வெள்ளி, மார்ச் 10, 2006

உயிர்; மற்றவர்களுக்காக இழப்பதற்காகவா?

உயிர்; மற்றவர்களுக்காக இழப்பதற்காகவா?:

என்னாலும் பல சமயங்களில் ஒத்துக்கொள்ள முடியாததது. தேசப் பற்று என்ற பெயரில் காரணமில்லாமல் இரு தரப்பினரும் உயிரை விடுவது என்பது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று. ஆனாலும் நாம் என்னதான் இந்த உலகமே ஓர் விழல்; ராணுவம், போர் எல்லாம் அரசியல், வீண் வேலை; ஒற்றுமையாக வாழ்வதற்குப் பதில் சில தனிப்பட்ட மனிதர்களின் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஏற்படும் அவசியமில்லாத நிகழ்வு என்றெல்லாம் கூறினாலும் ராணுவ வீரர்களின் பணியினை பாராட்டாமல் இருக்க முடியாது. இப்போதிருக்கும் சூழலில், நமக்கு போரில் ஆர்வம் இல்லாவிடிலும், உடன்பாடில்லாவிட்டாலும், வெறுத்தாலும் கூட, ராணுவத்தின் / ராணுவ வீரர்களின் (தரைப்படை, விமானப் படை, கப்பற்படை) பணியின் அவசியத்தை நீங்கள் மறுக்க முடியாது. காரணம்; நாம் விரும்பாமலேயே நமக்குக் கிடைத்து விட்ட எதிரிகள். அவர்களிடமிருந்து இப்போதைக்கு நம்மைக் காத்துக் கொள்ள அவர்களின் பணி நமக்கு இன்றியமையாதது.

நமது உடலுக்கு ஏதாவது சிறு தீங்கு ஏற்பட்டாலும் கூட நாம் இதுவரை பேசிய தத்துவங்களும், குடும்பமும், நண்பர்களும் அனைத்தும் மறந்து, நமது உடலைப் பேணுவதிலேயே நமது கவனம் அனைத்தும் செல்லும். எப்போதடா இந்த சிக்கலில் இருந்து வெளியேறி முன்பு போல ஆரோக்கியமாக இருப்போம் என நினைக்க ஆரம்பித்து விடுவோம். அப்படிப்பட்ட உடலை, மற்றவர்களின் நலனுக்காக விட்டுக் கொடுக்க முன் வருதல் தியாகம் தானே? இது போன்ற மனப்பான்மை அனைவருக்கும் வருமா என்றால் நிச்சயமாக இல்லை. ராணுவத்தில் இணைவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பெருமை, வசதியின்மை, குறைந்த படிப்பு, உண்மையான தேசப் பற்று இப்படி பல காரணங்கள் இருந்தாலும், வலி அனைவருக்குமே ஒன்று தான்.

சமயங்களில் நமக்கு கிடைத்த நல்ல வாழ்வு அவர்களுக்குக் கிடைக்கவில்லையே எனவும் நினைக்கத் தோன்றும். நல்ல வாழ்வு என்பது வீடு, பணம், கார், நல்ல மனைவி என்பது மட்டுமல்ல. இவற்றை விட முக்கியமானது, சுதந்திரம்.

நீங்கள் விரும்பும் நேரம் வரை உறங்க முடியும்; நினைத்த மாத்திரத்தில் திரைப்படத்திற்குச் செல்ல முடிகிறது; நண்பர்களைச் சந்திக்க செல்ல முடிகிறது; ஷாப்பிங் செல்ல முடிகிறது; இல்லையென்றால் 10 நாட்கள் விடுமுறை எடுத்து விட்டு ஊட்டியோ, கொடைக்கானலோ செல்ல முடிகிறது. அந்த சுதந்திரம் அவர்களுக்குத் துளி கூட இல்லை. அந்த சுதந்திரத்தை இழக்க யாருக்குத் தான் மனது வரும்? திரைப்படங்களுக்கு நான் பெரும்பாலும் இரவு நேரக் காட்சிகள் தான் செல்வது வழக்கம். திரைப்படம் முடிய 1 மணி ஆகிவிடும். வீட்டிற்கு வரும் வழியில், சுமார் 4 கி.மீட்டர் தூரத்திற்கு ராணுவப் பயிற்சி மையம் இருக்கிறது. 1 மணிக்குக் கூட கோட்டான்கள் போல அந்த வாயில் கதவினருகில் சில வீரர்கள் காத்திருப்பார்கள். இதே தான், 4 கி.மீ தூரத்திற்கும் உள்ள ஒவ்வொரு நுழைவாயிலும்!. இத்தனைக்கும் அவர்களுக்கு பெங்களூரில் பணியிடம் கிடைத்தால் சொர்க்கம் போலிருப்பார்கள் (இங்கு பணிபுரியும் சில குடும்பத்தினரிடம் பேசியதில் அறிந்து கொண்டது). அந்த சொர்க்கமே இப்படியென்றால், மற்ற இடங்கள்? காஷ்மீர் போன்ற இடங்கள்?

நமக்கு தொண்டு செய்யும் கடமை அவர்களுக்கு இருக்கிறது; நமக்காக உயிர்விடும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது என சமயத்தில் சிலர் அவர்களை அடிமைகள் போல நினைப்பவர்களும் இருக்கிறார்கள். 'இன்னைக்கு எத்தனை பேர் இறந்தார்கள்' என நம்பர்களின் அடிப்படையில் கேட்பவரும் இருக்கிறார்கள். 'தீவிரவாதிகள் அட்டாக்கா? 5 தீவிரவாதிகள் செத்துட்டாங்களா? ஆனா நம்ம சைடில ஒரு 10 பேராவது செத்திருபாங்களே?', எனக் கேட்பவர்களும், நினைப்பவர்களும் இருக்கிறார்கள். வலி, பாதிக்கப்படுபவருக்கு எவ்வளவு அருகிலிருக்கிறோம் என்பதைப் பொறுத்து தான் பார்ப்பவர்களுக்கும் தெரியும்.

நமது மாநிலத்தின், பெரும்பாலான பகுதிகளில், ஒருவர் ராணுவத்தில் இருக்கிறார் என்றால், "ஓ கொஞ்சம் கஷ்டப்படுகிற குடும்பம் போல இருக்கு, அப்ப அவர் குடிப்பாரா? ஓ.சிக்கு ரம் கிடைக்குமே, செம வாழ்வு" என்று தான் பலரும் அவரைப் பற்றி நினைப்பர். நமது ஊர்களில் பெரும்பாலும் பணக்காரர்கள் ராணுவத்திற்கு செல்வதில்லை; ஓரளவு படித்தவர்களும் செல்வதில்லை; இது தவறு என்று சொல்லவில்லை. இதற்கு விதிவிலக்காக பல கிராமங்கள் இன்றும் தமிழகத்தில் உண்டு.

வட இந்தியாவில் இன்னும் அந்த நிலை வரவில்லை; ஆர்வமாக பலர் ராணுவத்தில் சேர்கின்றனர். அவர்களுக்கு ஓரளவிற்கு (தமிழகம் அளவிற்கு மோசமில்லை) நல்ல மரியாதை இருக்கிறது. பணமிருப்பவர்கள்; படித்தவர்கள் என பல தரப்பினரும் ராணுவத்தில் சேர்வதைப் பார்க்கலாம்.

என்னுடன் உடன்பணிபுரியும் நண்பி ஒருவர், ராணுவத்தில் பணிபுரியும் நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அவர்கள் படும் அவஸ்தை என்னென்ன? இவர் (நண்பி) சில ஆண்டுகளுக்கு முன்பாக, பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல நேரிட்டது. அவரது கணவருக்கோ போஸ்டிங் காஷ்மீரில். இவரால் அவரது கணவருக்கு ஃபோன் செய்ய முடியாது. அவரது கணவர் தான், இவரைத் தொடர்பு கொள்ள முடியும்; ஆனால் அதற்கு அவர் 60 கி.மீ வரை பயணம் செய்து வர வேண்டும். அந்தத் தருணத்தில் வேறு, எல்லைக்கோட்டில், இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் ஏதோ ஓர் அசாதரண சூழ்நிலை காரணமாக குவிக்கப்பட்டனர். இரண்டு மாதங்களுக்குப் பின்பாக விலக்கப்பட்டது வேறு விசயம். பேட்டரலிங் என்று ஏதாவது வந்தால், அடர்ந்த காடுகளில் 5-7 நாட்கள் வரை சுற்றும் நிலை வரும். அவரிடமிருந்து சில நாட்கள் கழித்து தொலைபேசி அழைப்பு வராமல் போனால், இவரிடமிருந்து வார்த்தைகளே வராது. நரக வேதனை.

இவர் இந்தியாவிலிருந்து, அவரது கணவருக்கு ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் போஸ்டிங் கிடைக்கும் போது, கணவர் இருக்கும் இடத்திற்கே சென்று தங்கும் வாய்ப்பு கிடைக்கும். அவரிடம், அவர் கணவருடன் பணிபுரிவர்கள் அடிக்கடி கூறும் வாசகம் "Madam, Live the life fullest". அடுத்த நாள் என்பதே கேள்விக் குறி, என்றால் வாழ்வில் சுவாரசியம் ஏது? நாமெல்லாம், வாழும் சூழலில் சிறிதளவு, மாறுதல் ஏற்பட்டால் கூட உடனே மாற்று வழி என்ன என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் அவர்கள் விரும்புகிறார்களோ, இல்லையையோ அதைத் தொடர்ந்து தானாக வேண்டும்.

சமீபத்தில் NatGeo சேனலில், இந்திய விமானப்படைக்கு பணியில் சேர்வதற்கான தகுதிப் போட்டிகளை காணும் வாய்ப்பு கிடைத்தது (இரண்டு எபிசோடுகள் தான் பார்க்க முடிந்தது). அதில் சேர்வதற்கு, இளைஞர்கள் (பெண்கள் உட்பட) காட்டிய ஆர்வம் மலைக்க வைத்தது. எவ்வளவு கடினமான போட்டிகள்? பல போட்டிகள் நினைவில் இல்லை ஒன்றைத் தவிர.

பெரிய நீச்சல் குளம். சுமார் நூறடி (இல்லையென்றால் குறைந்தது எழுபந்தைந்து அடி இருக்கும்) உயரத்தில் ஓர் ஆண் போட்டியாளர் நபர் நிற்கிறார். அப்படியென்றால் ஆழத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ஒன். டூ. திரி என்று அமைப்பாளர் சொல்ல உடனே அவர் மேலிருந்து குளத்திற்குள் குதித்து, சில விநாடிகளில் நீந்தி மேலேறி வருகிறார்.

அடுத்ததாக ஓர் பெண்.

ஒன். டூ. திரி என்று சொல்ல உடனே அவரும் மேலிருந்து குதிக்கிறார்.

குதித்த பெண் மேலே வரமுடியாமல் போகவே அங்கேயே தயாராகக் காத்திருக்கும், போட்டி அமைப்பாளர்கள் அவரைக் காப்பாற்றி மேலே அழைத்து வருகின்றனர்.

அடுத்ததொரு பஞ்சாபி பெண். தண்ணீரை வெறித்துப் பார்க்கிறார். ஒன். டூ. என எண்ணுகிறார்கள். அவரின் கால்கள் குதிப்பதற்குத் தயாராக இல்லை என அவரது முகம் சொல்கிறது. திரீ என்று சொல்கிறார் போட்டி அமைப்பாளர். அந்தப் பெண் குதிக்கவில்லை.

சில விநாடிகளுக்குப் பிறகு மற்றொரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இம்முறை மீண்டும் அமைப்பாளர் ஒன். டூ. திரி என்று சொல்கிறார்.

இப்போது அந்த்ப் பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர். என்னால் முடியாது என அழுது கொண்டே திரும்புகிறார்.

திரும்பிய பெண், "I'm sorry. என்னால் நிச்சயமாக முடியாது; எனக்கு நீச்சல் தெரியாது" (என்று கூறியதாகத் தான் எனக்கு ஞாபகம்) என்று அழுது கொண்டே கூறியதில் மதிப்பெண்கள் பெற முடியவில்லையே என்ற ஏமாற்றமும், விமானப் படைக்கு சேர முடியாமல் போய்விடுமோ என்ற வருத்தமும் தெரிந்தது.



ஆனால் அதே ராணுவத்தில் தற்போதிருக்கும் வேலைப் பளுவும், அரசியலும் வீரர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க வைத்துள்ளது. இதற்கு காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தற்கொலைகளை ஆதாரமாகக் கூறலாம். சென்ற ஆண்டு மட்டும் 1000 பேர் தற்கொலை செய்துள்ளதாக ஓர் பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது (டிசம்பர் மாதம் எங்கோ பார்த்தது). இதற்குக் காரணமாக, பெரும்பாலும் மேலதிகாரிகளின் அடக்குமுறை தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இப்படி அடக்குமுறையிலும், விடுப்பு கிடைக்காமல் தொடர்ச்சியாகப் பணிபுரிய செய்யச் சொல்லி கொடுக்கும் நிர்பந்தம். இப்படியாக இருக்கும் சமயங்களில், வீட்டிலிருந்து ஏதாவது ஓர் கெட்ட செய்தியைத் தாங்கி வரும் ஓர் கடிதம் அவர்களை தற்கொலைக்குத் தள்ளுகிறது எனக் குறிப்பிடுகின்றார்.

பயிற்சியிலேயே, Trainee-களுக்கு, அந்த அதிகாரி கூறிய முதல் வாசகம் (NatGeo), "I'm ..... From today you are going to be very afraid of me. Understand?", என்பது தான்.

பெங்களூரிலிருந்து சென்னைக்கு செல்லும் போது, என்னுடைய பெட்டியில் பல விமானப் படை வீரர்கள் பயணம் செய்தனர். (பெங்களூரில் ஏதோ ஓர் போட்டிக்காக கலந்து கொண்டு திரும்பினர்). அவர்களுக்கு வயது 20-23 வரை இருக்கலாம். நன்றாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தவர்கள், திடீரென்று அமைதியாயினர். காரணம் அவர்களின் மேலதிகாரி. சிறிது நேரம் கழித்து, ஒருவரிடம் பேச்சுக் கொடுத்த போது, அவரின் பேச்சில் விரக்தி அப்பட்டமாகத் தெரிந்தது. இந்தப் பணியில் சிரமங்கள் அதிகமிருப்பதாகவும் வெளிநாட்டில் சென்று படிக்க என்னென்ன வழிகள்; எவ்வளவு பணம் செலவாகும் என்பதைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார். உங்களால், விலகி படிக்க செல்ல முடியுமா எனக் கேட்டதற்கு, '3 (அல்லது 2) ஆண்டுகளுக்கு முன்பாக பணி நிரந்தரமாக்கப்படுவதற்கு முன்பாக, விரும்பினால் விலகி சென்று விடலாம். எனது நண்பன் அது போல சென்ற ஆண்டு சென்றான்', என்பது போலக் கூறினார்.

நண்பியின் கணவர் ஒரு முறை, எப்படி குழுக்களை போருக்குத் தயார்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். வீரர்கள் போரில் முனைந்து சண்டை போடுவதற்கு தேசபக்தி மட்டும் அல்ல. எப்போதுமே குழுக்களை மொழிவாரியாகத் தேர்ந்தெடுப்பது தான் வழக்கம். அப்படி செய்யும் போது தான் வீரர்கள் மனம் விட்டு பேசி, இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அப்படி பகிர்ந்து கொண்ட நண்பர் மரணமடைய நேர்ந்தால், உடனிருப்பவர்கள், அதற்காக பழி வாங்க வேண்டும் என்ற ஆத்திரத்துடன் போர் புரிவர்' எனக் குறிப்பிட்டார்.

நான் எப்போதே படித்த மின்னஞ்சலைப் பற்றிக் கூறி இந்தப் பதிவினை முடித்துக் கொள்கிறேன்.

போரிலிருந்து நாடு திரும்பிய போர் வீரன், தனது பெற்றோருக்கு போன் செய்கிறான்.

"அம்மா நான் நாடு திரும்பி விட்டேன். வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன்"

"சந்தோசம். உனக்காக எல்லாம் காத்துக் கொண்டு இருக்கோம்"

"ஆனா அம்மா, என்னோட என் நண்பனும் வர்றான். என் கூட கொஞ்ச நாள் தங்கப் போறான்"

"அப்படியா சந்தோசம். அவனையும் கூட்டிக் கொண்டு வா. அவனுக்குத் தேவையான வசதி செய்து கொடுக்கிறேன்"

"ஆனா ஒரு சிக்கல். அவனுக்கு போர்ல, கண்ணிவெடி மீது கால் வைச்சதுல ஒரு காலும், ஒரு கையும் போயிடுச்சு. அவனால எங்கேயும் போக முடியாது. அவனை நம்ம கூடவே வச்சுக்கணும்னு ஆசைப்படுறேன்"

"அது எப்படிப்பா முடியும். கை, கால் இல்லாதவனை நம்ம கூடவே வச்சுக்க முடியுமா? அவனுக்குன்னு நல்ல இடம் பார்த்து செய்து கொடுக்கலாம்'

"இல்ல. அவன் என்னோட உயிர் நண்பன். என்னோட தான் இருக்கணும்னு ஆசைப்படுறேன்"

"அந்த மாதிரி இடைஞ்சலை வச்சிட்டு நாம எப்படி நிம்மதியா வாழ முடியும். நீ அவன மறந்துட்டு வீட்டுக்கு வா. அவனுக்கென்று ஏதாவது வழி இருக்கும். ஆண்டவன் பார்த்துப்பான்" என அவரது அப்பா சொல்ல மகன் தொலைபேசி இணைப்பைத் துண்டிக்கிறான்.

மறு நாள் காவல்துறையினர், அவனது பெற்றோரைத் தொடர்பு கொண்டு, "உங்கள் மகன் நேற்று உயரமான கட்டிடத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்" எனத் தெரிவிக்கின்றனர்.

பதறியடித்துக் கொண்டு, மருத்துவமனை சென்று மகனின் உடலைப் பார்க்கின்றனர். உடலைப் பார்த்த அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி. அவர்கள் மகனுக்கு ஓர் கையும், காலும் இல்லாததைக் கண்டு.

இந்தப் பதிவு ஓர் பார்வை மட்டுமே. கருத்தோ, தீர்வோ சொல்வதற்காக இல்லை.

ஒரு பக்கம், தேசபக்தி என அவர்களிடம் ஆயுதம் திணிக்கும் நாட்டு மக்கள்; அவர்களை பகடைக்காய்களாக மாற்றி அலையவைக்கும் அரசியல்வாதிகள் (படை குவிப்பது, வாபஸ் வாங்குவது, போரிட வைப்பது, வெளிநாடுகளுக்கு உதவியாக சமயங்களில் படைகளை அனுப்பி வைப்பது, ...); துன்புறுத்தும் சில அதிகாரிகள்; வேலைப் பளு என அவர்களின் கஷ்டங்கள் நீண்டுகொண்டே போகிறது.

