ஞாயிறு, டிசம்பர் 24, 2006

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

கடந்த இரண்டு மாதங்களில் மிகவும் ரசித்துக் கேட்ட பாடல்களின் பட்டியல் இங்கே.

1. ஜாகே ஹே

படம்: குரு
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், சித்ரா
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இந்தியாவின் தலைசிறந்த இசைக் கூட்டணியான மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் அணியுடன், குல்சார் 'தில் சே' (உயிரே) படத்திற்குப் பிறகு இணைந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக குரு பாடல்கள் தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் சிறந்த பாடலான 'தேரே பினா' (ஏ.ஆர்.ரகுமான், சின்மயி பாடியது) ஏற்கனவே பல இசைப் பட்டியல்களில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அப்பாடலும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சின்மயி இப்பாடலில் மூன்று விதமாக குரலை மாற்றி வித்தியாசப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக 4:08-4:14 இடத்தில் 'தேரே பினா' என்று அவர் பாடுவது அருமை.

எனக்கு 'தேரே பினா' பாடல் பிடித்திருந்தாலும், 'ஜாகே ஹே' பாடலை நான் மிகவும் விரும்பிக் கேட்பதற்குக் காரணம், இப்பாடலில் இழைந்தோடும் சோகமும், பாடலின் நடுவில் வரும் இசையும், குழுவினரின் குரலும் தான். பாடலின் ஆரம்பத்தில் சித்ராவின் குரலையொட்டி வரும் குழுவினரின் ராகமும், வயலின் இசையும், மீண்டும் 1:50-ல் ஒரு முழக்கத்துடன் குழுவினரின் ராகம் தொடர்வது இனிமை. ரகுமான், மிக மெதுவாக, சித்ராவினைத் தொடர்ந்து பாடிவிட்டு, 3:21-ல் ரகுமான் சுருதியை உயர்த்தி பாடுவதும், 4:28-ல் அதனைத் தொடர்ந்து வரும் குழுவினரின் முழக்கமும் அற்புதம்.

இப்படத்தில் இடம்பெற்ற மற்ற இரு பாடல்களான 'பரிசே ரோ' (ஸ்ரேயா கோசல் பாடியது), பாடலையும், 'ஏக் லோ' (இசையமைப்பாளர் பப்பி லஹரி பாடியது) பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் அருமை.

2. கண்ணுக்குள் ஏதோ

படம்: திருவிளையாடல் ஆரம்பம்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், ரீட்டா
இசை: டி.இமான்

இப்படம் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக வந்துள்ளது. வெட்டுகுத்து படங்களுக்கு நடுவில், நகைச்சுவையோடு இப்படம் அமைந்துள்ளது சிறப்பு. தனுஷின் தம்பியாக வரும் சிறுவனின் நடிப்பு அழகு. இப்படத்தில் மூன்று பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. அவற்றில் 'கண்ணுக்குள் ஏதோ' பாடலுக்குத் தான் முதலிடம். இப்பாடலுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள, 'லூப்' மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. ரீட்டாவின் குரல் தேன்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலான, 'தெரியாமா பார்த்துப்புட்டேன்' பாடலின் சில இடங்களில் ராகம் (பாடல் வரிகள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம்) நன்றாக இருக்கிறது. உதாரணமாக, 1:50 ல் வரும் (சுஜாதா பாடியது)

'ரொம்ப பாசந்தான் எம் மேலதான்.
அதச் சொன்னா உனக்குப் புரியுமா'

2:17ல் வரும்

'கண்ணில் சிறு தூசி பட்டா
காத்தைக் கூட நிறுத்து வைப்பான்'

என்ற இடங்களைக் குறிப்பிடலாம்.

மற்றொரு பாடலான, 'விழிகளில் விழிகளில் விழுத்து விட்டாய்' பாடல் கேட்டது போலிருந்தாலும், நிச்சயமாக ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை. 'ஒரு நாள் மழை தான் என நினைத்தேன்' என்ற இடத்தில் வரும் ராகம் ஏதோ ஒரு பழைய பாடலை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் அந்தப் பாடல் நினைவிற்கு வர மறுக்கிறது.

