ஞாயிறு, மார்ச் 30, 2008

நூறு தேங்காய் உடைக்கிறேன்

2008 ஜூலை
------------

இது வரை காவல் நிலையத்தின் வாசலையே மிதித்திராத பழனி, இன்று முதன் முறையாக அதை செய்ய வேண்டியதாகி விட்டது. தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து, முதன் வரிசையில் அமர்ந்திருந்தவரின் அருகில் நடுக்கத்துடன் சென்று, தனக்குக் கூட கேட்காத வகையில்

"சார்", என்று அழைத்தான்.

"இம்..."

""

"என்ன விசயம்?"

"சார்... கிட்னி ஆப்பரேஷன் பண்ணனும்...."

"கிட்னி ஆபரேஷனா? அந்த செக்ஷன் போ...."

பத்தடி நடந்து, பக்கத்தில் காவலர் காட்டிய பகுதிக்கு சென்றான் பழனி..

"சார்..."

"என்ன விசயம்?"

"சார், கிட்னி ஆப்பரேஷன் பண்ணனும்...."

"கிட்னி ஆப்பரேஷனா? யாருக்கு?"

"எங்க அப்பாவுக்கு..."

"எந்த ஆஸ்பிட்டல்?"

"கிட்னி கேர் ஆஸ்பிட்டல் சார்..."

"கிட்னி கேர் ஆஸ்பிட்டல். இம். என்னைக்கு ஆப்பரேஷன்?"

"அடுத்த வாரம் சார்..."

"அடுத்த வாரமா? அடுத்த வாரம் ஆப்பரேஷனை வச்சுக்கிட்டு சாவகாசமா வர்ற?"

"சார் போன வாரம் தான் ஆப்பரேஷன் பண்ணுறதா முடிவெடுத்தோம்.... இப்ப தான் டோனர் கிடைச்சாங்க...."

"யாரு டோனர்?"

"என்னோட பிரண்டுக்கு தெரிஞ்சவங்க..."

"தெரிஞ்சவங்கன்னா? யாரு.. அவர் பொண்டாட்டியா?"

"இல்ல சார்... அவனோட சொந்தக்காரங்க..."

"என்ன சொந்தம்? அவர் ஏன் உங்களுக்கு டொனேட் பண்ணனும்..."

"அவர் எங்களுக்கு ரொம்ப நாள் பழக்கம்.. எங்கப்பாவுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். அதனால அவரே கொடுக்குறதா சொல்லியிருக்கார்."

"சரி சரி... இந்த பார்மை பில்லஃப் பண்ணிக் கொடுத்துட்டு அடுத்த வாரம் வா."

"சார் அடுத்த வாரமா? புதன்கிழமை ஆப்பரேஷன் சார்..."

"அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிக்க ஒரு வாரம் ஆகுமே..."

"சார் நீங்க கொஞ்சம் மனசு வச்சா?"

"உங்கப்பா ஒருத்தர் தான் பேசண்டா? ஊர்ல எத்தனை பேசண்ட் இருக்காங்க.. அவங்க எல்லாரையும் பார்க்க வேண்டாமா? "

"சார் வேணும்னா, டோனரை இங்கேயே கூட்டிட்டு வர்றேன் சார்..."

"இது என்ன ஸ்கூல் பசங்ககிட்ட, யார் மிட்டாயை தின்னான்னு கேட்குற சமாச்சாரமா? உயிர் சமாச்சாரம்... அதுவும் இல்லாம, நீ கூட்டிட்டு வர்றவர் தான் அந்த ஆளுன்னு

எப்படி எனக்கு தெரியும்? நாங்க என்கொயரி எல்லாம் பண்ணி முடிக்க ஒரு வாரம் என்ன ரெண்டு வாரமே ஆகும்... அதனால நீ போய்ட்டு அடுத்த வாரம் வா..."

"சார்..."

"சுந்தரம்...", என்று அந்த அதிகாரி அருகில் இருந்த நபரை அழைத்தார்.

"சார்", என்று வந்து நின்றார் ஓர் கான்ஸ்டபிள்...

"இந்த ஆளை கூட்டிட்டு போங்க..."

சுந்தரத்துடன் சென்ற பழனி மீண்டும் திரும்ப அதே அதிகாரியிடம் வந்தான்..

"என்ன பேசுனீங்களா"

"பேசுனேன் சார். சார்... பத்தாயிரம் கொஞ்சம் ஜாஸ்தி தான் சார்"

"பத்தாயிரம் ஜாஸ்தியா? கிட்னி ஆப்பரேஷன் என்ன கவர்ண்ட்மெண்ட் ஆஸ்பிட்டல்லயா பண்ணுறீங்க? 'கிட்னி கேர்' ஆஸ்பிட்டல்ல தானே? அங்க என்ன ஓசிக்கா பண்ணுறாங்க?".