உயிர் மற்றவர்களுக்காக இழப்பதற்காகவா? கண்டிப்பாக இல்லை. ஆனாலும் அவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தேசபக்தி என்ற பெயரால் நம்ப வைத்து, பலிகடாவாக்கியிருக்கிறோம். நீங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் எப்படி அனுபவித்து வாழ்கிறோர்களோ அதே போல அவர்களுக்கும் அந்த ஆசை இருக்கும். நம்மால் ராணுவத்தில் சேர முடியாது; போரில் கலந்து கொள்ள முடியாது; நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ய முடியாது; ஆனால் நமக்காகவும், நாட்டிற்காகவும் இந்த தியாகத்தை செய்பவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்போம். (யாரும் இப்போது கொடுக்கவில்லை என்பதல்ல என் வாதம்; இந்த வரி, கொடுக்காதவர்களுக்கு மட்டும்). போரில் இறக்கும் போது கொடுக்கும், 5 லட்சமோ, 10 லட்சமோ மட்டும் அவர்களின் இழப்பிற்கு (அல்லது தியாகத்திற்கு) ஈடாகிவிடாது.

வியாழன், மார்ச் 09, 2006

இனியவை நாற்பது

இனியவை நாற்பது:

நட்சத்திரமாக இருந்து விட்டு, 'எனக்குப் பிடித்த பாடல்கள்' என்று அடுக்காவிட்டால் என்ன நியாயம்? மனிதனுக்கு எப்போதும் சிறிது தலைக்கணம் உண்டு. என்னோட புது காரைப் பார்த்தாயா? என்னோட வீட்டைப் பார்த்தாயா? இந்த டிரெஸ் எப்படி இருக்கு? என்னோட தேர்வு எப்படி என்று ஒவ்வொரு விசயத்திலும் அலட்டிக்கொள்வான்; துணையை தேர்ந்தெடுப்பது உட்பட. அதே தான் இங்கும் பொருந்தி வருகிறது. இதோ என்னுடைய ரசனை அலட்டல்!

என்னுடைய பதிவுகளிலேயே மிகவும் சிரமப்பட்டது இந்த பதிவிற்குத் தான். எதை விட்டு விடுவது; எதை சேர்ப்பது எனத் தெரியாமல் குழம்பி அரை மனதுடன், இந்தப் பட்டியலை பதிவிடுகிறேன். சிறந்த 20 பாடல்களை தொகுக்க வேண்டும் என்று தான் ஆரம்பித்தேன். ஆனால் பாடல்களைத் தேர்ந்தெடுத்து பார்த்தால் பட்டியலின் அளவு 150 க்கும் அதிகமாக சென்று விட்டது. சில படங்களிலிருந்து இரண்டுக்கு மேல் கூட பாடல்கள் இடம் பெறத் துவங்கின. மேலும் அந்த பாடல்கள் பொதுவாக அனைவருமே குறிப்பிடும் பாடல்கள் தான். ஆகையினால் அவற்றை தவிர்த்து விட்டேன். ஆனாலும் அந்த படங்களிலிருந்தே சில பாடல்கள் மீண்டும் இந்த பட்டியலில் இடம் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை. கடைசியில் நாற்பதோடு நிறுத்தி விட்டேன். உங்களுக்கு அனைத்துப் பாடல்களையும் பார்ப்பதற்கு நேரம் மற்றும் பொறுமை இருக்குமா எனத் தெரியவில்லை.

புன்னகை மன்னன், அக்னி நட்சத்திரம், அம்மன் கோயில் கிழக்காலே, சிப்பிக்குள் முத்து, மெளன ராகம், பூவிழி வாசலிலே, இதயக் கோயில், புதுப் புது அர்த்தங்கள், ஜானி, வைதேகி காத்திருந்தாள், முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே, இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், தாளம், அலைபாயுதே, மின்சாரக் கனவு, கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன், ரோஜா உள்ளிட்ட சிறந்த படைப்புகளையும், மெட்டி ஒலி காற்றோடு, அழகிய கண்ணே (உதிரி பூக்கள்), இது ஒரு பொன் மாலைப் பொழுது, பூவே செம் பூவே, வெள்ளைப் புறா ஒன்று, நான் தேடும் செவ்வந்திப் பூவிது, காதல் கசக்குதய்யா போன்ற பாடல்களையும் தவிர்த்து தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவற்றையும் சேர்த்திருந்தால், இது போல இன்னும் மூன்று பதிவுகள் வேண்டும் எனக்கு. வரிசை எண், பாடலின் தரத்தைப் பொறுத்து அல்ல. இந்தப் பாடல்களைத் தர வரிசையில் அடுக்கவும் முடியாது.

இது வரை நான் கேட்ட பாடல்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த முதல் 40 பாடல்களின் பட்டியல் இதோ:

குறிப்பு: எல்லா பாடல்களுக்கும் "ராகம் அருமை; இசை மிக அருமை" என்ற வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளவும்.

1. தேவனின் கோவில் மூடிய நேரம் தெய்வமே

திரைப்படம்: அறுவடை நாள்
பாடியவர்கள்: சித்ரா, இளையராஜா
இசை: இளையராஜா

இறைபணியில் இருந்து சிறிது விலகி காதல் பாதையை நாடும் ஓர் பெண், காதலனின் திருமணத்தினால் ஏற்படும் ஏமாற்றத்தை வெளிபடுத்தும் அற்புதமான பாடல். அழகான வரிகள். பாடலின் ஆரம்பத்தில் 'பிரேமம் பிரேமாதி பிரேம பிரியம்' என இளையராஜாவின் அற்புதக் குரலுடன் ஆரம்பிக்கும் பாடல், சித்ராவினை நோக்கிச் செல்வது அழகு.

ஒரு வழிப் பாதை என் பயணம்
மனதில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா?
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிட கண்ணில் நீருக்குப் பஞ்சம்
நானோர் கண்ணீர் காதலி.

தன்னுடைய மந்திரக் குரலால், பாடல் வரிகளுக்கு தேவையான அழுத்தத்துடன், உணர்ச்சிப் பெருக்குடன் பாடியிருப்பார் சித்ரா.

2. குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே

திரைப்படம்: ஆண்பாவம்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், சித்ரா
இசை: இளையராஜா

படமாக்கப்பட்ட விதத்திற்காகவும் (முக்கியமாக சீதாவிற்காக), இசைக்காகவும், பெண் குரலுக்காகவும் இந்த பாடலை மிகவும் பிடிக்கும். சீதா ரொம்ப சின்னப் பெண்ணாக, அருமையாக செய்திருப்பார்.

அன்னைக்கொரு எழுத்தை எனக்கெழுதிப் புட்டான்
இன்னைக்கதை அழிச்சா எழுதப் போறான்?
பெண்ணே அவன் மேல பழியை சொல்லாதடி
ஆண்பாவம் பொல்லாது கொல்லாதடி

அருமையான ராகம். சித்ராவின் குரல் தேன்.

தவறோ சரியோ விதி இது தான்
சரி தான் சரி தான் வழக்கெதுக்கு?

விதி அப்படி? வேறு வழியில்லாமல், கிடைத்த பொருளின் சிறப்பம்சத்தை மட்டும் பார்த்து மகிழ்வது தான் வழி என்பது போல் சீதாவின் ரியாக்சன் இருக்கும். சீதா நன்றாகச் செய்திருப்பார்.

3. பூங்காற்றிலே

திரைப்படம்: உயிரே
பாடியவர்கள்: உன்னிமேனன், சொர்ணலதா
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இந்தப் பாடலைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? உயிரை உலுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலின் ஆரம்பத்தில் ஓரே ஓர் இசைக் கருவியின் இசை மட்டும் வரும். பின்னணியில் சொர்ணலதா 'கண்ணில் ஒரு வலி இருந்தால், கனவுகள் வருவதில்லை' என்பார். சொர்ணலதா அதே வரிகளை இரண்டாம் முறை சொல்லும் போது, இன்னொரு இசைக் கருவி சேர்ந்து, சுருதியை உயர்த்தும். மூன்றாம் முறை சொல்லும் போது, இன்னொரு இசைக் கருவி சேர்ந்து கொண்டு, பல்லவியை ஆரம்பிப்பது அருமையாக இருக்கும். உன்னிமேனனுக்கு இதை விட சிறந்த பாடல் இது வரை கிடைக்கவில்லை என நினைக்கிறேன். ரகுமானின் சிறந்த மெலோடி பாடலாக இதைத் தான் சொல்வேன். வைரமுத்திடமிருந்து முத்து முத்தான வரிகள்!
முதல் சரணம் ஆரம்பிக்கும் முன் வயலினில் ஆரம்பித்து கிதாருக்கு மாறி டிரம்ஸூடன் முடிப்பது அருமை.

4. இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை

திரைப்படம்: திருவிளையாடல்
பாடியவர்கள்: டி.ஆர்.மகாலிங்கம்
இசை: கே.வி.மகாதேவன்

என்னவொரு தெய்வாதீகமான இசை, குரல்!

இந்தப் படத்தின் பாடல்களை இந்த தலைமுறை கூட ரசிக்கும் படி இசையமைத்த திரு. கே.வி.மகாதேவன் பெரிய இசைஞானியாகத் தானிருக்க வேண்டும். எனக்கு அவரைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. தில்லானா மோகானாம்பாள் கூட இவர் இசையில் உருவானது என நினைக்கிறேன்.

'உயிர் மயக்கம் நாதப் பாட்டினேலே', என்று அவர் பாடும் வரிகளிலும் நமக்கும் மயக்கம் ஏற்படுகிறது.

பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன' என விழிக்குமிடத்தில், திரு. கே.வி.மகாதேவன் இசையும், மகாலிங்கத்தின் தமிழும் அழகாக சங்கமிக்கின்றன.

தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ?
அன்னைத் தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ?
வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா.......
உன் ஊருக்குப் பழி நேர்ந்தால், உனக்கின்றி எனக்கில்லை

என இறைவனிடம் டி.ஆர்.மகாலிங்கம் முறையிடுமிடம் உயிரோட்டத்துடன், அற்புதமாக இருக்கும். என்ன ஒரு பாடல், இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ இப்படி ஒரு பாடலுக்காக?

5. செண்பகமே செண்பகமே

திரைப்படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
பாடியவர்கள்: சுனந்தா, மனோ
இசை: இளையராஜா

ராமராஜனுக்குப் பேர் வாங்கி கொடுத்த படம். ராமராஜனின் எளிமையான பாடி லாங்குவேஜ் எனக்குப் பிடிக்கும். இந்தப் பாடலில் சொல்லுமளவிற்கு பெரிதாக அவர் நடிக்கவில்லை என்றாலும் (அவர் எப்பய்யா நடிச்சார் என நீங்கள் கூறுவது கேட்கிறது), இந்தப் பாடலின் சூழலும், கதைக் களமும், இசையும் பிடித்திருந்தது. தூங்கிக்கொண்டிருந்தாலும் (காதில் விழுந்தால்) எழுந்திருந்து கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. எத்தனை முறை டி.வியில் பார்த்தாலும் சலிக்காத படம். வினுசக்ரவர்த்தியும், செந்தாமரையும் கலக்கியிருப்பார்கள். ஒரே காட்சியில் செந்தாமரை எல்லாரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டிருப்பார். அடிக்கடி நான் உச்சரிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. மனோவிற்கு பேர் வாங்கிக் கொடுத்த பாடல்களில் முதலிடம் இதற்கு.

6. ஆணென்ன பெண்ணென்ன

திரைப்படம்: தர்மதுரை
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா

இளையராஜாவின் இசைக்காகவும், எஸ்.பி.பியின் குரலுக்காகவும், சிறந்த பாடல் வரிகளுக்காகவும் இந்தப் பாடலைப் பிடிக்கும். வாழ்க்கை வேகமாக சுழன்று கொண்டிருக்கும் போது, "Wait Wait நீ என்ன செய்ற' என யோசிக்கத் தூண்டும் பாடலிது. பணம், அதிகாரத்த்தை விட மனித உறவும், பாசமும் மிக முக்கியம் என்பதை அழகாகச் சொல்லிய பாடல். ஆரம்பத்தில் Party Music-ஐ மீறிக் கொண்டு ராகம் போடும் எஸ்.பி.பியின் குரல் என்னே அழகு!

எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா இன்றும் என்றும் சோகமில்லை
கன்றை விட்டுத் தாய் பிரிஞ்சு காணும் சுகம் ஏதுமில்லை
ஊருக்கும் காருக்கும் பேருக்கும் இஷ்டப்பட்டு
வாழ்கின்ற வாழ்வுக்கைக்கு என்றைக்கும் அர்த்தமில்லை!

என்ன வரிகள்! என்ன ஒரு அருமையான ராகம்! "எண்ணங்கள் சேர்வது தானே" கடினம் வாழ்வில்!!! அது மட்டும் அமைந்து விட்டால் வாழ்வில் ஏது சிக்கல்.

7. மனதில் ஒரே ஒரு பூ பூத்தது, மலரும் நினைவுகள் நான் சொல்வது

திரைப்படம்: என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
பாடியவர்கள்: சுசீலா
இசை: இளையராஜா

காதலனின் குழந்தை, "நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?" என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாய் அமையும் பாடல். இந்தப் பாடலை ஒரு முறை தான் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சுகாசினியின் நடிப்பும், பாடலின் மூலமாக நாயகனை கோழை என நாயகி சாடும்போது விஜயகாந்தின் ரியாக்சனும் நன்றாக இருக்கும் (நன்றாக இருந்ததாக நினைவு). நன்றாக எடுத்திருந்தார் மனோபாலா. விஜயகாந்த் நன்றாக செய்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.

'தேவனின் கோவில்' பாடலுக்கு, சித்ரா என்றால், இந்தப் பாடலுக்கு சுசீலா. Low Pitch-ல் அருமையாக பாடியிருப்பார் சுசீலா. சுசீலா அந்த காலங்களில் பாடியதை விட, இளையராஜாவிற்கு பாடிய பாடல்கள் தான் அருமை. (சிப்பிக்குள் முத்து, இளமை காலங்கள், எங்க ஊர் காவல்காரன், கற்பூர முல்லை, பிரியா உட்பட)

மணி மார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்

என்ற வரிகளை மெதுவாக, உருகிப் பாடியிருப்பார்.

இறுதியில் வரும் புல்லாங்குழல் அருமை. மனது எந்த நிலையில் இருக்கும் போதும் கேட்க முடியக் கூடிய பாடல்களில் இதுவும் ஒன்று.
எப்படித் தான் இளையராஜாவிற்கு இந்த மாதிரியான ராகங்கள் தோன்றுகின்றனவோ?

8. இசையில் தொடங்குதம்மா

திரைப்படம்: ஹே ராம்
பாடியவர்கள்: அஜய் சக்ரவர்த்தி
இசை: இளையராஜா

ராஜாவின் பாடல் என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது இந்த பாடல் தான். இந்தப் படம் வருவதற்கு முன்பாக வந்த டிரைய்லரில் இந்தப் பாடலின் ரிக்கார்டிங் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடல் பதிவு செய்யும் போது கமலஹாசன் ரிக்கார்டிங் தியேட்டரில் உணர்ச்சிவசப்பட்டு தாளம் போடுவார். இதற்காகவே காத்திருந்து டிரெய்லரைப் பாப்பேன். (ராஜ் டிவியில் மட்டும் தான் அப்போது டிரெய்லர்கள் ஒளிபரப்பப்பட்டன). பாடலின் உயிரோட்டத்திற்குக் காரணம் இசையிலும், குரலிலும் இருக்கிறது. ஏன் அஜய் சக்ரவர்த்தி வேறு பாடல்கள் தமிழில் பாடவில்லை என இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் தோன்றும்.

நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே உயிர்களே உலகிலே
இன்பத்தை தேடி தேடி தேகத் தீ வந்ததே

உருகியிருப்பார்.

9. ஒரு கணம் ஒரு யுகமாக தோன்ற வேண்டுமோ

திரைப்படம்: நாடோடி தென்றல்
பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

இந்தப் பாடலை நான் பார்த்ததில்லை. சோகத்தின் விளிம்பில் பாடப்பட்டது போல் தெரிந்தாலும், இந்தப் பாடலில் ஏதோ ஓர் மந்திர சக்தி இருக்கிறது. ஜானகியை விட இளையராஜாவின் குரல் மிக அருமையாக இருக்கும். நடுவில் ஐந்து விநாடிகள் தாமதித்து (3:12-3:17) ராஜா பாடும் அந்த வரிகளும் அதைத் தொடர்ந்து வரும் வயலினும் அருமை.

10. ஆசாதி

திரைப்படம்: போஸ் த ஃபார்காட்டன் ஹீரோ
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

ரகுமான் பாடிய மற்றுமொரு சிறந்த பாடல். இதனை பெங்களூர் இசை நிகழ்ச்சியில் ரகுமான் பாடிய விதமே அலாதி. இந்தப் பாடலில், 'ஆசாதி' என குரலை உயர்த்தும் போது, நண்பர்கள் அனைவரும் ஹேய் என ஆரவாரம் செய்த போது, அமைதியாகப் பாடிக் கொண்டிருந்தவர் லேசாக புன்னகையை மட்டும் சிந்திவிட்டு அடுத்த வரிக்குச் சென்று விட்டார். பார்ப்பதற்கே பரவசமாக இருந்தது. ஹிந்தி எனக்குப் புரியாது; ஆனாலும் இந்தப் பாடல் ஓரளவிற்கு முழுவதும் பாடிக் கொண்டிருப்பேன். என்னுடைய Portable MP3 பிளேயரில் எப்போதும் அழிக்காமல் வைத்திருக்கும் பாடல்.

11. வாணும் மண்ணும் ஒட்டிக் கொண்டது

திரைப்படம்: காதல் மன்னன்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா
இசை: பரத்வாஜ்

நிறைய பேருக்கு இந்தப் பாடல் பிடிக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலை எனக்கு நிறையவே பிடிக்கும். சூழ்நிலையால் கட்டுண்ட காதலர்கள் பாடும்படி அமைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு வைரமுத்துவின் வரிகள் பலம். பரத்வாஜ் திறமையான இசையமைப்பாளர். ஆனால் அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமைவதில்லை. இந்தப் பாடலில் என்னவொரு இசையைத் தருவித்திருப்பார்!. அதுவுமில்லாமல், இந்தப் படத்தில் அஜீத்தும், அந்தப் பெண்ணும் சந்திக்கும் போது பின்னணியில் வரும் வயலின் இசை அருமையோ அருமை. அதற்காகவே இந்தப் படத்தை பார்பேன்.

பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பது இல்லை
உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை

காலம் சொல்லுவதை காதல் கேட்பதில்லை
ஆசை என்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை

ஓர் நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ?