3. நீ முத்தம் ஒன்று கொடுத்தால்

படம்: போக்கிரி
பாடியவர்கள்: கே.கே., சுவேதா
இசை: மணிசர்மா

நீண்ட நாட்களுக்குப் பிறகு மணிசர்மா இசையமைக்கும் தமிழ் படம். கடைசியாக 'ஷாஜஹான்' படத்திற்கு இசையமைத்தார் என்று நினைக்கிறேன். சென்ற பாடலைப் போலவே இந்தப் பாடலுக்கும் 'லூப்' மிக சிறப்பாக அமைந்துள்ளது. பாடல் முழுவதுமே ராகம் நன்றாக வந்துள்ளது. முக்கியமாக

'உனை வாசித்தேன் (2:25)
நேசித்தேன்
சுவாசித்தேன்
யாசித்தேன்'

இடத்திலும்,

'உனை சந்தித்தேன் (3:50)
தித்தித்தேன்
ஜீவித்தேன்
உயிர் தேன் தேன்'

இடத்திலும் அருமை. அதிலும் 3:50-ல் ஒவ்வொரு வார்த்தையையும் பெண் குரல் அதனை திருப்பிச் சொல்வது அழகு. பாடலின் இடையில் இடம்பெற்ற தமிழ்-பாப், பாடலுக்கு மேலும் மெருகேற்றுகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள, சுசித்ரா பாடிய 'என் செல்ல பேரு' பாடலுக்கும், 'ஜூன் மாதம் தொன்னுத்தெட்டில்' (ஜே ஜே) பாடலுக்கும் சிறிது கூட வித்தியாசமில்லை.

4. ஜூன் போனால் ஜூலைக் காற்றே

படம்: உன்னாலே உன்னாலே
பாடியவர்கள்: கிரிஷ், அருண்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

இப்பாடலின் ஆரம்பம் அப்படியே Blue - 'All Rise' பாடலை அப்படியே ஒத்துள்ளது. All Rise பாடலின் 0:09 டிரம்ஸூம், இப்பாடலின் 0:17-ல் இடம்பெற்ற டிரம்ஸூம் ஒன்றே. அது மட்டுமல்லாமல், பாடலின் ராகமும் அப்படியே எடுக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜிற்கு மிகவும் பிடித்த பாடல் 'All Rise' என்று ஒரு பேட்டியில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
'வேட்டையாடு விளையாடு', பாடலில் இடம் பெற்ற 'பார்த்த நாள் முதல் நாளாய்' பாடலின் ஆரம்பத்தில் வரும் மவுத் ஆர்கனும் 'Al' Rise' பாடலைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது என்பது என் கருத்து.

ஆனால் இப்பாடல் ஹிட்டாகும் என்பது மட்டும் நிச்சயம். கே.கே., மஹாலக்ஷ்மி பாடிய 'முதல் முதலாய்' பாடலும் நன்றாக வந்துள்ளது. 1:10-ல் இடம்பெற்ற பெண் குரல் யாருடையது என்பது தெரியவில்லை.

5. பல்லாண்டு பல்லாண்டு

படம்: ஆழ்வார்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், செந்தில் தாஸ்
இசை: ஸ்ரீகாந்த் தேவா

நல்லதொரு மெலோடி பாடல். உன்னிகிருஷ்ணனின் குரல் பாடலுக்கு வளம் சேர்த்துள்ளது. மனிதருக்கு எவ்வளவு சிறப்பான குரல்!. இது போன்ற பாடல்கள் அவருக்கு இனிப்பு சாப்பிடுவது போல. மேலும், முதல் சரணத்திற்கு முன்பு வரும் வீணை இசை இனிமை.

இதே படத்தில் மதுஸ்ரீ பாடிய 'பிடிக்கும் உன்னை' பாடலின் ஆரம்பத்தில் வரும் 'ஹா ஹா' என்று இடம்பெறும் கோரஸ் அப்படியே எனக்கு 'Gregorian - Master of Chanting' ஆல்பத்தை ஞாபகப்படுத்துகிறது. எப்போது கேட்டாலும் திகட்டாத பாடல்கள் இந்த chanting. முக்கியமாக 'The Gift' எனக்கு மிக மிக பிடித்த பாடல். இதே பாடலில் 0:06 முதல், அப்படியே 'வாலி', படத்தில் இடம்பெற்ற 'ஏப்ரல் மாதத்தில்' பாடலை அப்படியே தழுவி இசையமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பீட். மதுஸ்ரீ-க்கு இன்னும் நல்ல பாடல் தமிழில் அமையவில்லை. 'குரு' படத்தில் 'பாஸி லகா' பாடலில் 2:07 'காலா ஹே' என்று ஒரு சிரிப்புடன் சரணத்தை ஆரம்பிப்பது அற்புதம்.

6. அற்றைத் திங்கள்

படம்: சிவப்பதிகாரம்
பாடியவர்கள்: சுஜாதா
இசை: வித்யாசாகர்

இப்பாடல் சுஜாதாவின் குரலுக்காகவும், இசைக்காகவும், 0:27 இடத்தில் வரும் 'காணுகின்ற காதல் என்னிடம்' என்ற ராகத்திற்காகவும் அதனையொட்டி வரும் இசைக்காகவும் மிகவும் பிடிக்கும். கரு. பழனியப்பன், வித்யாசாகர் கூட்டணியில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் இக்கூட்டணியின் மற்ற இரு படங்களின் தரத்தில் பாதியைக் கூட எட்டவில்லை.

ஸ்ருசல்