யோசித்தபடியே நின்றான், பழனி.

"அதுவுமில்லாம இதுல எவ்வளவு சட்ட சிக்கல்கள் இருக்கு. ஒழுங்கா என்கொயரி முடியனும்னா ஒரு மாசம் கூட ஆகலாம். அது வேற என்கொயரி ரிசல்ட் பாசிட்டிவா வரும்னு கூட சொல்ல முடியாது"

"சார்"

"கிட்னி கொடுக்குறதுக்கு பெரிய மனசு வேணும். சும்மா, வேண்டப்பட்டவங்க, பிரண்டோட பிரண்டு எல்லாம் யாருங்க இங்க கிட்னி கொடுக்குறாங்க? சொந்த புள்ளை கூட கொடுக்க மாட்டான். அதனால சும்மா கதையடிக்கிறத விட்டுட்டு காசை கொடுத்திட்டு போங்க"

"சரி சார்", என்று மண்டையை ஆட்டி, காசை கட்டி விட்டு வந்தான், பழனி.

2008 டிசம்பர்:
-----------

'இம் என்ன கேசு?'

'ஆப்பரேஷன்'

'இம்.. என்ன கிட்னியா, ஹார்டா, லிவரா?'

'கிட்னி சார்...'

'வாங்குறீயா, கொடுக்குறீயா?'

'வாங்குறேன் சார்...'

'இம்.. கிட்னின்னா 20000 ரூபாய் ஆகும்..'

'சரி சார், ஏற்பாடு பண்ணிடலாம் சார்... '

'சரி போய்ட்டு, அப்புறம் டோனரை வரச்சொல்லுங்க.. அவர்ட்ட என்கொயர் பண்ணிட்டு சைன் போட்டு அனுப்புறேன்..'

'ரொம்ப நன்றி சார்...'

மாலை
------

"நீங்க தான் பழனி அப்பாவுக்கு கிட்னி கொடுக்குறீங்களா?"

"ஆமா சார்..."

"பத்து ரூபா கொடுத்துடுங்க"

"சார்."

"என்ன யோசிக்குறீங்க?"

"பத்தாயிரத்து நான் எங்க சார் போவேன்"

"சும்மாவா கிட்னிய நீ கொடுக்க?. காசு வாங்குறேல?"

"சார்.. என் கடனை அடைக்கிறேன்னு சொல்லியிருக்காங்க"

"அது மட்டுமா? கைல 50000 ரூபாய் தர்றேன்னு சொல்லியிருக்கார்ல"

"சார்.."

"ரொம்ப யோசிக்காத... நான் என்ன எல்லா பணத்தையுமா கேட்டேன். 10 ரூபாயை கொடுத்திடு.. மிச்சத்தை நீயே வச்சுக்க... எல்லாரும் நல்லா இருக்கலாம்.. "

""

2009 டிசம்பர்
-------------

காவல் நிலைய வளாகத்தின் இடது புறத்தில் தனது ஸ்விஃப்ட் காரை நிறுத்தி விட்டு, காரில் இருந்து இறங்கினான், மாதவன்.

அப்போது, இருவர் அவன் அருகில் வந்து.

"சார் எதுவும் ஆப்பரேஷன்?"

"ஆமா, என் அண்ணனுக்கு. கிட்னி ஆப்பரேஷன்", என்றான் மாதவன்.

"ஒண்ணும் கவலைப்படாதீங்க சார். மொத்தமா 30000 ரூபாய் கொடுத்திடுங்க.. சாயங்காலமே எல்லாத்தையும் முடிச்சிடுலாம். நீங்க யார்கிட்டேயேயும் போய் அலைய

வேண்டாம். நாங்களே எல்லாம் பார்த்துக்குறோம்"

2010 ஜூலை
-----------

ஒரு போலீஸ்காரர், வீட்டிற்கு அருகில் உள்ள பிள்ளையார் கோயிலில்...

'கணேஷா. உன்னை தான் மலை போல் நம்பியிருக்கேன். இந்த வருஷமாவது என் வாழ்க்கையில கண்ணை துறப்பா... இந்த குற்றப்பிரிவில இருந்து எப்படியாவது உடல்

உறுப்பு தானம் பிரிவுக்கு எப்படியாது Transfer வாங்கி கொடுத்துடுப்பா. உனக்கு 100 தேங்காய் உடைக்கிறேன்'

====================================================


செய்தி: கிட்னி தானம் போலீஸ் அனுமதி கட்டாயமாகிறது.

குறிப்பு: போலீஸ் துறையினரில் பலர் கடமை தவறாமல் பணி புரிகிறார்கள் என்பதனை அறிவேன். இது நகைச்சுவைக்காக(?) மட்டும் எழுதப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது போன்ற ஓர் நிலைமை வந்து விடக்கூடாது என்பதே எனது ஆவல்.