12. பூவே பூச்சூடவா

திரைப்படம்: பூவே பூச்சூடவா
பாடியவர்கள்: சித்ரா
இசை: இளையராஜா

டி.டியில் இந்தப் படத்தை முதன் முதலில் பார்த்ததிலிருந்தே இந்தப் பாடல் மிகவும் பிடித்து விட்டது. பிரிந்து சென்று விட்ட பேத்தியின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பாட்டியினைப் பற்றிய பாடல்.

'அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
....
இந்தக் கண்ணீரில் சோகமில்லை
இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

அன்பின் ஆழம். சித்ராவின் குரல் பற்றி நான் சொல்லவும் வேண்டுமா?. கல்லூரி சென்ற பின், நான் பதிந்த முதல் கேசட்டின் நான்காவது பாடலாக இடம் பிடித்திருந்தது.

13. இரு பூக்கள் கிளை மேலே - கண்ணீரே கண்ணீரே

திரைப்படம்: உயிரே
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

ரகுமானின் அட்டகாசமான பாடல்களில் இதுவும் ஒன்று. அவருடைய பாடல்கள் என்றாலே இதுவும், வெள்ளைப் பூக்களும் தான் எனக்கு ஞாபகத்திற்கு வரும். தீ போன்ற இசையும், புயல்காற்று போல வரிகளும் சேர்ந்தொலிக்கும் இந்தப் பாடலுக்கு, தீயில் வழிந்த தேன் போல ரகுமானின் குரல். இரண்டாம் சரணத்திற்கு முன்பாக வரும் டிரம்ஸும், பாடலின் பின்னணியில் வரும் கிரிக்கெட் பூச்சியின் சத்தமும் மிகவும் பிடிக்கும்.

கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்.

உன்னோடு நான் கொண்ட நான் பந்தம்
மண்ணோடு நான் கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்

14. பூங்குருவி பாடடி சுபராகம் தேடித் தான்

திரைப்படம்: சுந்தர காண்டம்
பாடியவர்கள்: மனோ
இசை: பாக்யராஜ்

இங்கே குறிப்பிடப்பட்ட பாடல்களில், என்னிடம் இல்லாத ஒரே பாடல் இது தான். ஆதலால், இந்தப் படம் எப்போது ஒளிபரப்பப்பட்டாலும் தவறாது பார்த்து விடுவேன்; இந்தப் பாடல், படத்தில் இரண்டு முறை இடம் பெறும். தந்தையின் மரணத்தினால் வாடும் நாயகியை ஆறுதல் படுத்துவதற்காக பாக்யராஜீம், நாயகி மரணத்தின் வாயிலில் இருப்பதை அறிந்து வருத்தப்படும் பாக்யராஜீற்கு அதே பாடலை திரும்ப நாயகி பாடிக்காட்டுவதும் உணர்வு பூர்வமாக இருக்கும். அடிக்கடி உச்சரிக்கும் பாடல்களில் ஒன்று.

பூப்பதொரு காலம்
காய்ப்பதொரு காலம்
இலையுதிர்காலமும் ஓர் காலம்
என்றும் இல்லையே கார் காலம்

காலம் ஓர் ஓலை
கொண்டு வரும் நாளை
நடப்பது காலத்தின் ராஜாங்கம்
மீறிட யாருக்கு அதிகாரம்

பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. யாராக இருந்தாலும், அவருக்கு ஓர் சபாஷ். அதை இனிய இசையின் மூலம் வெளிப்படுத்திய பாக்யராஜிற்கும் தான். இந்தப் பாடல் யாரிடமாவது இருந்தால் அனுப்பவும். சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பரிடம் இருந்து கிடைத்தது. ஆனால், ஒரு பக்கம் மட்டும் தான் பாடல் ஒலிக்கிறது.

15. அஞ்சலி

திரைப்படம்: அஞ்சலி
பாடியவர்கள்: குழுவினர்
இசை: இளையராஜா

எனக்கு ஞாபகம் தெரிந்து, பாடல்களின் மீது ஆர்வம் ஏற்பட்டது இந்தப் படத்திலிருந்து தான். சிறுவர்களை மிக சாமர்த்தியமாகப் பயன்படுத்தி, பாட வைத்திருப்பர் ராஜாவும், ரத்னமும். அஞ்சலி இல்லாமல், மணிரத்னத்தின் இயக்கம் முழுமை பெற்றிருக்காது என்பது என் கணிப்பு. இளையராஜாவின் 500 வது படம் எனவும் நினைவு.

16. கடவுள் உள்ளமே கருணை இல்லமே

திரைப்படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
பாடியவர்கள்: லதா ரஜினிகாந்த், குழுவினர்
இசை: இளையராஜா

நாம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என நம்மை ஓர் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிவிடும் பாடலிது. எப்போது கேட்டாலும், பார்த்தாலும் நம்மை கல்லாக்கி விடும் பாடல். படமாக்கிய விதமும் அருமையாக இருக்கும். என்னுடைய முதல் பத்து பாடல்களில் இந்தப் பாடலுக்கு கண்டிப்பாக இடம் உண்டு.

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை.

ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே
அது போல் உயிர் பிறப்பில்

உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உனக்கே நன்றி சொல்லுவோம்

ஜீவனுள்ள ராகம். எவ்வளவு நிதர்சமான உண்மை.

நாமெல்லாம் எத்தனை முறை உணவருந்துவதற்கு முன்பாக இறைவனுக்கு நன்றி சொல்லியிருப்போம்? அதாவது... கிடைத்த உணவின் அருமை தெரிந்து, உண்டிருப்போம்?

17. கேட்கலியோ கேட்கலியோ

திரைப்படம்: கஸ்தூரிமான்
பாடியவர்கள்: திப்பு, மஞ்சரி
இசை: இளையராஜா

இதைப் பற்றி ஏற்கனவே என்னுடைய இன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பாடலுக்கு அழகே ஆரம்பத்தில் வரும் இசையும், குழுவினரின் தெளிவான குரலும் தான். சமீபத்தில் வந்த பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் இது. என்னை பல முறை வார இறுதி நாட்களில் சன் மியுசிக்கின் மூலமாக அதிகாலையில் (9 மணியளவில்) எழுப்பிய பாடல். கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தப் பாடல் போல, வேறெந்த பாடலின் ராகமும், பாடிய விதமும் என்னைக் கவரவில்லை. சமீபத்தில் இப்படி ஒரு கோரஸைக் கேட்டதில்லை.

18. வெள்ளை பூக்கள்

திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

அதிகமாக பேசப்படாத, ஆனால் தெய்வாம்சமான பாடல் (குரல் உட்பட). சமத்துவத்தையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் பாடல். படத்தில் பாடல் ஒலிக்கும் இடம் அருமை. ஆரம்பத்தில் வரும் கிடார் இசை இனிமை. ரகுமானின் குரல் Fabulous! அவர் ஓர் ஓர் ஜீனியஸ் எனத் பற்றித் தெரிந்து கொள்ள இந்த ஒரு பாடல் போதுமானது. இதே படத்தில் (படத்தில் மட்டும்) வரும் 'சட்டென நனைந்தது' என்ற குறும்பாடலை மிகவும் பிடிக்கும்.

19. சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை

திரைப்படம்: ஜெயராம்
பாடியவர்கள்: சுமங்கலி
இசை: அனூப் ரூபன்ஸ்

இந்தப் பாடல் ஏன் பிடித்ததென்று தெரியவில்லை. அழகான இசையும், பாடகியின் குரலும் காரணமாக இருக்கலாம். சுமங்கலி என்ன அருமையாக பாடியிருக்கிறார்? சமீபத்தில் இவர் சில பாடல்கள் தமிழிலும் பாடியிருக்கிறார். பாடலின் இறுதியில் வரும் ஹம்மிங் அழகாக இருக்கும் (4:10 - 4:28)

20. பூவே வாய் பேசும் போது

திரைப்படம்: 12B
பாடியவர்கள்: மஹாலக்ஷ்மி அய்யர், ஹரீஸ் ராகவேந்திரா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

இந்தப் படத்தில் பாதித்த ஒரே கதாபாத்திரம் சிம்ரனது மட்டும் தான். ஆரம்பத்தில், மருத்துவமனையில் உறவினர் அல்லது காதலரின் இறப்பினால் அழுது கொண்டே தோழியின் தோளில் சாயும் சிம்ரன், படம் முடியும் தருவாயிலும் அதே போல ஷாமை இழந்து தோழியினை நோக்கி அழுது கொண்டே வருவது டச்சிங்காக இருக்கும். படம் நன்றாக ஓடாவிடிலும், இவரின் கதாபாத்திரத்திற்காகவும் (பார், ஆக்ஸிடெண்ட்க்கு முன்பாக, மருத்துவமனையில் சிம்ரன் பேசுவது), இந்தப் பாடலுக்காகவும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை மட்டும் முப்பது முறையாவது பார்த்திருப்பேன். விசிலுடன், பாடலின் ஆரம்பமே அட்டகாசம். மஹாலக்ஷ்மியின் குரல் மிகப் பொருத்தம்.

21. உன் பேரைச் சொன்னாலே

திரைப்படம்: டும் டும் டும்
பாடியவர்கள்: சாதனா சர்கம், உன்னிகிருஷ்ணன்
இசை: கார்த்திக் ராஜா

கார்த்திக் ராஜா, ஓர் சிறந்த இசையமைப்பாளர். ஆனால் ஏனோ அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டன. அவரின் ஆல்பம் படத்திலும் அனைத்துப் பாடல்களும் சிறப்பாக இருக்கும். இந்தப் பாடலைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமிருக்காது. உங்களில் பெரும்பாலோனோர்க்கு பிடித்த பாடலாகவும் இருக்கும் என எண்ணுகிறேன். என்னுடைய இருபது பாடல்கள் பட்டியலில் கண்டிப்பாக இந்தப் பாடலுக்கு இடமுண்டு. சாதனா சர்கத்தின் குரல் அருமை. கடைசியில் இழுக்கும் இழுவை சிறப்பாக இருக்கும்.

22. வெள்ளி மலரே
திரைப்படம்: ஜோடி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், மஹாலக்ஷ்மி அய்யர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, ஓரளவு சுமாரான பாடலைக் கேட்டாலும் ரசித்துக் கேட்போம். ஏனென்றால், பேருந்தில் வேறெந்த வேலையும் இருக்காது. கவனம் முழுவதும் பாடலின் மீது இருக்கும். சில நேரங்களில் நல்ல பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்து விடுவார்கள்; அய்யோ வீடு வரப்போகிறதே ஊர் இன்னும் சிறிது தூரம் இருக்கக் கூடாதா இன்னும் சில பாடல்களைக் கேட்டு விட்டுப் போகலாம் எனத் தோன்றும். அலுவலகத்தில் சிறந்த பாடலைக் கேட்கும் போது கூட, கவனிப்பு வேலையின் மீது இருக்கும். நான் கல்லூரியில் படித்த(?) நாட்களில், ஒரு குறிப்பிட்ட பேருந்தில் இந்தப் படத்தின் பாடல்களை ஒலிபரப்புவார்கள். இந்தப் பாடலைக் கேட்கவேண்டும் என்பதற்காகவே அந்தப் பேருந்திற்காக காத்திருந்து ஏறுவேன். முழுவதுமாக கவர்ந்த பாடல். ஆனால் இதன் ஆரம்பத்தில் வரும் 'தாகாட தாகாட' இனிமையாக இருக்கும். அது முடிந்ததும் வரும் இசையும், மஹாலக்ஷ்மியின் குரலும் சிறப்பு.

23. ஒரு பொன் மானை நான் காண

திரைப்படம்: மைதிலி என்னை காதலி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர் படம் ஒன்று கூட நான் பார்த்ததில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில காட்சிகள் பார்த்ததுண்டு. ஆனால் தமிழில் இசைப் புரட்சி செய்தவர் என்று கூட இவரைக் குறிப்பிடலாம். இவரின் (அந்தக் காலப்) பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது. இசையில் என்ன ஒரு திறமை இவருக்கு?. இவரின் பல பாடல்கள் பிடித்திருந்தாலும், இந்தப் பாடலை முக்கியமாகப் பிடிக்கக் காரணம்,

தடாகத்தில் மீன் ரெண்டு
காமத்தில் தடுமாறி
தாமரைப் பூ மீது விழுந்தனவோ
இது கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ

என்று சரணத்தில் வரும் ராகமும், எஸ்.பி.பின் குரலும். ஆனால், மைதில் என்னை காதிலி, திரைப்படத்திற்குப் பின்பாக வந்த இவரது படங்களில் பாடல்கள், மிகவும் கவரவில்லை ஏனோ தெரியவில்லை.

24. மெதுவா மெதுவா இந்த காதல் பாட்டு

திரைப்படம்: அண்ணா நகர் முதல் தெரு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
இசை: எஸ்.சந்திரபோஸ்

பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை பாடலின் சூழலைப் பற்றி. மற்றுமொரு காதல் பாடல் தான். ஆனால் எப்போது கேட்டாலும், கேட்பவரை மயக்கிவிடும் பாடல். அசத்தும் இசை, குரல்.

25. சொல்லத் தான் நினைக்கிறேன்

திரைப்படம்: காதல் சுகமானது
பாடியவர்கள்: சித்ரா
இசை: பாலசேகரன்

சித்ராவும், இசையும், பாடல் வரிகளும் தான் இந்தப் பாடல் பிடித்துப் போனதற்குக் காரணம். படமாக்கிய விதமும் நன்றாக இருக்கும் (சில இடங்களில் சிநேகாவின் நடனத்தைத் தவிர்த்துப் பார்த்தால்). முதல் பத்து இடங்களுக்குள் இந்தப் பாடல் கண்டிப்பாக உண்டு.

....
தேகம் தேயும் நிலவானது
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட
கற்சிலை போல நெஞ்சில் அசையாதது'

ராகமும், சித்ராவின் குரலும் அப்பப்பா! (அருமை, இனிமை, சிறப்பு, அழகு அதிகமாக உபயோகிப்படுத்தியாகி விட்டது. வேறு வார்த்தைகள் எனக்குத் தெரியவில்லை. என்ன செய்வது?)

26. வேறென்ன வேறென்ன வேண்டும்

திரைப்படம்: மின்னலே
பாடியவர்கள்: ஹரிணி, உன்னிகிருஷ்ணன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

வசீகரா பாடலை விட, இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கக் காரணம் ஹரிணியின் குரல், அசத்தும் பீட்.

27. மன்றம் வந்த தென்றலுக்கு

திரைப்படம்: மெளனராகம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா

இந்தப் பாடலைப் பற்றி நான் எதுவும் கூற வேண்டியதில்லை. ராஜாவிற்கு ஜே!

28. வெட்டி வேரு வாசம் விடலை புள்ள நேசம்

திரைப்படம்: முதல் மரியாதை
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா

உயிரை உருக்கும் இசை. என்ன ஒரு நடிப்பு? நடிகர் திலகத்தின் நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான திரைப்படம். உயிரோட்டமான கதை. இந்தப் படத்தின் கதையையும், இசையையும், நடிகர்களின் நடிப்பையும், பாடல் வரிகளைப் பற்றி பேச வேண்டுமானால் 100 பதிவுகள் வேண்டும். இது போன்ற அருமையான படங்களைக் கொடுத்த பாரதிராஜா, இப்போது திணருவதைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தது. பூங்காற்று ஆகட்டும், ராசாவே உன்னை நம்பி, அந்த நிலாவத்தான், ஏறாத மலையேற ஆகட்டும், ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதத்தில் சிறந்தது.

29. வந்தே மாதரம் - Revival

திரைப்படம்: வந்தே மாதரம் (ஆல்பம்)
பாடியவர்கள்: சுஜாதா, கல்யாணி மேனன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

சாதாரணமாக இந்திய வானொலி நிலையங்களில் ஒலித்து வந்த வந்தே மாதரம் பாடலை, திரும்ப அருமையாக இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானின் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சுஜாதாவின் குரல், பாடல் முழுவதும் தவழ்ந்து தேன் போல் பாய்கிறது. குழுவினருடன், கல்யாணி மேனன் பாடலை ஆரம்பிக்கும் வரிகளே உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. மெதுவாக செல்லும் பாடல் (2:03 முடிய), ஒரு அழகான பியானோ இசைக்குப் பிறகு (2:22) சுருதியை உயர்த்தி மீண்டும் ஆரம்பிப்பது அழகு! ஏதோ ஓரு சுதந்திர தினத்திற்கு (திருச்சியோ, மதுரை வானொலி நிலையமோ ஒலி பரப்பிய) இந்தப் பாடலை ஒரு வீட்டின் வாசலிலேயே நின்று பாடலைக் கேட்டது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

சுஜாதா எனக்குப் பிடித்த பாடகிகளில் ஒருவர். ஏனோ இப்போது பாடுவதற்கு அவருக்கு, ஏ.ஆர்.ரகுமான் வாய்ப்பு கொடுப்பதில்லை. ஹரிணியும், கண்களால் கைது செய், நியூ படங்களுக்குப் பின் எந்தப் (ரகுமான்) படத்திலும் பாடவில்லை.

30. மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்

திரைப்படம்: அழகு நிலா (1962)
பாடியவர்கள்: டாக்டர். சீர்காழி கோவிந்தராஜன்
இசை: கே.வி.மகாதேவன்

பிடித்தமான மற்றுமொரு தத்துவப் பாடல். ஆனால் இம்முறை எனக்குப் பிடித்த பாடகர் டாக்டர். சீர்காழி அவர்களின் குரலில். சீர்காழி அவர்களின் குரலில் தமிழ் வார்த்தைகள் ஒலிப்பதைக் கேட்தற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். உயிரோட்டமில்லாத பாடல்களைக் கூட, டாக்டர். சீர்காழி அவர்களின் குரலில் கேட்டால் பிடித்துப் போய் விடும். இவரின் விநாயகர் துதிப் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகைத் தெரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை
.....
மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை.

நான் "இப்படியிருந்திருந்தால்" என ஆசைப்படும் விசயங்களில் ஒன்று. ஏ.ஆர். ரகுமானின் இசையில் டாக்டர். சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது. எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்?

31. விழிகளின் அருகினில் வானம்

திரைப்படம்: அழகிய தீயே
பாடியவர்கள்: ரமேஷ் விநாயகம்
இசை: ரமேஷ் விநாயகம்

இந்தப் பாடலை பிடிக்கவில்லை எனக் கூறுபவர்கள் யாராவது இருப்பார்களா?

அலை கடலாய் இருந்த மனம்
துளிதுளியாய் சிதறியதே
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே

அருமையான் ராகம். ரமேஷ் விநாயகத்திற்கு நல்ல வாய்ப்புகள் அமைந்து, இன்னும் பல படங்கள் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். கடைசியாய் 'தொட்டி ஜெயாவில்' 'யாரிடமும்' என்றோர் அருமையான பாடலைப் (ஹரிணியுடன் இணைந்து) பாடினார். இப்போது எந்த படத்தில் பணிபுரிகிறார் எனத் தெரியவில்லை.

