்துள்ளார் சமீபத்தில். கடந்த நான்கு ஆண்டுகளிலேயே என்னால் 'கண்ட நாள் முதல்', 'கண்ணாமூச்சி ஏனடா', 'சரோஜா', 'தீபாவளி', 'கற்றது தமிழ்', 'பட்டியல்', 'அறிந்தும் அறியாமலும்', ராம், சண்டைகோழி, யாரடி நீ மோகினி போன்ற படங்களில் பல அற்புதமான பாடல்களைக் கொடுத்துள்ளார். அதுவும் இவர் பாடல்களில் உயிர் இருக்கிறது என்று கருதுகிறேன்.

உதாரணத்திற்கு 'மேற்கே மேற்கே', 'காதல் வைத்து', 'போக போக', 'போகாதே', 'பறபற பட்டாம் பூச்சி', 'தாவணி போட்ட தீபாவளி', முக்கியமாக 'காதல் வளர்த்தேன்' (மன்மதன்) பாடலில் வரும் இவ்வரிகளின் ராகம் குறிப்பிடத்தக்கது.

'உன் முகத்தைப் பார்க்கவே
என் விழிகள் வாழுதே,
பிரியும் நேரத்தில்
பார்வை இழக்கிறேன்'


யுவன் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மற்றுமொரு சிறந்த இசையமைப்பாளர்.

5. மன் மோகினி

திரைப்படம்: யுவராஜ்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இந்தியில், ரகுமான் இசையமைத்து கூடிய விரைவில் வெளியாகவிருக்கும் படம் யுவராஜ். சுபாஷ் கய் இயக்கத்தில் உருவான படம். இப்படத்தின் பாடல்கள் இருவாரங்களுக்கு முன்பாக வெளியானது. தற்போதைய ரகுமானின் பாடல்களை பல முறை கேட்க வேண்டியிதிருக்கிறது. ஜோதா அக்பர் வெளியான அன்று நாள் முழுவதும் கேட்டும் ஒரு பாடல் மட்டுமே பிடித்தது. ஆனால் தூங்கிய பிறகு, மறுநாள் மீண்டும் ஒலிக்கவிட்ட பிறகு அனைத்துப் பாடல்களும் மிகவும் இனிமையாக இருந்தன. அதனை விடவும் கூடுதலாக கேட்க வேண்டியதிருக்கிறது யுவராஜின் பாடல்களை விரும்புவதற்கு!.

பாடல்கள் கேட்ட மாத்திரத்திலேயே பிடிக்க வேண்டும் என்பது உண்மை. ஆனால், ஜோதா அக்பர் பாடல்கள் அனைத்தையும் அவ்வாறு நான் கேட்காமல் விட்டிருந்தால் அப்பாடல்களின் இனிமையை இழந்திருப்பேன் (இன் லம் ஹோ, கெ ஹனோ' பாடல்கள்). இப்படத்திலும் கேட்ட மாத்திரத்திலேயே பிடித்த பாடல் 'மன் மோஹினி' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் தான். வரிகள் இந்தியில் இருப்பதால் என்னால் விவரிக்கவும் இயலாது.



தோம் தோம்
தன தோம் தோம்
தன தோம் தோம்
தன தன தன தன


என்று ஆரம்பிப்பதே அழகு. இது மட்டுமல்ல பாடல் முழுவதுமே இனிமையாக தான் இருக்கிறது. முக்கியமாக 1:49 முதல் 2:12 வரை வரும் வயலின் மிக, மிக இனிமை. அந்த வயலின் அப்படியே 'மன் மோஹினி', என்ற வரிகளுடன் ஐக்கியமாகி மறைவது [2:12 - 2:20] இன்னும் இனிமை. மொத்தத்தில் மிக அற்புதமான பாடல். இதுவரை இப்பாடலை எத்தனைமுறை கேட்டிருக்கிறேன் என்ற கணக்கே இல்லை.

இப்பாடலைப் பாடியவர் விஜய் பிரகாஷ். குரலும், பாடியவிதமும் அருமையாக இருக்கிறதே. யார் இவர் என்று தேடிய போது தான் 1998 ஸீ டிவியில் ஒளிபரப்பான சரிகமபதநி நிகழ்ச்சியில் இறுதி வரை சென்ற பாடகர் என்று தெரிய வந்தது. அப்போட்டியின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்தேன். அருமை! 10 வருடங்களுக்குப் பிறகு அப்பாடகரின் திறமையை அனைவரும் அறியும் விதமாக ஓர் அற்புதமான பாடலைக் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் பாராட்டப்பட வேண்டியவர் (ஏற்கனவே ஒரு பாடலை சுவதேஷ் படத்தில் பாடியிருந்தாலும் அப்பாடல் அந்த அளவிற்கு அவருக்குப் பெயர் பெற்று
தரவில்லை).

இவர் குரல் ஏ.ஆர்.ரகுமானின் குரலை ஒத்திருக்கிறது என்றும் நான் கருதுகிறேன்.