32. அம்மா என்றழைக்காத

திரைப்படம்: மன்னன்
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: இளையராஜா

இந்தப் பாடலைப் பற்றி சொல்ல எந்த வார்த்தையும் இல்லை. அது சிறப்பாக இருந்தது. இது சிறப்பாக இருந்தது எனக் கூற முடியாது. வேண்டுமானால் 'இசைத் தமிழ்' போல இது ஓர் தெய்வாதீசயமான பாடல் எனக் கூறலாம். ஜேசுதாஸ் விட யாராவது இதை சிறப்பாக பாடியிருக்க முடியுமா? சந்தேகம் தான்.

படத்தின் கிளைமேக்ஸிற்கு முன்பாகவும், ரஜினி பண்டரி பாயை சக்கர நாற்காலியில் வைத்து சுற்றும் போதும் மீண்டும் இந்த பாடல் ஒலிக்கப் பெறும். மிக அருமையாக இருக்கும்.

33. வா வா கண்ணா வா

திரைப்படம்: வேலைக்காரன்
பாடியவர்கள்: சித்ரா, மனோ
இசை: இளையராஜா

இந்தப் பாடல் எனக்கென்னவோ மிகவும் பிடித்து விட்டது. காரணம் இசையா அல்லது சித்ராவா என எனக்குத் தெரியவில்லை. எந்த மனநிலையில் இருந்தாலும், இந்தப் பாடலை கேட்க முடியும்.

34. பழமுதிர்சோலை

திரைப்படம்: வருஷம் 16
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: இளையராஜா

இளமை துள்ளும் பாடல் - வித்தியாசமாக ஜேசுதாஸின் குரலில், ராஜாவின் இசையில். எந்த மனநிலையில் இருந்தாலும், இந்தப் பாடலை கேட்க முடியும்.

35. நினைத்து நினைத்துப் பார்த்தேன்

திரைப்படம்: 7G ரெயின்போ காலனி
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல்
இசை: யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜாவிற்குள் இப்படி ஒரு மென்மையான உணர்வா என கேட்க வைத்த பாடல். படம் வருவதற்கு முன்பாகவே நூறு தடவைக்குப மேல் கேட்ட பாடல், படம் பார்த்த பின் இந்தப் பாடலைத் தவிர மூன்று நாட்களுக்கு வேறேந்த பாடலையும் கேட்கத் தோன்றவில்லை. ஆரம்பத்தில் வரும் பியானோ இசையும், நடுவில் வரும் வயலின் இசையும், ஸ்ரேயாவின் கொஞ்சும் தமிழும் அழகு. நா.முத்துக்குமாரின் வரிகளைப் பற்றி நான் கூறத் தேவையில்லை. நான் வயதானவர் என்று நினைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்பு தான் பார்த்தேன். வயது அவருக்கு முப்பது கூட இருக்கும் எனத் தோன்றவில்லை.

36. உன்னை ஒன்று கேட்பேன்

திரைப்படம்: புதிய பறவை
பாடியவர்கள்: சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

சுசிலாவின் குரலா? அல்லது சரோஜாதேவியின் அழகா? எது இந்தப் பாடலில் சிறப்பு என சொல்லமுடியாத அளவிற்கு இனிமையான பாடல். இந்த இரண்டையும் விட நான் இந்தப் பாடலில் விரும்பிப் பார்ப்பது சிவாஜி கணேசன். மனிதர் சாக்ஸ போனை உண்மையான கலைஞன் போலவே வாசித்திருப்பார் (2:20 - 2:32). வாசித்து முடிந்ததும், அந்த வாத்தியக் கருவியை கீழே வைத்து விட்டு, ஸ்டைலாக மேடையை நோக்கி கையை சொடுக்கிக் கொண்டே நடப்பார். அதுவுமில்லாமல் முதல் சரணத்திற்கு முன்பாக பியானோவை சொடுக்கிக்கொண்டே வாசிப்பார். எனக்கு சிரிப்பு வந்து விடும். அருமையாக இருக்கும்! இரவில் 11 மணிக்கு மேல், வாரம் ஒரு முறையாவது சன் மியுசிக்கில் இந்தப் பாடல் இடம் பெற்று விடும்.

37. நிலா காய்கிறது... நிறம் தேய்கிறது

திரைப்படம்: இந்திரா
பாடியவர்கள்: ஹரிணி
இசை: ஏ.ஆர்.ரகுமான்

முழுமையான மெல்லிசை. எவ்விதமான Beat-ம் இல்லாமல், Loop-ம் இல்லாமல், வந்த இதமான மெல்லிசைப் பாடல். ஹரிணியின் முதல் பாடல் என்று கூட நினைக்கிறேன். சிறு குழந்தை போலவே பாடியிருப்பார். ஆரம்பத்தில் வரும் ஹரிணியின் ஹம்மிங் பிரமாதமாக இருக்கும்.

இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம்
உங்கள் தேவையைக் கேளுங்கள்!

அருமை இல்லையா?

38.. மேகம் கருக்கையிலே

திரைப்படம்: வைதேகி காத்திருந்தாள்
பாடியவர்கள்: இளையராஜா
இசை: இளையராஜா

எனக்குப் பிடித்தமான பாடகர் ஜெயச்சந்திரன் பாடிய சிறந்த இரண்டு பாடல்கள் இந்தப் படத்தில் இருக்கும் போது, இந்தப் பாடலை தேர்ந்தெடுக்கக் காரணம், இளையராஜாவின் குரலும், ஜனரஞ்சகமான இசையும் தான். பல்லவி முடிந்ததும் வரும் புல்லாங்குழல், இனிமையாக இருக்கும்.

39. காளிதாசன் கண்ணதாசன்

திரைப்படம்: சூரக்கோட்டை சிங்கக் குட்டி
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், சுசீலா
இசை: இளையராஜா

ஆரம்பமே இளையராஜாவின் (இது இளையராஜாவா அல்லது ஜெயச்சந்திரன் தானா எனத் தெரியவில்லை) அற்புதமான ஹம்மிங்கில் பாடல் துவங்கும். இளையராஜாவைத் தவிர அப்படி ஹை-பிட்சில் வேறு யாரும் பாட முடியாது என்ற நம்பிக்கையில் அது இளையராஜா என சொல்கிறேன். தவறாக இருந்தால், தெரிந்தவர்கள் சொல்லவும். அந்த ஹம்மிங்கிற்காகவே இந்தப் பாடலைக் கேட்பேன். ஜெயச்சந்திரன் தமிழில் பாடியது சில பாடல்களே ஆனாலும், பல சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார். அதில் இதுவும் ஒன்று.

40. ஒரு தெய்வம் தந்த பூவே

திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
பாடியவர்கள்: சின்மயி, ஜெயச்சந்திரன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

பட்டியலை முடிக்க, இந்தப் பாடலை விட வேறொரு சிறந்த பாடல் இருக்க முடியாது. ஆனந்த அவஸ்தையாக, தன் குழந்தையை பற்றி தாய் வர்ணிக்கும்படியாக வரும் வைரமுத்துவின் வரிகள், இந்தப் பாடலுக்குச் சிறப்பு. வேறெந்த பாடலும், இது போல் அமைந்ததாக நினைவில்லை. ரகுமான் இசை, இந்தப் பாடலைக் கேட்கும் போது, தெய்வத்தின் பாதங்களை தொட்டு விட்டு வந்தது போல் ஓர் உணர்வை தருகிறது. காந்தக் குரல் சின்மயினுடையது. சுனாமி பேரழிவிற்கு சில மாதங்கள் பிறகு, காரைக்காலில், இந்தப் பாடலை ஏ.ஆர்.ரகுமானின் குழுவினர் இசைத்த போது, நிசப்தம். அவ்விடத்திற்கும், அங்கிருப்பவர்களின் உணர்விற்கும் இப்பாடலின் இசை பொருத்தமாக அமைந்தது.

ரகுமானின் பாடல்கள் எட்டு மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது சிறிது வருத்தத்தை அளிக்கிறது. அவரின் பல முக்கியமான பாடல்களில் பட்டியலில் இடம்பெறாததற்குக் காரணம், அவரின் பல படங்களில், பல பாடல்கள் பட்டியலில் இடம் பிடித்ததே. (உ.ம். உயிரே. வேறு வழியில்லாமல், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால் பாடல்களை இந்தப் பட்டியலில் சேர்த்து விட்டேன். அந்தப் பாடல்கள் இல்லாமல், நிச்சயம் என்னுடைய எந்தப் பட்டியலும் முழுமை பெறாது). ரகுமானின் இசைக்கச்சேரி, ஏப்ரல் 15-ம் தேதி, மாதத்தில் மிச்சிகனில் (Eastern Michigan University) நடைபெறப்போவதாகக் கேள்வி பட்டேன். முடிந்தால் சென்று வாருங்கள்!

பல ஆண்டுகளாக, தமிழகத்திலிருந்து பல சிறந்த இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளனர். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என வரிசையாக சிறந்த இசைஞானிகளை தமிழகம் கொடுத்திருப்பது. இந்த வரிசை இப்படியே நின்று விடாமல், யுவன், கார்த்திக், ஹாரிஸ், வித்யாசாகர், விஜய் ஆண்டனி, பரத்வாஜ் என நீண்டு கொண்டே செல்கிறது. இந்தியாவிற்கே, தமிழகம் தான் இசையில் வழிகாட்டியாக இருப்பது, பெருமைப்பட வைக்கிறது. சென்னையை, நாம் தாராளமாக 'இந்தியாவின் இசைத் தலைநகர்' என அழைக்கலாம்.

பல சிறந்த பாடல்களை இடமின்மை காரணமாக இங்கே கொடுக்க முடியவில்லை. உங்களுக்கு இந்தத் தொகுப்பு பிடித்திருந்தால் நட்சத்திர வாரம் முடிந்ததும், அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.

புதன், மார்ச் 08, 2006

கெட்ட புத்தியும் பச்சரிசி சாப்பாடும்

கெட்ட புத்தியும், பச்சரிசி சாப்பாடும்

மதிய இடைவேளை. உணவருந்துவதற்காக, வெளியே செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம்.

"எங்கே சாப்பிட போகலாம்? கிருஷ்ணா ஃகபே?", என நண்பரிடம் கேட்டேன்.

"வேண்டாம். பொன்னுசாமி போகலாம்"

"ஏன்? கிருஷ்ணா ஃகபேக்குப் போகலாம்"

"இல்லப்பா... பச்சரிசி சாப்பாடு. அப்புறம் அவங்க மாதிரியே நமக்கும் புத்தி வந்திடும்"

????

எனக்கும், என் நண்பர்களுக்கும் அடிக்கடி நடக்கும் வாதம். என்னை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும் தலைப்புகளில் இதுவும் ஒன்று. பிராமணர்கள் எல்லாம் கெட்டவர்கள்; அனைவருமே ஒரே மாதிரி தான் சிந்திப்பார்கள், அவர்கள் கெட்டு ஒழிய வேண்டும் என எதற்கெடுத்தாலும் ஆரம்பிக்கும் சிலர் இங்கும் உண்டு.

அப்படி பேசுபவர்கள், எதற்காக அப்படி பேசுகிறார்கள்? அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு (மறைமுகமாகவோ, அல்லது நேரடியாகவோ) இருந்ததா? ஏன் அந்த பழைய விசயம், இவர்களின் மனதில் இப்படி ஓர் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கப் போகிறார்கள்? என எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது.

'இப்படி நீங்கள் பேசுவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா', என அவர்களிடம் கேட்டால், பெரும்பாலும், 'நாம் எல்லாரையும் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், நம்மை வாழ விடவில்லை', என்ற ஒரே பதிலை மட்டும் கூறுவார்கள்.

யார் யாரை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்; யார் கெட்டவர்கள்; யார் நல்லவர்கள் என்று ஆராய்ச்சி செய்வதால் இப்போது வாழும் நமக்கு என்ன பயன்? இன்றைய சூழலில், நல்ல முறையில் வாழ்வதற்கு அவசியமான காரணிகள் என்ன என்பதை மட்டும் யோசிப்பதை விட்டு விட்டு, 100 ஆண்டுகளுக்கு முன்பாக 'நமது முன்னோர்கள் மீது அநீதி கட்டவிழ்த்து விடப்பட்டது; நம்மை வாழ விடவில்லை', என்பன போன்ற விசயங்களைப் பற்றி பேசினால் யாருக்கு என்ன லாபம்? மனதில் காழ்ப்புணர்ச்சி மட்டும் தான் வளரும்.

இப்போதிருக்கும் எல்லா கெட்ட நிலைகளுக்கும் பிராமணர்களை மட்டுமே காரணமாகக் கூறுவதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. இப்போதிருக்கும் நிலைக்கு (அது நல்ல நிலையோ, கெட்ட நிலையோ) நீங்களும், அதில் சம்பந்தப்பட்டவர்களுமே காரணமாக இருக்க முடியுமே தவர, சம்பந்தமே இல்லாத, உங்களுக்கு யாரென்றே தெரியாத சில மனிதர்களைக் காரணமாகக் கூறுவது சரியா? நன்றும் தீதும் பிறர் தர வாரா என்று சரியாகத் தானேச் சொன்னார்.

இன்னொரு நாள் அவரிடம் பேசியதில்....

"இவ்வளவு காட்டமா பேசுறீங்கன்னா, ஏதாவது காரணம் இருக்கணுமே. உங்களை யாரும் நம்ப வைச்சு ஏமாத்திட்டாங்களா?"

"அவங்க என்ன பண்ணலை? எத்தனை வருசம் அடிமைப்படுத்தி வச்சிருந்தாங்க தெரியுமா?. அதான் இப்ப அவங்க அனுபவிக்கிறாங்க...."

"இப்ப என்ன பிரச்சினை அவங்களால?"

"அவங்களாலத் தான் இப்ப எல்லாரும் கஷ்டப்படுறாங்க....."

"சரி எப்பவோ நடந்திருக்கலாம். நீங்களுக்கும் அனுபவிச்சதில்லை; நானும் அனுபவிச்சதில்லை. அவங்க, நீங்க சொல்றது மாதிரியே நடந்தாங்கண்ணே வச்சுக்கலாம். அதுக்காக, இப்பவும் எல்லாரும் அப்படியே இருப்பாங்க நினைக்கறது எந்த விதத்துல நியாயம்?. சரி உங்கள எடுத்துக்கங்க. உங்களுக்கு என்ன பிரச்சினை?. நல்ல தானே இருக்கிறீங்க? படிக்க வாய்ப்பு கிடைக்கிலையா? வேலை கிடைக்கைலையா? இல்ல யாரும் உங்கள மதிக்க மாட்டேன்றாங்களா?"

"அதெல்லாம் இப்போப்பா. ஒரு 60 வருசத்துக்கு முன்னாடி, இதெல்லாம் கஷ்டமா இருந்ததுல.

"இருக்கட்டும். ஏன் பழசையே பேசுறீங்க. நிகழ்காலத்துக்கு வாங்க. யாரோ ஏதோ செய்தாங்கன்னு, உங்க கோபத்தை எல்லாம், ஏன் இப்ப இருக்குறவங்க மேல காட்டுறீங்க?"

"ஆனா எப்ப வாய்ப்பு கிடைச்சாலும் திரும்ப பண்ணுவாங்கப்பா. அதான் அவங்களை அப்படியே வைக்கனும். அவங்களை எல்லாம் இப்படி அடக்கி வைக்கலைன்னா நீ கூட படிச்சு வந்திருக்க மாட்ட"

"இப்பத் தான் எல்லாருக்குமே எல்லாமே கிடைக்குதுல. பின்ன ஏன் இன்னும் நிறைய பேரைக் கஷ்டப்படுறவங்க?. அவங்களுக்கெல்லாம் நல்ல வழி கிடைச்சிருக்கணும் இல்லையா? உங்க ஊர்ல - உங்க சமூகத்தில படிக்காவங்க யாருமே இல்லியா?"

"இருக்காங்க"

"ஏன் இருக்காங்க?"

"எல்லாரும் எப்படிப்பா படிக்க முடியும்? கஷ்டப்படுறவங்க இருக்கத்தான செய்வாங்க. அவங்கள எல்லாம் எப்பவோ அடக்கியிருந்தா, இப்ப எல்லாருமே படிச்சிருப்பாங்க..."

"நீங்க நல்லா இருக்கிறீங்க. மாசம் லட்சம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறீங்க. அவங்களோட நிலைமைக்கு இவ்வளவு பரிவோட பேசுற நீங்க, அவங்களோட முன்னேற்றத்துல உன்மையிலேயே அக்கறை இருந்தா, அவங்களை நீங்க ஏன் படிக்க வைக்க கூடாது? பிராமணர்கள் செய்த அடக்கு முறையினால தான் மற்ற சமூக மக்களும், உங்க சமூகத்தினரும் கஷ்டப்பட்டாங்ங்கன்னே வச்சுப்போம். இப்ப நல்ல இருக்குற உங்கள மாதிரி ஆளுங்க, உங்க சமூகத்துல கஷ்டப்படுற மத்தவங்க முன்னேற்றத்துக்கு உதவக்கூடாது? இப்ப அவங்களோட நிலைமைக்கு, உங்களோட உதாசீனமும், அவங்களுக்கு உதவி செய்யனும்ற மனப்பான்மை உங்களுக்கு இல்லாததும் தான் காரணம். சுலபமா, மத்தவங்க மேல பழியப் போட்டுட்டு நீங்க தப்பிச்சிடுறீங்க. நீங்களே, உங்க ஆளுங்களுக்கு உதவி பண்ணுறதில்லை. ஆனா பேசும் போது மட்டும் சும்மா எங்க சமூகத்திற்கு அநீதின்னு சொல்றீங்க. அநீதி செய்றதெல்லாம் உங்கள மாதிரி ஆளுங்க தான். அதுவும் பெரும்பாலும், உங்கள மாதிரி படிச்சவங்க தான். கவர்மெண்ட் வந்து எல்லாருக்கும் வேலை கொடுத்து உயர்த்தி விடனும். அப்படி கிடைக்காம, இருக்கிறவங்களோட நிலைமைக்கு, பிராமணர்கள் தான் காரணம்னு சொல்லுறது சரியா? இன்னும் 100 வருசம் ஆனாலும் அவங்க தான் காரணம்னு சொல்லுவீங்க போலிருக்கு"

மற்றொரு நண்பரிடம் இன்னொரு நபரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தது...

"அவன் ஏங்க இப்படி பேசுறான்?"

"அய்யர் மாப்ளே அதான் அப்படி...."

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"

"எல்லா அய்யரும் அப்படித் தான் மாப்ளே. அவங்க எல்லாரும் அப்படித் தான் பேசுவாங்க. நான் அடிக்கடி சொல்லுவேனே... அவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்ணு. டைம் கிடைச்சா கால வாரி விட்டுடுவாங்க...."

"யாராவது ஒருத்தர் ரெண்டு பேர பாத்துட்டு, எல்லாரும் அப்படித்தான்னு சொல்லாதீங்க..."

"இல்ல மாப்ளே. எல்லாரும் அப்படித் தான்"

"எப்படி சொல்லுறீங்க?"

"நான் பாத்திருக்கேன் மாப்ளே"

"எத்தனை பேரைப் பாத்திருக்கீங்க?"

"நிறைய பேரைப் பாத்திருக்கேன்"

"எத்தனை பேர்? ஒரு பத்து பேர்"

"ம்...."

"சரி நூறு பேர்ன்னு வச்சுக்கலாம். இல்லைனா ஆயிரம் பேர்னு வச்சுக்கலாம். மிச்சம் லட்சக்கணக்கான பேர் இருக்காங்க. அவங்க யாரையுமே பார்க்காம அவங்க அப்படித்தான் அப்படித் தான்னு சொன்னா எப்படி? லட்சத்துல ஒருத்தன் கூடவா நல்லவன் இருக்க மாட்டான்?. ஒருத்தனை பாக்குறப்பவே இவன் இப்படித் தான் இருப்பான்னு கணிக்கிறது எந்த விதத்துல நியாயம்?"

"எனக்குத் தெரிஞ்சு அவங்க அப்படித்தான்பா"

"உங்க ஊர்ல கொலையே நடந்ததில்லையா?"

"இருக்கு"

"உங்க ஆளுங்க இது வரை யாருயுமே கொலை பண்ணுனதில்லையா?"

"பண்ணியிருக்காங்க"

"அப்ப அந்த கொலை பண்ணுனது உங்க ஜாதியைச் சேர்ந்தவன்ற காரணத்துக்காக, உங்க ஆளுங்க எல்லாருமே கொலைகாரங்கன்னு சொன்னா ஒத்துப்பீங்களா? ஒருத்தர் இரண்டு பேரை மட்டும் வச்சு பொதுப்படையா பேசுறது சரியா வராது. நான் யாரைவது ஏமாத்துறேன்னு வச்சுக்கலாம். அதுக்காக எங்க ஜாதியைச் சேர்ந்த எல்லாரும் ஏமாத்துக்காரங்க சொன்னா சரியா வருமா?

அதுவுமில்லாம, நீங்க சொல்லுறது, நல்லவன் அவங்க ஜாதியிலேயே கிடையாது; கெட்டவன் வேறெந்த ஜாதியிலும் கிடையாதுன்ற மாதிரி இருக்கு. நாளைக்கு நீங்க சொல்லுறதைத் தான் உங்க குழந்தையும் செய்யும். உங்க குழந்தை வளரும் போது, 'அவங்க எல்லாம் கெட்டவங்க. அவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கனும், ஜாக்கிரதையா இருக்கனும்' சொல்லியே வளப்பீங்க. பின்னாடி ஏன், எதுக்குன்னு தெரியாமலேயே உங்க குழந்தையும் நீங்க செஞ்ச அதே தவறைச் செய்யும்".

'பிராமணர்கள் அனைவரும் கெட்டவர்கள்', என்று சொல்லும் என்னுடைய நண்பர்களுக்கும் பல பிராமண நண்பர்கள் உண்டு. ஆனாலும், 'பிராமணர்கள் ஒழிக', என்று சொல்வதை நிறுத்தவில்லை.

சொல்ல வருவதெல்லாம், உங்களின் கோபத்திற்கும் ஓர் அர்த்தம் இருக்கட்டும். கெட்டவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். கெட்டவர்களின் கூட்டத்திலும் நல்லவன் உண்டு. நல்லவர்களின் கூட்டத்திலும் கெட்டவன் உண்டு. உங்களுக்குப் பிடிக்காதவர்கள் நிறைய பேர் இருக்கலாம். ஆனால் பிடிக்காத பிராமணர்களை மட்டும் அவர்களின் பிறப்பினை சம்பந்தப்படுத்தி பேசுவது என்ன நியாயம்? நீங்கள் பார்க்கும் பிராமண நபர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும், அவர்கள் கெட்டவர்களாகத் தான் இருப்பார்கள் என்ற குருட்டு எண்ணம் ஏன்?

எப்போதோ நடந்து முடிந்த சில விசயங்களை வைத்துக் கொண்டு (உங்களுக்கும், அந்த நிகழ்வுகளுக்கும், இப்போது வாழ்பவர்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லாத நிலையிலும்), இன்னும் சில தரப்பினர் மனதில் விரோதத்தை வளர்த்துக் கொண்டிருப்பது எவ்விதத்திலும், யாருக்கும் உபயோகமானதல்ல. யாரோ செய்த செயலுக்கு, இப்போதிருப்பவர்களை பழிப்பது என்ன நியாயம்? கேட்டால், சிலர் இது 2000 ஆண்டுகளாக ஏறிய விஷம்; 50 ஆண்டுகளில் இறங்கி விடுமா என்பர். நீங்கள் என்ன 2000 ஆண்டுகளாக வாழப்போகிறீர்களா? 2000 ஆண்டுகளாக, நீங்கள் தான் கஷ்டப்பட்டீர்களா? உங்களுக்குக் கொடுக்கப்பட்டது, 60-80 ஆண்டுகளே. அந்த காலகட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; இவ்வுலகில் 'நீங்கள்' என்றால், 'நீங்கள்' மட்டும் தான். உங்கள் முன்னோர்களுக்கு நீங்கள் வாரிசு மட்டும் தான்; பிரதிநிதிகள் அல்ல. அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு, நீங்கள் பழிவாங்கப் போனால் அதற்காக நீங்கள் இழந்த காலத்திற்காக, கடவுள் உங்களுக்காக சலுகை நாட்கள் வழங்கப் போவதில்லை. போராட வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் விதண்டாவாதம் பிடிக்க வேண்டாம். நிகழ்காலத்திற்காக மட்டும் வாழுங்கள். இறந்தகாலத்தின் கெட்ட விசயங்களை நினைத்துக் கொண்டும், எதிர்காலத்தைப் பற்றிய வீண் சந்தேகங்களாலும் உங்களின் நிகழ்காலத்தை வீணடிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களின் வாழ்க்கையையும் நரகமாக்க வேண்டாம்.

படித்த பல நபர்களே, இவ்விதம் கூறிக்கொண்டிருந்தால், மற்ற படிக்காத நபர்கள் எவ்விதம் நடந்து கொள்வார்கள் என நினைத்தால் வருத்தமளிக்கிறது. ஆனால் அவர்கள் பரவாயில்லை என்றுத் தோன்றுகிறது. படித்தவர்கள் தான் கண்டதையும் ஆராய்ந்து கொண்டு மனதில் நஞ்சை வளர்த்துக் கொண்டு வருகின்றனர். ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்ற காரணத்திற்காக, எத்தனை பேர் இங்கிலாந்து செல்லாமல் இருக்கிறார்கள்?. 'ஆங்கிலேயர்கள் அனைவரும் கெட்டவர்கள்; மற்றவர்களை அடிமைப்படுத்தி விடுவார்கள்', என்று எத்தனை பேர் அவர்களுடன் தொழிலில் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்? நம்மை 300 ஆண்டுகளாக ஆண்ட ஆங்கிலேயர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என இப்போதிருக்கும் எத்தனை பேர் நினைக்கிறார்கள்? அப்படி செய்ய வேண்டும் என்று யாராவது கூறிக்கொண்டு அலைந்தால் கூட, எல்லாரும் அவனைப் பார்த்து சிரிக்கத் தான் செய்வர். இவ்வளவு ஏன்? இங்கிலாந்திலேயே ஐந்து லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லாம் மனதில் காழ்ப்புணர்ச்சியை வைத்துக் கொண்டா அங்கு வாழ்கிறார்கள்? அவர்களுடன் பணிபுரியும் ஒவ்வொரு நிமிடமும், "இவன் என்னை அடிமைப்படுத்தி வைத்திருந்தான். இவனைப் பழி வாங்க வேண்டும்', என்ற எண்ணமா அவர்களுடன் பணிபுரிபவர்களுக்கு ஓடுகிறது? எப்போதோ நடந்த நிகழ்வு; யாரோ செய்த தவறு; இவர்களைப் பழிப்பதில் நியாயம் இல்லை என எல்லாருக்கும் தெரியும்.

ஆங்கிலேயர்களின் விசயத்தில் காட்டும் விழிப்புணர்ச்சியை ஏன் பிராமணர்கள் விசயத்தில் காட்டக்கூடாது?

பிராமணர்கள், அந்தக் காலத்தில், அடக்குமுறையை கையாண்டனர் எனக் கூக்குரலிடுபவர்கள் மட்டும் இப்போது என்ன செய்கிறார்களாம்? சட்டத்தின் பேரால், அதே பிராமணர்களை அடக்கியாள முற்படுவதில்லையா? இன்னும் சிலர், இப்போதும் பெரிய பெரிய பணிகளில் பிராமணர்கள் தான் இருக்கிறார்கள். அதனால், இன்னும் இந்த நாட்டில் அவர்களின் ராஜ்ஜியம் தான் எனவும் கூறுவார்கள். அப்படியானால், அவர்கள் எங்குமே பணி வகிக்கக் கூடாதா? அவர்களில் யாருக்குமே வசதி இருக்கக் கூடாதா? எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், பெரிய கல்வி நிறுவனங்கள் உட்பட எங்கும் படிக்கக் கூடாதா? சாதித்தவர் மாற்று சாதிக்காரராக இருந்தால், 'பார், பிராமண ஆதிக்கத்தை உடைத்து சாதித்து விட்டார்', என்பதும், சாதித்தவர் பிராமணராக இருந்தால், 'என்ன பெரிதாக சாதித்து விட்டார்; மற்றவர்களின் தயவு இருந்திருக்கும்', என்பதும் அசிங்கமாக இருக்கிறது.

இப்போது உயர்ந்த ஜாதி என்றால், அது ஒரே ஒரு ஜாதி தான். 'அரசியல்வாதிகள்' என்ற ஜாதி மட்டும் தான். அவர்கள் உபயோகிக்காத அடக்குமுறையா? ஆங்கிலேயர்கள் கையாண்ட 'பிரித்தாளும் கொள்கையை' (மதவாரியான) விட, அரசியல்வாதிகள் கையாளும் 'பிரித்தாளும் கொள்கை' (பிராமணர்கள், பிராமணரல்லாதவர்கள்) மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் கூட இணைந்து இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் பரஸ்பர நட்பு கொண்டாடினாலும் கூட, பிராமணர்கள் - பிராமணரல்லாதவர்கள் சண்டை ஓயாது போலிருக்கிறது.

இப்போதிருக்கும் அரசியல்வாதிகளில் எத்தனை பேர், பிராமணர்கள்? அரசியலில் பிராமணர்களின் பங்கு மிகக் குறைவே. அரசியல் ஆதிக்கம் எல்லாம் 'மற்ற ஜாதிக்காரர்களிடம்' தானே இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் கூட உங்களின் நல்ல நிகழ்வுகளுக்கும், கெட்ட நிகழ்வுகளுக்கும் நீங்கள் (மற்றும் அரசியல்வாதிகள்) தானே காரணமாக இருக்க முடியும்? உங்களுக்குக் கெட்டது நிகழ்ந்தால், அந்த அரசியல்வாதியைக் கேட்க வேண்டியது தானே? ஏன், நல்லவரான, பிராமணரல்லாத, உங்கள் அரசியல்வாதி, உங்களுக்கே நல்லது செய்வதில்லை? அவர் மீது உங்களுக்குக் கோபம் இல்லையா? அவரின் செயலுக்கும் பிராமணர்களின் சூழ்ச்சி தான் காரணமா?

இந்த நேரத்தில் ஆபிரகாம் லிங்கன் கூறியது தான் எனக்கு ஞாபகம் வருகிறது.

"சமூதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை ஒழிக்க, திட்டங்களும், எண்ணங்களும், கவனமும், மேலே இருப்பவர்களை கீழே இருப்பவர்களுக்கு இணையாகக் கொண்டு வருவதில் இருக்கக் கூடாது; மாறாக கீழே இருப்பவர்களை எப்படி மேலே உயர்த்துவது என்பதில் இருக்க வேண்டும்", என்று கூறினார். எவ்வளவு அருமையான வாசகம் அது?

பிச்சைக்காரர்களை ஒழிக்க வேண்டும் என்றால், பிச்சைக்காரர்களை கொல்வது தீர்வல்ல; பிச்சை எடுப்பதற்கு என்ன வழி என்ன என்பதைப் பார்த்து அதற்கான வழியினை ஆராய வேண்டும். இளமை / முதுமையில் வறுமை, தனிமை போன்ற காரணங்களுக்குத் தீர்வைக் காண வேண்டும். மாறாக அவர்களை அடித்துக் கொன்றுவிட்டால், சிக்கல் தீர்ந்து விடுமா?

இந்தப் பதிவு ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காகவும், மற்றவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவும் எழுதப் பட்டதல்ல. உங்களுக்கு குறிப்பிட்ட அமைப்பினரைப் பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. (உங்களின் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள் எனக் கூற வரவில்லை. அது உங்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்). ஆனால், நீங்கள் சந்திக்கும் எல்லாருமே ஒரே மாதிரி இருப்பார்கள் என எடை போட்டு, அவர்களிடமிருந்து விலக வேண்டாம்; காழ்ப்புணர்ச்சியைக் காட்ட வேண்டாம் என்பது மட்டுமே எனது வேண்டுகோள். உங்களாலும், உங்களின் சமகால மக்களாலும் இந்த சிக்கலுக்குத் தீர்வு கண்டிப்பாக கிடைக்கப் போவதில்லை. தயவுசெய்து, உங்கள் குழந்தைகளின் மனதில் உங்களின் காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்புணர்ச்சியையும் விதைக்கவேண்டாம். நீங்கள் ஒன்றும் அவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டாம், 'அவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என. அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள்; யார் நல்லவர்கள்; யார் கெட்டவர்கள் என்று! குணத்தின் அடிப்படையில்; குலத்தின் அடிப்படையில் அல்ல. நீங்கள் அவ்விதம் செய்யாமலிருந்தாலே, இந்த பிரச்சினை இன்னும் சில ஆண்டுகளில் ஓய்ந்து விடும்.

நீங்கள் போராடுவது யாருக்காக? உங்களுக்காகவா? உங்களின் முன்னோர்களுக்காகவா? தவறுக்கு தண்டனை கொடுக்க நினைத்தால் கூட, யாரைத் தண்டிப்பீர்கள்? உங்கள் முன்னோர்களுக்கு அநீதி இழைத்தவர்களின் வாரிசுகளையா? நீங்கள் செய்யும் குற்றத்திற்கு, உங்கள் மகனுக்குத் தண்டனை கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா அல்லது உங்கள் மகன் தான் ஏற்றுக் கொள்வானா? குற்றம் தந்தை மீதா? அல்லது மகன் மீதா?

இந்தப் பதிவு பிராமணர்களைப் புகழ்வதற்காக அல்ல. எனக்கு அவர்கள் மேல் எவ்விதமான விருப்பும் கிடையாது; வெறுப்பும் கிடையாது. எனக்குத் தெரிந்து, நான் ஒரு சில பிராமணர்களுடன் தான் பழகியிருக்கிறேன். எனக்கு எந்த சிக்கலும் இதுவரை இருந்ததில்லை. என்னுடைய மற்ற நண்பர்களிடமிருந்து வேறுபட்ட முறையில் அவர்கள் நடந்து கொண்டதாகவோ, அல்லது என்னை அவர்களின் மற்ற நண்பர்களை நடத்தியதாகவோ நான் அறியேன். அப்படியே, அவர்கள் நடத்தியிருந்தாலும், நடத்தினாலும், என்னுடைய கருத்து மாறப்போவதில்லை. ஏனென்றால், பல கொடூரமானவர்களை மற்ற சமூகத்தில் சந்தித்திருக்கிறேன். ஏன் என்னுடைய சமூகத்திலும் தான். தனிப்பட்ட மனிதர்கள் யாரும் அவர்களின் சமூகத்தின் பிரதிநிதிகளாகி விட முடியாது; அதே போல ஒரு சமூகத்தின் மீதான முத்திரையும், அச்சமூகத்தில் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்தி வர வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஒரு ஹிட்லரை வைத்து ஜெர்மானியர்களையும், முஷாரப்பை வைத்து பாகிஸ்தானியர்களையும், கெளரவர்களை வைத்து கர்ணனைப் பழிப்பது போலத் தான் இதுவும். மனிதர்களையும், அவர்களின் குணாதிசயங்களைப் பாருங்கள்; அவர்களின் குலத்தை மறந்து விடுங்கள்.

இந்தப் பதிவிற்கு, எவ்விதமான கருத்துகள் உங்களிடமிருந்து வரும் எனத் தெரியவில்லை. கண்டிப்பாக ஏகப்பட்ட பழிச்சொற்கள் வர வாய்ப்பிருக்கிறது. நட்சத்திரமாக இருந்து விட்டால், 'எது வேண்டுமானாலும் எழுதலாமா?' எனவும் சிலர் கேட்கலாம். என்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்தும் சிலர் பேசலாம். இந்தப் பதிவிலிருந்து மாறுபட்ட கருத்துள்ளவர்கள், உங்களின் கருத்தைத் தாராளமாகத் தெரிவிக்கலாம். ஆக்கப்பூர்வமான விவாதத்திற்குத் நான் தயார். கூறுபவர் யார், அவரின் பின்னணி என்ன என ஆராயாமல், கூறும் கருத்தை மட்டும் கவனத்தில் கொள்ள ஆரம்பித்தால், எப்போதுமே இரு தரப்பினருக்கும் நல்லது.

ஆக்கப் பூர்வமாக சிந்திப்போம்! அமைதியான சமுதாயம் வளர வழி வகுப்போம்!

திங்கள், மார்ச் 06, 2006

* பல்லாங்குழியின் வட்டம் *

நேரம் நள்ளிரவைத் தொட்டுக்கொண்டிருந்தது. தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் வித்யா. தூக்கம் கண்ணை ஒட்டாமல் போகவே, தன்னுடைய வாக்மேனில் ரேடியோவைத் திருப்பினாள்.

"திருச்சி வானொலி நிலையம். நேரம் இரவு 10.30. அடுத்து வருவது திரைச் செண்டு"

'நல்ல பாட்டு போடுங்கடா', என நினைத்துக் கொண்டாள்.

"இந்தப் பாடல் இடம்பெற்றத் திரைப்படம் ஆனந்தம். பாடியவர்கள் உன்னி கிருஷ்ணன், ஹரிணி"

'ஆஹா. இவனைப் பத்தி நினைக்கக் கூடாது; தூங்கலாம்னு நினைச்சா இப்ப ரேடியோல வேறயா?. இவங்க எல்லாம் இவனுக்குத் தூதா? இன்னைக்குத் தூங்குனா மாதிரித்தான்', என அலுத்துக் கொண்டு காதை கூர்மையாக்கினாள்.

காரணம் ஹரிணி; அவனுக்குப் பிடித்த பாடகி. ஹரிணியின் பாடலைக் கேட்டால், இவள் பேசிக்கொண்டிருப்பது கூடத் தெரியாமல், பாடலில் லயித்து விடுவான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஹரிணி பாடிய பாடல் இவன் வீட்டு டி.வியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இவள் பேசிக்கொண்டிருப்பதை மறந்து டி.வியில் பாட்டை ரசித்துக் கொண்டிருந்தான்.

"ஹலோ. நான் சொல்றது புரியுதா...."

"ம்"

"என்ன புரிஞ்சது?"

"ம். அது..."

"ஹலோ............", சிறிது கோபத்துடன் கூறியவள், பின்னர் குரலைத் தாழ்த்தி, "சரி. நான் அப்புறம் பேசுறேன்", என்றாள்.

"இல்ல. இல்ல சொல்லு கேட்டுக்கிட்டுத் தான் இருக்குறேன்"

"இல்ல நீ முதல்ல பாட்டை பார்த்து முடி. உனக்கு அப்புறம் ஃபோன் பண்ணுறேன். உனக்கு பாட்டு தான் முக்கியம்"

"Sorry. நான் ...." என ஆரம்பித்து, என்னவென்று கூறி சமாளிப்பதெனத் தெரியாமல் நிறுத்தினான்.

"இங்க ஒருத்திப் பேசிட்டு இருக்கேன். அது கூடத் தெரியாம நீ டி.வி. பார்த்துக்கிட்டு இருக்குற. உனக்கு ஹரிணி பாடுன பாட்டு தான் முக்கியமாப் போச்சு இல்ல?"

"Sorry Sorry. சொல்லு நான் கேக்குறேன். டி.வியை ஆஃப் பண்ணிட்டேன்"

அன்று ஆரம்பித்த சண்டை ஒருவாறு முடிவிற்கு வந்தது. அந்த சண்டைக்குக் காரணமான அதே ஹரிணி பாடிய பாடல். அவனுக்குப் பிடித்த பாடகி என்ற காரணத்திற்காக, விரும்பிக் கேட்டாள். அதன் பிறகு எப்போது தூங்கினாள் என அவளுக்கே நினைவில்லை.



வியாழக்கிழமை.

'நேத்து ஃபோன் பண்ணியிருக்கணும் பண்ணலை. இன்னைக்காவது போன் பண்ணுவானா?', என அவனின் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருந்தாள். புதன்கிழமை, புதன்கிழமை தவறாமல் அவனிடமிருந்து, இவளுக்கு அழைப்பு வந்து விடும். 'நேற்று ஏன் தவறியது', என்ற யோசனையிலும், 'இன்றாவது அழைப்பானா', என்ற எதிர்பார்ப்பிலும் மாலையிலிருந்து எங்கும் நகராமல் ஹாலிலேயே அமர்ந்திருந்தாள்.

தொலைகாட்சியில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அறியாமலேயே வேண்டா வெறுப்பாக டி.வியின் மீது கண்கள். மனதும், காதுகளும் தொலைபேசியை நோக்கி மையம் கொண்டிருந்தது. கடிகாரத்தின் விநாடி முள்ளை விட வேகமாகச் சுற்றி, நேரத்தை எண்ணிக்கொண்டிருந்தாள். நீண்ட காத்திருப்பிற்குப் பின் தொலைபேசி அடித்தது. அவளது அம்மாவைக் கடந்து செல்லும் வரை மெதுவாகவும், பேசுவது அவனாகத் தானிருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடும் தொலைபேசியை நோக்கி நடந்து, ரிசீவரை காதில் வைத்தாள்.

"ஹலோ", என மெதுவாக உச்சரித்தாள்.

"ஹலோடி. நான் தான்"

சிறிது நாட்களாக நின்று போன உலகமே இப்போது தான் சுற்ற ஆரம்பித்தது போல் உற்சாகமானாள்.

"ம். சொல்லு சாப்பிட்டியா?"

"ம். ஆச்சு"

"நேத்து ஏன் போன் பண்ணல?"

"அதுவா. கொஞ்சம் வேலை இருந்தது. ஏன் எதிர்பார்த்தியா?"

"ம். அதெல்லாம் இல்ல. Wednesday பண்ணுவியேன்னு சும்மா கேட்டேன்"

ஏதாவது ஏடாகூடாமாகச் சொல்வானே எனக் காத்திருந்தாள்.

"ஓ அப்படியா?" எனபதைத் தவிர அவன் வேறெதுவும் சொல்லவில்லை.

"அப்புறம் நேத்து ஏதோ மெடிக்கல் செக்-அப் இருக்கு. சேலம் போகணும்னு சொல்லிட்டு இருந்த. என்னாச்சு?. நீ வீட்டுல இருக்க மாட்டியோன்னு நெனச்சு தான் நான் ஃபோன் பண்ணல."

'ஆமா இப்ப சொல்லு. நீ ஃபோன் பண்ணும் போது இருக்க முடியாதுன்னு தான் போகலை', என்று கூற நினைத்தாள். ஆனால்,

"ஓ அதுவா. நேத்து வேண்டாம். இன்னைக்குப் போகலாம்னு அம்மா சொல்லிட்டாங்க", என்று தான் வந்தது.

"சரி இன்னைக்காவது போனீங்களா?"

"வேண்டாம்; நாளைக்குப் போகலாம்னு நான் சொல்லிட்டேன்."

"இன்னைக்கு ஏன் போகலை?"

"சும்மா தான்."

"உங்கம்மா ஏன்னு கேட்கலையா?"

"ம். கேட்டாங்க. ப்ச். அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எல்லாம் உங்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது"

சிறிது நேரம் எதை எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தனர்.

"சரி, சென்னைக்கு எப்ப வர்ற?", என்று ஆரம்பித்தான்.

"சென்னைக்கா? எதுக்கு?"

"இங்க வந்து வேலை தேடலாம் இல்லையா? சும்மா வீட்டுல இருந்து அம்மாவும், மகளும் அப்படி என்ன தான் பண்ணுறீங்களோ?"

"ம்ம்ம்ம்ம் அங்க வந்துட்டா எங்க அம்மாவுக்குத் துணையா யார் இருப்பாங்க?"

"இங்க வந்து எனக்குத் துணையா இருன்னு தானே உன்னைக் கூப்பிடுறேன். வேலைக்கு டிரை பண்ணுறேன்னு வீட்டுல சொல்லிட்டு இங்க வர வேண்டியது தானே?"

"சும்மாவே வீட்ட விட்டு வெளிய அனுப்ப மாட்டாங்க. நீ வேற சென்னைல இருக்குறன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், என்னை அங்க அனுப்புறதுக்கு எங்க அம்மா என்ன லூசா?"

"அத்தைக்கிட்ட நான் சொன்னேன்னு சொல்லு. அனுப்பிடுவாங்க"

"அத்தையா? எவ்ளோ கொழுப்புடா உனக்கு?'

"ஏன்? என்ன தப்பு? அத்தை தான்"

"நான் தான் உன்னைக் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லியிருக்கேன்ல. பின்ன என்ன அத்தை? அதுவுமில்லாம, போன் அடிச்சாலே அம்மா டென்ஷன் ஆகிடுறாங்க. எப்ப இவளை கவுத்தி கூட்டிட்டு போய்டுவானோன்னு ஒரு பயத்துடோ பாக்குறாங்க"

"நான் உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லியிருக்கேனே. என்னைக் கல்யாணம் பண்ணாம பின்ன யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற?"

"நல்ல பணக்காரப் பையனா பார்த்து கல்யாணம் பண்ணிப்பேன்"

"அப்புறம்?"

"அதுவுமில்லாம நான் ஏன் வேலை தேடனும்? என்னால எல்லாம் வேலை பார்க்க முடியாதுப்பா"

"ஒரு வேளை வர்றவன் உன்னை வேலைக்கு போகச் சொன்னான்னா?"

"என்னைய ஆளை விட்டுடுறா சாமின்னு கால்ல விழுந்துடுவேன். என்ன வேணுன்னாலும் சொல்லு வேலைக்கு மட்டும் அனுப்பாதேன்னு சொல்லிடுவேன்"

"பின்ன என்ன பண்ணுறதா தான் ஐடியா?"

"சும்மா அப்படியே, அவன் காரை எடுத்துட்டு, டெய்லி அவனை ஆபிஸ்ல டிராப் பண்ணிட்டு. வீட்டுல வந்து படுத்து தூங்கிட வேண்டியது தான்."

"பயப்படாத. உன்னை வேலைக்கெல்லாம் அனுப்ப மாட்டேன்"

"லூசு சும்மா இருக்க மாட்ட? என் ஃபிரண்ட் ஒருத்தி UK-ல இருக்குறான்னு சொல்லியிருக்கேன் இல்லையா? அவ அப்படித்தான்; அவளோட ஹஸ்பெண்ட் ஆபிஸ் போற வரைக்கும், உடம்பு சரியில்லைன்னு படுத்துப்பாளாம். அவர் சாப்பாடு செஞ்சு வச்சிட்டு, கிளம்பி போன பிறகு, இவ நல்லா சாப்பிட்டுட்டு டி.வி பார்ப்பாளாம்."

"ஆ!"

"அடிப்பாவின்னு சொன்னேன். 'அவருக்கு என்ன வேலை? சும்மா செய்யட்டும் என்ன தப்பு'-ன்னு சொல்லுறா? இம் என்ன பண்ணுறது?"

"இப்படி எல்லாம் நடக்குதா?. இங்க பாரு, வித்யா. உனக்கு அந்த சிரமமே வேண்டாம். என்கிட்ட சொன்னா நானே உனக்கு எல்லாம் செஞ்சு தர்றேன். உன் துணியெல்லாம் கூட நானே வாஷ் பண்ணுறேன். நீ நல்லா வீட்டிலேயே சாப்பிட்டிட்டு படுத்து தூங்கு. என்ன சொல்ற?"

"ரொம்ப பேசாத"

பேசிக் கொண்டே ஷோபாவில் சாய்ந்தவள், டி.வியில் 'பல்லாங்குழி பாடல்' ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததைக் கவனித்தாள்.

"உனக்கு இந்தப் பாட்டு பிடிச்சிருக்கா?"

"எந்தப் பாட்டு?"

"பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்"

"என்ன படம்?"

"ஆனந்தம்னு நினைக்குறேன்"

"ஓ அதுவா.. S.A.ராஜ்குமார் படம் இல்ல?. எனக்கு சுத்தமா பிடிக்காது"

சட்டென யாரோ கன்னத்தில் அறைவதைப் போல உணர்ந்தவளின் கண்களில் இருந்து நீர் பொல பொலவென வர ஆரம்பித்தது. சில விநாடிகள் நிசப்தம்.

"ஹலோ என்ன ஆச்சு? எதுக்கு கேட்ட?"

"அது எப்படி பிடிக்காம போகும்?"

"ஏன்? எனக்கு S.A.ராஜ்குமார் பாட்டுனாலே பிடிக்காது"

"அது ஹரிணி பாடுன பாட்டு"

"ஹரிணி பாடுனதா? அப்படியா என்ன? எனக்குத் தெரியாதே"

"பொய் சொல்லாத..."

"இல்லை சத்தியமா எனக்குத் தெரியாது. S.A.ராஜ்குமார் பாட்டுன்னு மட்டும் தெரியும். அதனாலத் தான் நான் ஒரு நாள் கூட முழுசாக் கேட்டதில்லை. மத்தபடி அது ஹரிணி பாடுனதுன்னு எனக்குத் தெரியாது."

"உனக்குப் பிடிச்சவங்க பாடுன பாட்டு உனக்கு எப்படி பிடிக்காம போகும்?. உனக்குப் பிடிச்சவங்க ஏதாவது பண்ணுணா எப்படி வெறுக்கத் தோணும்?"

"இல்ல வித்யா. உண்மையிலேயே எனக்குத் தெரியாது. அது ஹரிணி பாடுனதுன்னு. தெரிஞ்சிருந்தா கண்டிப்பா கேட்டிருப்பேன்"

"நாளைக்கே நான் ஏதாவது செஞ்சு உனக்குப் பிடிக்காம போனா இப்படித் தானே பேசுவ?"

"இல்ல. அப்படியெல்லாம் இல்ல"

அவளை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. எப்படி தெரியாமல் போனது, அது ஹரிணி பாடியதென்று? அதிலிருந்து அந்தப் பாடலை எப்போது கேட்டாலும் அவன் ரசிக்க ஆரம்பித்தான்.

"ஹலோ. நான் தான்"

"இம். சொல்லு" என ஆரம்பித்தவள், சிறிது இடைவெளி விட்டு "சாப்பாட்டியா?", எனத் தொடர்ந்தாள்.

"இம். மேடத்துக்கு இன்னும் கோபம் போகலையா? இங்க பாருங்க மேடம் உண்மையிலேயே எனக்குத் தெரியாது அது ஹரிணி.... " என அவன் முடிப்பதற்குள்....

"ப்ச் அப்படியெல்லாம் இல்ல"

"ம்"

"அப்புறம்"

"அப்புறம் நீ தான் சொல்லு. Sorry உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா"

"அதெல்லாம் இல்லை"

"அப்புறம், அந்தப் பாட்டைக் கேட்டேன். ரொம்ப நல்லாயிருக்கு."

"ஓ"

"ஹரிணி பாடினதுன்னு எனக்கு நீ சொல்லித் தான் தெரியும்."

"ம்"

"ரொம்ப நல்லாப் பாடியிருக்காங்க"

"ம்"



அதிலிருந்து அவர்கள் இருவருக்கும் அந்தப் பாடலே சொந்தப் பாடலாகி விட்டது. பல தருணங்களில் இணைந்து ரசித்திருக்கிறார்கள். அந்தப் பாடலை ஒளிபரப்பினால் இமை கொட்டாமல் பார்ப்பது அவளுக்குத் வாடிக்கையாகி விட்டது. அது இன்று வரையும் தொடர்கிறது. ஆம். அவனின் மரணம் நிகழ்ந்து பல ஆண்டுகள் கழித்தும் கூடத் தான். அவனின் நினைவாக அவளிடம் இருக்கும் ஒரே சொத்து அந்தப் பாடல் மட்டுமே. அந்தப் பாடல் ஒளிபரப்பப்படும் போது அவன் நினைவுகளினால் அவள் தவித்துப் போவதை யாரும் அறிவதில்லை; அவள் கணவன் உட்பட.

இத்தனை ஆண்டுகளில் அவள் கணவன் எவ்வளவோ முறை வற்புறுத்தியும் கூட, ஒரு நாள் கூட டிரைவர் சீட்டில் கால் வைக்கவும் அவளுக்கு மனது வந்ததில்லை. ஏன் என்பது இந்த உலகில் அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

ஸ்ருசல்


குறிப்பு: எனக்குக் கதைகள் வாசிக்கப் பிடிக்காது. புகழ்பெற்ற கதைகளும், Science Fiction புதினங்களும் விதிவிலக்கு. ஆனாலும் நாமும் ஓர் கதை எழுதிப் பார்த்தால் என்ன என முயன்று சில கதைகள் எழுதிப் பார்த்தேன். ஒன்றும் சரிவரவில்லை. கடைசியாஇவனுங்களுக்கு இதே வேலையாப் போச்சு. கதை மாதிரியே நல்லா கதை விடுறான். இவனெல்லாம் என்ன கதை எழுதுறான்?.க எனக்குப் பிடித்தத் தலைப்பிலிருந்து எழுதியது தான் இந்தக் கதை (இது கதையா எனத் தெரியவில்லை). மேலும் காதல் கதை எழுதுவது தான் சுலபம் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆகையினால் தான் இதைத் தேர்ந்தெடுத்தேன். ஒரு வேளை இந்தக் கதை சரியில்லாமல் போனால், அதை சரி செய்யும் நோக்கில் இன்னொரு கதை எழுதும் எண்ணம் முற்றிலும் கிடையாது. என் சேவை தமிழ் நல்லுலகத்திற்குத் தேவை எனக் கருதி, எப்படியாவது உங்களின் ஆதரவை எனக்குத் தெரிவித்து விட வேண்டும் என விபரீதமான முடிவுகளை எடுத்தால், உங்களை அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

* ஆசிரியர்கள் *

80-களிலும், 90-ன் ஆரம்ப ஆண்டுகளிலும், பெரும்பாலான மாணவர்களின் குறிக்கோள் பொறியாளார் அல்லது மருத்துவராவதாக இருந்தது. இந்த இரண்டிற்கும் எல்லா தரப்பினரிடமும் பலத்த வரவேற்பு இருந்தது. பொறியியலில், காலத்திற்கு ஏற்ப மாணவர்கள் வேறுபட்டத் துறைகளை எடுக்க ஆர்வம் காட்டி வந்தனர். ஒரு குறிப்பிட்ட காலத்தில், கட்டிடயியலுக்கும், இன்னுமொரு கால கட்டத்தில் எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங்கும், பின்னர் எலெக்ட்ரானிக்ஸிற்கும் மவுசு இருந்து வந்தது. 1995-ம் ஆண்டிற்குப் பின் அனைத்துமே மாறி, எங்கும் கணினி, எதிலும் கணினி என்றே மாறி விட்டது. பெரும்பாலான மாணவர்களின் (பெற்றோர்களின்) குறிக்கோள் கணினித் துறையைத் தேர்ந்தெடுப்பதே. இதில் தவறே கிடையாது; இது இயல்பே. எதில் நல்ல ஊதியம் கிடைக்கிறதோ அல்லது எந்தத் துறையில் சுலபமாக வேலை கிடைக்கிறதோ அதில் தான் மக்கள் ஆர்வம் காட்டுவர். சுலபமான வழி இருக்கும் போது, யாருக்கு சிரமப்பட்டு எதையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்?

சரி இப்போது மென்பொருள் துறை நன்றாக இருக்கிறது; அனைவரும் இங்கேயே சங்கமம் ஆகின்றோம். தவறில்லை. நாளைக்கு வேறொரு துறை நன்றாக இருக்கும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு அந்தத் துறைக்கு மவுசு இருக்கும். ஆனால் எல்லாத் துறைக்கும் பொதுவான, எல்லாருக்கும் அவசியமான, ஒன்றை நாம் இழந்து வருவதை கவனிக்கத் தவறுகின்றோம். இதற்கான அடித்தளம் சுமார் 40-50 ஆண்டுகளுக்கு முன்பாகவே போடப்பட்டு விட்டது.

மாணவர்களில் பலர் படித்து முடித்ததும், அந்த நிறுவனத்தில் பணியில் சேர வேண்டும், வெளிநாடு சென்று பணியாற்ற வேண்டும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆசை கொண்டிருப்பார்கள். (அவர்களின் பெற்றோர்கள் உட்பட). ஆனால் அவர்களில் எத்தனை பேர் ஆசிரியர்களாக வருவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்? லட்சத்தில் ஒருவர்? அப்படி இருந்தாலே ஆச்சர்யம். கடந்த சில ஆண்டுகளாக, எதுவுமே படிக்க இயலாமல் (வசதி இல்லாமலோ, வாய்ப்புக் கிடைக்காமலோ) இருப்பவர்கள் மட்டுமே, M.A; அல்லது M.Sc / M.Phil எனப் படித்து விட்டு ஆசிரியர் பணிக்கு வருகின்றனர். திறமையானவர்களில் பெரும்பாலோனோர் வேறு பணிக்குச் சென்று விடுகின்றனர். (இப்போது ஆசிரியர்களாக இருப்பவர்கள் திறமையற்றவர்கள் எனக் கூறுவதாக அர்த்தம் கொள்ள வேண்டாம்).

பள்ளி / கல்லூரியில் முதல் 10% இடங்களுக்குள் வரும் எத்தனை மாணவர்களில் ஆசிரியர்களாக உருவெடுத்திருக்கிறார்கள்? ஆண்டுகள் செல்லச் செல்ல கல்வியின் தரம் குறைவதை ஏன் யாருமே உணர மறுக்கிறோம்? 'அந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்தா, பள்ளிக் கூடமே செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவன் கூட படிப்பான்...', என்று நமது முந்தைய முறையினர் சொல்லக் கேட்டதில்லையா?. அந்த மாதிரியான ஆசிரியர்கள் கிடைக்கும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிட்டியது?. எனக்குக் கிடைத்தது. உங்களில் பலருக்கும் கிடைத்திருக்கலாம். ஆனால் அதே வாய்ப்பு, உங்களின் குழந்தைகளுக்கும் கிடைக்குமா என்பது கேள்விக் குறியே. ஏனென்றால், இந்தத் தலைமுறை மாணவர்களில் ஏறக்குறைய 90% பேர் தொழில்நுட்பத் துறைக்கு அதிலும் முக்கியமாக கணினி துறைக்கு பணிக்கு வந்து விடுகின்றனர். அவர் யாராக இருந்தாலும்; அவர் என்ன படித்திருந்தாலும். இப்போதெல்லாம், வெறும் புத்தகங்களை கரைத்துக் குடிப்பதையும், மதிப்பெண்களை அதிகமாகப் பெறுவதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு பள்ளி செல்கிறார்கள், மாணவர்கள். எத்தனை முறை, புத்தகத்தில் உள்ளதை அனுபவித்து கற்றிருக்கிறோம் அல்லது கற்பிக்கப்பட்டிருக்கிறோம்? கல்லூரி எல்லாம் முடித்து விட்டு, இப்போது ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டும் போது தான், 'அட இதெல்லாம், பள்ளிக்கூடத்திலேயே படித்திருக்கிறோமே? எவ்வளவு நல்ல விசயம், சரியாகப் படிக்காமல் விட்டுவிட்டோமே?', என பல முறை வருந்தியிருப்போம். இதற்கெல்லாம், காரணம் என யாரைச் சொல்வது, ஆசிரியர்களைத் தவிர?. பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம் தான். அதைப் பற்றி ஏற்கனவே என்னுடைய 'சர்வதேசப் பள்ளிகளில் இந்திய விஞ்ஞானிகள்' என்ற பதிவில் சொல்லியிருந்தேன். ஆசிரியர்களும் (எல்லா இடங்களிலும் 'பெரும்பாலான ஆசிரியர்கள்' என சேர்த்துக் கொள்ளுங்கள்) தங்களது மாணவர்களுக்கு, அதிக மதிப்பெண்கள் பெறும் வழியை மட்டுமே போதிக்கிறார்கள். இதற்கு திறமையே தேவையில்லை - யார் வேண்டுமானாலும் செய்யலாம். இன்னும் சிறிது நாட்களில், 'எங்களுக்கு ஆசிரியர்களேத் தேவையில்லை; என்னென்ன செய்ய வேண்டும் எனப் புத்தகங்களிலேயே எழுதி விடுங்கள், நாங்கள் படித்துக் கொள்கிறோம்', எனக் கூறும் நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இப்போது வளர்ந்து விருட்சமாக நிற்கும் பல மரங்கள், நம் முன்னோர்கள் நமக்காக நட்டு, வளர்ந்த்தது தான். அதன் கனியையும், நிழலையும் நாம் அனுபவிக்கிறோம். போதாக்குறைக்கு, பல மரங்களை வியாபார நோக்கத்திற்காக வெட்டியும் வீழ்த்துகிறோம். அடுத்த தலைமுறைக்காக, புதிதாக நட வேண்டாம்; இருக்கும் சில மரங்களையாவது காக்க வேண்டும் என நமக்குத் தோன்றவில்லை. அதே போல் தான், இருக்கும் சில நல்ல ஆசிரியர்களிடம் நாம் கற்று தெரிந்து விட்டோம்.

உங்களுக்குக் கிடைத்த அதே தரம் நமக்கு அடுத்த சந்தததியினருக்கும் கிடைக்க வேண்டுமானால், அதற்கான முயற்சிகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டாமா?

ரிச்சர்ட் ஃபின்மென்

தொழில் ரகசியங்களும், நுட்பங்களும் சரியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சொல்லிக்கொடுக்கப்படாமல் போனதால் அல்லது புரிந்து கொள்ளப்படாமல் போனதால் பல தொழில்களும் / தொழிற்சாலைகளும் நசிந்தன என்பதை நாம் நன்றாக அறிவோம். உதாரணத்திற்கு சிற்பக் கலை; இப்போதிருக்கும் சிற்பிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அதே போல் தான் கற்பிக்கும் பணிக்குத் திறமையானவர்கள் இல்லாமல், கல்வியின் தரம் முற்றிலும் சீரழியப்போகிறது. ஆசிரியர் பணிக்கு வருவதற்கு யாருக்கும் திறமை இல்லையா? அல்லது திறமை இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லையா? இரண்டும் இருப்பவர்களுக்கு, பண வசதி இல்லையா?

இதற்குக் காரணம் என்ன?

1. தொழில்நுட்பப் படிப்புகளுக்கு இருக்கின்ற அபாரமான வேலை வாய்ப்புகள்
2. தொழில்நுட்பப் பணிகளுக்குக் கிடைக்கும் ஊதியம்

1. தொழில்நுட்பப் படிப்புகளுக்கு இருக்கின்ற அபாரமான வேலை வாய்ப்புகள்


இதனை ஓர் குறை என்றே சொல்ல முடியாது. இதற்குப் போட்டியாக, ஆசிரியர் பணிகளுக்கு அதிக இடங்களை உருவாக்க வேண்டும் எனச் சொல்வது சரியாக இருக்காது. தொழில்நுட்பப் படிப்புகளுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் இருப்பது நல்ல விசயம் தான். பொருளாதாரம் உயரவும், வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கவும் வழி வகுக்கிறது.

2. தொழில்நுட்பப் பணிகளுக்குக் கிடைக்கும் ஊதியம்

உலகமே எலெக்ட்ரானிக்ஸ் மயமாகி வருகிறது. மக்களின் தேவைகள் தொழில்நுட்பம் சார்ந்தவைகளாக இருக்கின்றன. அனைவரும் 'இந்த காருக்கு அடுத்த மாடல் எப்போது வருகின்றது?', 'செல்போனில் அடுத்து என்னென்ன வசதிகள் வருகின்றன? படம் பார்க்க முடியுமா, கிரிடிட் கார்டுக்குப் பதிலாக செல்போனை உபயோகப்படுத்த முடியுமா? அமெரிக்காவுக்கு 10 மணிநேரத்தில் செல்ல முடியுமா?' Internet Browsing Speed அதிகரிக்குமா என்று தான் யோசிக்கின்றனர். நாம் அனைவரும் தொழில்நுட்பத்திற்கு அடிமைப் பட்டு ஆண்டுகள் பலவாகி விட்டன. தேவை அதிகரிக்கும் போது, அது சம்பந்தமான உற்பத்தி அதிகரிக்கப் பட வேண்டும்; மக்களின் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யப் பட வேண்டும்; அதற்கு அதிகமான பொறியாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்தக் காரணத்தினால், அவர்களின் ஊதியம் மற்ற எல்லாத் துறையையும் (மருத்துவர்கள்; அரசு அதிகாரிகள்; வங்கி அதிகாரிகள்;) விட மிக அதிகமாக இருக்கின்றது.

ஊதியம் அதிகமாகக் கிடைப்பதால் அனைவரும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இப்படி காரணங்கள் இருக்கும் போது, ஏன் சாதாரண (ஊதியம், வேலைவாய்ப்புகள் குறைவான) ஆசிரியர் தொழிலை தேர்ந்தெடுக்ககின்றனர்?

இதற்கு தீர்வு என்ன?

முன்பே கூறியது போல வேலைவாய்ப்புகளை இது போன்ற துறைகளில் அதிகரிக்க முடியாது; ஏனென்றால் தேவை அதற்கேற்றார்போல் இல்லை; ஆண்டுக்கு 5-10 லட்சம் குழந்தைகள் மட்டுமே பள்ளிகளில் சேர்கின்றனர். அதே விகிதத்தில் பள்ளிப்படிப்பையோ / கல்லூரி படிப்பையோ விட்டு வெளியேறுகின்றனர். ஆனால், ஊதியம்! கண்டிப்பாக உயர்த்தலாம். நீங்கள் கேட்கலாம், 'இப்போதே அவர்கள் மற்ற அரசு ஊழியர்களை விட அதிகமாகத் தானே ஊதியம் பெறுகின்றனர். ஏற்கனவே, அரசின் பெரும்பாலான வருமானம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதிலேயே சென்று விடுகிறது. இந்த லட்சணத்தில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வேறு உயர்த்த வேண்டுமா?', என்று. நீங்கள் கேட்பது சரி தான். நீங்கள் ஏன் அவர்களை மற்ற அரசு ஊழியர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றீர்கள்? எப்படி ஓர் கிராம வளர்ச்சி அதிகாரியும், ஆசிரியரும் ஒன்றாக இருக்க முடியும்? அவர்கள் இருவரின் பணியும் ஒன்றாகி விடுமா? அவர்கள் அரசு ஊழியர்களோடு ஒப்பிடப்பட வேண்டியவர்கள் அல்லர். நாட்டிலேயே ஊதியத்தில் உயர்ந்த ஓர் துறை (சினிமா, அரசியல், போன்ற துறைகளை விட்டு விடுங்கள்) இருக்குமாயின் அதனுடன் ஒப்பிடுங்கள். அவர்களுக்கு இணையாக இவர்களுக்கும் ஊதியத்தை நிர்ணயிங்கள். ஆனால், ஆசிரியர்களின் பணி இவை எல்லாவற்றையும் விட உயர்ந்தது (அப்படி இல்லையென்றால், உயர்ந்ததாகத் தான் இருந்திருக்க வேண்டும்). ஓர் மருத்துவர் தனது பணியை நேர்மையுடனும், அக்கறையுடனும் மேற்கொண்டால், ஓர் உயிரைக் காப்பாற்ற முடியும்; ஓர் காவலதிகாரி சிரத்தை எடுத்து பணியாற்றினால், ஒரு பகுதியை அமைதியாகக் கட்டுக்குள் வைத்திருக்கமுடியும்; ஓர் ஆசிரியர் பொறுப்புடனும், நேர்மையுடனும் பணியாற்றினால் இவ்வுலமே போற்றக்கூடிய வகையில் பல நபர்களை உருவாக்க முடியும். ஒவ்வொருத்தரின் குணமும், ஒழுக்கமும் அவர்கள் சிறுவர்களாக (அல்லது 22 வயதிற்குள்) இருக்கும் போது தான் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அந்த காலகட்டத்தின் (அல்லது 25 வயதுக்குள்) பெரும்பகுதியைப் பார்த்துக் கொள்ளும் ஆசிரியர்கள், ஓர் மனிதனின் வெற்றிக்கும், தோல்விக்கும் மூலக்காரணம் இல்லையா? அப்படி இருக்கும் போது, ஆசிரியர்களை உருவாக்கும் விசயத்தில் ஏன் இப்படி ஓர் அலட்சியம்?

படிப்பை போதிப்பது சுலபம்; மற்றவர்கள் போற்றும் குணத்தையும், ஒழுக்கத்தையும் போதிப்பது தான் கடினமானப் பணியாக இருக்கும். படிப்பில் தலைசிறந்தவனாகவும், குணத்தில் தாழ்ந்தவனாகவும் இருந்தால் அவனைப் பார்த்து அவனின் ஆசிரியர் பெருமைப்படவா முடியும்?. மாறாக, ஒருவன் குணத்தில் பலர் போற்றத்தக்க அளவிலும், படிப்பில் ஓரளவிற்கு சிறந்தவனாக இருந்தாலும் அவனை எந்த ஆசிரியருக்குத் தான் பிடிக்காது? பெற்றோர்கள் இதைப் பார்க்கத் தவறுகின்றனர். அவர்களும் பிள்ளைகளின் மதிப்பெண் அட்டைகளை மட்டுமே பார்க்கப் பழகிவிட்டனர்.

சரி விசயத்திற்கு வருகிறேன். நான் கூறுவதெல்லாம், மற்ற துறைகளுக்கு ஏறக்குறைய இணையாக ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை நிர்ணம செய்யுங்கள். 'அரசின் வருமான போதாது; ஆதலால் கொடுக்க முடியாது', என சிலர் கூறலாம். அது அரசின் குறைபாடு. வருமானத்தைப் பெருக்கும் முறைகளை கண்டுபிடியுங்கள். பணத்திற்காக, இது போன்ற விசயங்களில் உடன்பாடு செய்யமுடியாது. இப்போதிருப்பது போல், 2,00,000 லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலை வாங்கும் முறையை ஒழித்துக் கட்டுங்கள் (இதெல்லாம் நடக்கிற விசயமா?). நேர்மையான முறையில் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையினைக் கொண்டு வாருங்கள். அதிக பயன் இருக்கும் காரணத்தினால், கண்டிப்பாக போட்டி திறமையான, தகுதியான நபர்களிடமிருந்து வரும். அப்படி இருக்கும் பட்சத்தில், நிச்சயமாக சரியான நபர்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.

வெறும் பணத்தாசை காட்டி அவர்களை இங்கே அழைப்பது சரியாக இருக்குமா என சிலர் கேட்கலாம்.

1. இருக்கும் நபர்களில் பலர், மற்ற துறைகளில் பணிபுரிபவர்களை விட திறமை குறைந்தவர்கள்; அந்த விதத்தில் பார்த்தால் பணத்தைக் காட்டி தகுதியான நபர்களை இழுக்குறீர்கள். லாபம் மாணவர்களுக்குத் தானே? அதாவது சமுதாயத்திற்குத் தானே?. இழப்பது பணம் தானே. தவறில்லை.

2. பலர் ஆர்வத்துடன் இன்னும் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுப்பதைக் காண முடிகிறது. (ஆனால் அவர்கள் பெரும்பாலும் புகழ்பெற்ற கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் தான் பணிபுரிகின்றனர்). உண்மையிலேயே ஆர்வம் உள்ளவர்கள், இப்போது நிலவும் ஊதிய வேறுபாட்டினால் கணினி போன்ற துறைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கலாம் அல்லவா? அவர்களை நல்ல ஊதியத்தினால், மற்ற துறைகளுக்குச் சென்று விடாதபடி கவர்ந்திழுக்கிறோம் அவ்வளவு தான். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நல்ல சவாலான பணி, மென்பொருள் துறையினரை விட அதிக ஊதியம் என்றால் இப்போது வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் கூட கண்டிப்பாக இந்தியாவில் ஆசிரியர் பணிக்கு போட்டி போட்டு வருவர் என்பது என் கருத்து.

வருபவர்களிடம் திறமை இருந்தால் நல்லது; திறமையுடன் ஆர்வமும் இருந்தால் சாலச் சிறந்தது.

இவை எல்லாவற்றையும் விட சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதற்கு முக்கியமானது ஊக்கம். மாணவர்களை, பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும். எத்தனை பள்ளிகள் / கல்லூரிகளில், ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு கற்பித்தலின் சிறப்பைக் கற்றுக் கொடுக்கிறார்கள்? அவர்கள் சிறந்தவர்களாக இருந்தால் தானே, அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்று அவர்களின் மாணவர்களுக்குத் தோன்றும்? மற்றவர்களுக்கு நீதி கூறும் நீதிபதியே கொலை செய்து விட்டு, நீதிமன்றத்தில் நிற்பது போல் தான், பல ஆசிரியர்கள் குறைகளை தங்கள் மீதே வைத்துக் கொண்டு, பள்ளிகளில் மாணவர்களுக்கு முன்பு நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பார்க்கும் மாணவர்களுக்கு அவர்கள் மீது எப்படி மரியாதை ஏற்படும்? அல்லது அவர்களைப் பின்பற்ற வேண்டும் எனத் தோன்றும்?

உலகத்திலேயே புனிதமானது ஆசிரியர் தொழில் தான் என்பது என் கருத்து. கற்றுக்கொடுப்பது மட்டுமல்ல; கற்றுக்கொடுப்பது போலவே வாழ்ந்தும் காட்ட வேண்டும். அது தான் கடினமான பணி. சில ஆசிரியர்களை இப்போது பார்த்தாலும், தானாக நமது கை, கட்டியிருக்கும் வேட்டியையோ, கைலியையோ இறக்கி விடச் செல்லும். அவர்கள் கற்பிக்கும் போது, நம்முள் ஏற்படுத்திய தாக்கம் அந்த அளவிற்கு வலுவானது. அது போன்ற ஆசிரியர்களை, அடுத்த தலைமுறையினர் பெறும் பாக்கியத்தைப் பெறுவார்களா? அது பெற்றோர்களாகிய உங்களது கையிலும், அதன் அவசியத்தை உணர வேண்டிய அரசாங்கத்தின் கையிலும் தான் இருக்கிறது.

பணத்தை அதிகமாகக் கொடுப்பது மட்டுமே இதற்குத் தீர்வென்று சொல்ல வரவில்லை. அதுவும் ஓர் காரணி என்பதே. ஆர்வமுள்ளவர்கள் பணம் அதிகமாயிருந்தாலும், குறைவாகயிருந்தாலும், அவர்களாகவே வருவார்கள். அத்தகைய சிலரின் பணியினால் தான், இன்னும் இத்துறை உயிர்ப்புடன் இருக்கிறது. ஆனால் அவர்களின் விகிதம் 5% என்று கூட சொல்லலாம். அது 0% ஆக மாறுவதற்கு முன்பு ஏதாவது செய்தாக வேண்டும்.

குறிப்பு: இங்கே 'ஆசிரியர்கள்' எனக் குறிப்பிட்டது; அனைத்து ஆசிரியர்களையும் என எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்னும் ஆர்வமுள்ள, திறமைவாய்ந்த பல ஆசிரியர்கள், இந்த சமுதாயத்திற்கு சேவை புரிந்து தான் வருகின்றனர்.

ஸ்ருசல்

பிரியாரிட்டி பூஸ்டிங்

மார்ச் ஆறாம் தேதி ஆரம்பிக்கும் இந்த வாரத்தில், என்னை நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், தமிழ்மணம் குழுவினர். 'நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் மகிழ்ச்சி எல்லாம் எல்லாம் இல்லை; சாதாரணமாகத் தான் உணருகிறேன்', என்று பொய் சொல்லத் தோன்றவில்லை. மற்ற நாட்களில் கூட்டத்தோடு கூட்டமாக, என்னுடைய பதிவும் பட்டியலிடப்பட்டதால், இடுகைகள் பதிப்பதில் அதிமாக சிக்கல் இருந்ததில்லை. ஆனால், நட்சத்திரமாக எழுதுவதென்பது நேரடி ஒளிபரப்பைப் போலாதலால், சிறு தவறுக்குக் கூட இடமிருக்கக் கூடாது என மனது எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது.

என்னைப் பற்றிச் சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. என்னுடைய எழுத்தைப் பற்றிச் சொல்லுமளவிற்கு, என்னுடைய எழுத்துத் திறனும் இன்னும் வளரவில்லை. வளரவே ஆரம்பிக்கவில்லை என்றும் கூறலாம். ஏதோ ஒன்றை கூகுளில் தேடப் போய், அது ஒரு தமிழ் வலைப்பதிவிற்கு இட்டுச் சென்றது (யாருடையது என ஞாபகம் இல்லை). அட, தமிழில் கூட எழுத முடியுமா?, எப்படி? எனத் தேட ஆரம்பித்து, முடிவில் இந்த வலையில் வந்து நானும் மாட்டிக் கொண்டேன். ஓர் நட்சத்திரமாக தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் இருந்து கொண்டு, வாசகர்களைக் கவர்வதை விட, சாதாரண உறுப்பினராக இருந்து எப்போதும், உபயோகமாக எழுத வேண்டும் என்பது தான் என்னுடைய முனைப்பு. அந்த நிலையை அடையவதற்கு இன்னும் அதிகமாக உழைக்கவேண்டும் என நன்றாகவே தெரிகிறது.



BlogSpot போன்ற தளங்கள் எனக்கு எழுதுவதற்குத் தாளும், எழுதுகோலும் கொடுத்தது என்றால், தமிழ்மணம் ஒரு பத்திரிக்கை அலுவலகம் போலிருந்து என்னுடையக் கட்டுரைகளை அச்சிட்டு என்னுடையப் பதிவுகளை வாசிப்பதற்கு வாசகர்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. தமிழ்மணத்திற்கு நன்றி!

என்னுடைய பதிவினைப் படித்து, எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்துக்கொண்டிருக்கும் சக தமிழ்மண நண்பர்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களின் ஊக்கம் இல்லையென்றால், எப்போதோ என்னுடைய பதிவை இழுத்து மூடியிருப்பேன்.

டயரிகள் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானலும் எழுதலாம். ஆனால், அதே டயரியினை மற்றவர்கள் படிக்கும் போது உங்கள் மீது ஏற்படும் நல்லெண்ணம் தான், நீங்கள் எப்படிபட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறீர்கள் என்பதனைத் தெரிவிக்கிறது. என்னுடைய வலைப்பதிவும் என்னுடை டயரியைப் போன்றது தான். ஆனால் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. படித்துப் பார்த்து விட்டு கூறுங்கள்; என் எழுத்து வாழ்க்கை எப்படி என்று!

முன்பெல்லாம் ஒரு விசயம் என்னைப் பாதித்தால், அதைப் பற்றியே சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், இப்போதெல்லாம் அப்படி பாதிக்கும் விசயங்களை வலைப்பதிவாக ஏற்றிவிடுகிறேன். இது, எண்ணங்களை சுதந்திரமாகவும், தெளிவாகவும் வெளியிட உதவுவதோடு, ஒத்தக் கருத்துள்ளவர்களை சந்திக்கவும் உதவி புரிந்துள்ளது.

நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, நான் இது வரை ஆற்றிய பணிக்கான பரிசு என்று நினைக்கவில்லை ('இருவர்' டயலாக்); இந்த இளைஞனுக்கு மற்ற வாசகர்களின் ஊக்கம் தேவை என்று தமிழ்மணம் நினைப்பதாலேயே, என்னுடைய பதிவு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.

கணினியில் Priority Boosting என்றொரு எண்ணக்கரு (Concept) உண்டு. ஏதாவது உள்ளீடுகளினாலோ (I/O Wait) அல்லது ஒருங்கிணைப்பினாலோ (Synchronization Wait) ஒரு Thread அதிக நேரம் காத்திருக்க நேர்ந்தால், இயக்குதளமானது (Operating System) அந்தக் குறிப்பிட்ட Thread-க்கு மற்ற Thread-களை காட்டிலும் சிறிது முன்னுரிமை கொடுத்து விரைவாகச் செயல்பட (சில மில்லி விநாடிகள்) அனுமதிக்கும். அதே போல் தான் நட்சத்திர அந்தஸ்தின் மூலமாக எனது பதிவின் நிலையும், சில நாட்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். சிறப்பு நிலை!

என்னை விட வயதிலும், அறிவிலும் மூத்தவர்கள் இருக்கும் இந்த மையத்தில், நான் என்ன புதிதாக சொல்லிவிடப் போகிறேன் எனத் தெரியவில்லை. அவ்வப்போது மனதில் என்ன தோன்றுகிறதோ, அதை வைத்தே இடுகைகள் எழுதி விடுவது வழக்கம். தமிழ்மணத்தில் பலதரப்பட்ட ரசனை, எண்ணங்கள், விருப்பங்கள் கலந்த மக்கள் உள்ளதால், சர்ச்சைக்குரிய தலைப்புகளை எப்போதும் தவிர்த்து வந்துள்ளேன். (ஆனால் அதே தலைப்பில் நண்பர்களிடத்தில், விவாதங்கள் காரசாரமாகப் பறக்கும்).



கடந்த சில நாட்களாக, நட்சத்திர வாரத்திற்காக சில விசயங்களை யோசித்துப் பார்த்தேன். பெரியதாக ஒன்றும் கிடைக்கவில்லை.என்னுடைய தொகுத்தளிக்கும் முறை (தேர்ந்தெடுக்கும் தலைப்புகள், அதனைக் கொடுக்கும் விதம்) ஆஸ்கர் விருது வழங்கும் விழா போல பார்வையாளர்களைச் சோர்வடையச் செய்யாமல், சீராக இருக்கும் என்று உறுதி கூறமுடியாவிட்டாலும், ஓரளவிற்கு சுவாரசியமாகவும், உபயோகமாகவும் எழுத முடியும் என்ற நம்பிக்கையுடன், என்னுடைய நட்சத்திர வாரத்தை, இந்த அறிமுக இடுகையுடன் ஆரம்பிக்கிறேன்.(காலையில் ஆஸ்கர் விழா பார்த்தேன், ஒரு இசைக்கலைஞர் மிகச் சிறப்பாக 5 படங்களில் இருந்து பின்னணி இசையினை வயலினில் வாசித்துக் காட்டினார். அருமையாக இருந்தது. யாரென்று தெரியவில்லை; தெரிந்தவர்கள் கூறவும்.)

இந்த வாரத்தில் எழுதத் தீர்மானித்திருப்பது.


  • எனது எண்ணங்கள் - 4 (திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு)

  • எனது முதல் கதை(?) - 1 (செவ்வாய்)

  • சுயதம்பட்டம் - 1 (வியாழன்)

  • தகவல் - 1 (சனி)


நன்றி!

ஸ்ருசல்

திங்கள், பிப்ரவரி 20, 2006

காட் ஃபாதர் இசை மதிப்பீடு

ஓராண்டு கால தாமத்திற்குப் பிறகு, ரகுமான் இசையில் உருவான காட் ஃபாதர் இசை நேற்று வெளியானது. ரகுமானுக்கு தமிழில் கடைசி படம் அன்பே ஆருயிரே. இந்தியில் ரங்கு தே பசந்தி வெளிவந்தது. ரங்கு தே பசந்தியின் பாடல்களும், படமும் பலத்த வரவேற்பைப் பெற்றன. காட் ஃபாதர் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக, பாடல்கள் வரிசையைப் பற்றி எழுதியிருந்தேன். அதில் அதிக மாறுதல்கள் இல்லை. பாடல்களின் பெயரில் மட்டும் சில மாறுதல்கள்.

படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். ஆனால் மூன்று ரீ-மிக்ஸ் பாடல்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பாடல்கள். அதில் 'இன்னிசை' பாடலுக்கு மட்டும் இரண்டு ரீ-மிக்ஸ்கள்.

பாடல்கள் வரிசை:

  1. இளமை ரீ-மிக்ஸ் - சுரேஷ் பீட்டர்ஸ், அஸ்லம், பிளாசே
  2. கம்மா கரையில் - நரேஷ் அய்யர், செளம்யா
  3. காற்றில் ஒரு வார்த்தை - எஸ்.பி.பாலசுப்ரமணியன், சாதனா சர்கம்
  4. இன்னிசை - நரேஷ் அய்யர், ஸ்ரீனிவாஸ், மஹதி
  5. இளமை - அஸ்லம், தன்வி, ஷாலினி
  6. தினம் தினம் தீபாவளி - கல்பனா, சோனு கக்கர், லியோன், ஜேம்ஸ், பீர் முகமது
  7. இன்னிசை - நரேஷ் அய்யர், ஸ்ரீனிவாஸ், மஹதி
  8. தீயில் விழுந்த - ஏ.ஆர்.ரகுமான்
  9. இன்னிசை

Godfather Music Review - Music By A.R.Rahman

காற்றில் ஒரு வார்த்தை - எஸ்.பி.பாலசுப்ரமணியன், சாதனா சர்கம்

எளிமையான மெல்லிசை. இது 'காதலெனும் தேர்வெழுதி' பாடல் போலவே இருக்கிறது. போதாக்குறைக்கு இந்த பாடலைப் பாடியதும் எஸ்.பி.பி. தான். ஆனால் இரண்டு முறை கேட்டால் கண்டிப்பாகப் பிடித்துவிடும். மற்றுமொரு காதலன், காதலி உரையாடல். 'உன்னை பொட்டிற்கடியில் வைத்துப் பார்ப்பேன்; வேண்டாம் பொட்டு விழுந்தால் வெயில் அடிக்கும்', என்று கேட்டுக் கேட்டு புளித்துப் போன ரகம். சாதனா சர்கத்தின் குரல் அழகு.

தினம் தினம் தீபாவளி - கல்பனா, சோனு கக்கர், லியோன், ஜேம்ஸ், பீர் முகமது

டப்பாங்குத்துப் பாடல். தீபாவளி என ஆரம்பித்தாலே, குரல் வித்தியாசமாக இருக்க வேண்டும் போல. நாயகன் பாடலில் வரும் 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலில் வருவது போலவே இந்தப் பாடலிலும் பெண் குரல் சிறிது வித்தியாசமாக இருக்கிறது. 00:25-ல் வரும் இசை நன்றாக இருக்கிறது. மற்றபடி வேறெதுவும் என்னைக் கவரவில்லை.

கம்மா கரையில் - நரேஷ் அய்யர், செளம்யா

இது ஏ.ஆர்.ரகுமான் பாடல் என்று நம்ப முடியவில்லை. ராகமும், வரிகளும் சுமார் தான்.

தீயில் விழுந்த - ஏ.ஆர்.ரகுமான்

அம்மா பாடல். ரகுமானே பாடியது. நன்றாக இருக்கிறது. அருமையாகப் பாடியிருக்கிறார்.

தீயில் விழுந்த தேனா - இவன்
தீயில் வடிந்த தேனா
தாயைக் காக்கும் மகனா - இல்லை
தாயுமானவனா?
என ஆரம்பிக்கிறது.

இன்னிசை - நரேஷ் அய்யர், ஸ்ரீனிவாஸ், தன்வி, மஹதி

அருமையான மெல்லிசை, கர்நாடக சங்கீதப் பாடல். ஆரம்பத்தில் வரும், "அச்சில் வார்த்த பதுமையும் நீயே!" மிக அருமை. மஹதியும், தன்வியும் உருகிப் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலின் ரீ-மிக்ஸ் பதிப்பின் இடையில் வரும் சில வரிகள் (தாங்கிட தாங்கிட), வெள்ளி மலரின் பாடலின் ஆரம்பத்தை ஞாபகப்படுத்துகிறது. நரேஸும் நன்றாகப் பாடியிருக்கிறார். நல்ல வரவேற்பை பெறும்.

இளமை - அஸ்லம், தன்வி, ஷாலினி

கண்டிப்பாக, படத்தின் சிறந்த பாடல் இதுவாகத் தான் இருக்கும். பெரும்பாலான ரகுமான் ரசிகர்கள், 'இன்னிசை' பாடல் தான் சிறந்த பாடல் என்கின்றனர். எனக்கென்னவோ இந்த பாடல் தான் மிகவும் பிடித்திருக்கிறது. வித்தியாசமான இசை. அசத்தும் பீட். கேட்ட முதல் முறையே பிடித்து விட்டது. அஸ்லம் அருமையாகப் பாடியிருக்கிறார். ஷாலினியின் குரல் பாடலுக்கு வளம் சேர்க்கிறது. சாதாரண வரிகள் ஆனால் நல்ல அழுத்தம்.

இளமை........
விடுகதை

பெண்களே........
விடை


கீழ்கண்ட வரிகளில் வரும் ராகம் கவர்கிறது.

தமிழ்நாட்டில் எத்தனை கிளிகள் எத்தனை கிளிகள் - கூட்டிற்குள்
வர வேண்டும் அத்தனை கிளியும் அத்தனை கிளியும் - வீட்டிற்குள்
இரவெல்லாம்........ சிறகு விரித்து கவிதை பேசுங்கள்
அதிகாலை........ அனுப்பி வைப்பேன் போங்கள்.


அனைத்து பாடல்களும் அருமை என்று சொல்ல மாட்டேன். ஆனால் இரண்டு அருமையான பாடல்கள் இருக்கின்றன. கே.எஸ்.ரவிகுமார் முயற்சித்திருந்தால் பாடல்கள் இன்னும் நன்றாக வந்திருக்கும். வித்தியாசம் 'இளமை' பாடலில் மட்டும் தெரிகிறது. நான் முன்பே குறிப்பிட்டிருந்தது போல, ரவிகுமாரின் படங்களில், ரகுமானின் பாடல்கள் எப்போதும் பெரிய அளவில் பேசப்பட்டதில்லை (ஒன்றிரண்டு பாடல்கள் ஹிட்டாகும்). அதே கதி தான் இந்தப் படத்திற்கும். மற்றுமொரு 'அன்பே ஆருயிரே'-வாகி விடுமோ என்ற பயம் ஏற்படுகிறது. வைரமுத்துவிற்கு என்ன ஆயிற்று? இயக்குநர் தேவையான அளவு உழைக்கவில்லை என்று தெரிகிறது.

எனக்குப் பிடித்த பாடல்களின் வரிசை

1. இளமை
2. இன்னிசை
3. தீயில் விழுந்த
4. காற்றில் ஒரு வார்த்தை

CD-யின் விலை : 95 வெளிமாநிலங்களில் 100. தமிழ் படங்களின் குறுந்தட்டுகள் கடந்த சில மாதங்களாக அட்டைகளில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. ஆரம்ப காலங்களில், கண்ணாடி பெட்டியில் வைத்து விற்பனை செய்தனர். பின்னர் பிளாஸ்டிக் அட்டைகளுக்கு மாறினர். இப்போது தாள் அட்டையில் (சைக்கிள் பத்திகள் வருமே அந்த அட்டையில்) வைத்து, தருகின்றனர்.வருமானத்தை பெருக்க இன்னொரு உத்தியா? குறுந்தட்டுகளை எப்படி பத்திரமாக வைத்திருப்பது?

தமிழில், யுவன், ஹாரிஸ், வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்களின் போட்டியை சமாளிக்க காட் ஃபாதர் மட்டும் போதாது. இதை விட அற்புதமான ஆல்பம் ரகுமானிடமிருந்து வர வேண்டும். 'ஜில்லென்று ஒரு காதல்', அல்லது 'சிவாஜி'-க்காக காத்திருக்க வேண்டும் போல் தெரிகிறது. ஆனால் ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல தரப்பட்ட கலாச்சார வேறுபாடு கொண்ட மொழிகளில் பணிபுரிந்து, அந்தந்த ரசிகர்களைத் திருப்திபடுத்தக் கூடிய இசையமைப்பாளர் ரகுமான் மட்டுமே.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் திரைப்படம், இசை சம்பந்தமாக 4 பதிவுகள் தடாகத்தில் வந்துவிட்டதால், 'காட் ஃபாதர்' திரைப்படம் பார்த்தாலும், விமர்சனம் எழுதக் கூடாது என உத்தேசித்திருக்கிறேன்.

ஸ்ருசல்

வெள்ளி, பிப்ரவரி 10, 2006

இந்தியாவின் நேர்மையற்ற முறையீடு - இன்சமாம் கதறல்

நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தான் 40/8 என்ற வலுவான நிலையில் இருந்த போது அந்த அணியின் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக், இந்தியாவின் தலைசிறந்த பவுலர் டோனியினால் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். முன்னதாக இந்தியா 50 ஓவர்களில் 380 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிபெற இன்னும் 360 ரன்களே எடுக்க வேண்டிய நிலையில், இன்சாமின் அவுட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய அணியினர் அம்பயரிடம் அவுட் கேட்டதைப் பார்த்த இன்சமாம் பெரும் அதிர்ச்சி அடைந்து மயக்கம் அடைந்தார். பின்னர் மயக்கம் தெளிந்ததும் அம்பயரிடம் சென்று, "உங்களை இந்திய அணியினர் ஏமாற்றி விட்டார்கள். இன்று ஏப்ரல் 1-ம் தேதி. எனக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். உங்களிடம் அவுட் எல்லாம் கேட்க மாட்டார்கள். உண்மையிலேயே அனைவருமே அடுத்த ஓவரை நான் வீசுகிறேன் என்று கூறிக்கொண்டு ஆர்வத்தில் தான் ஓடி வந்தார்கள். அதனைப் புரிந்து கொள்ளாமல் அவுட் கொடுத்து விட்டீர்கள்", என்று கண்ணீருடம் முறையிட்டார். ஆனாலும் அவரின் பேச்சை கேட்காமல் அம்பயர், "எத்தனை நாட்கள் தான் இந்தியர்களை கதற கதற தோற்கடிப்பீர்கள். அவர்களும் ஒரு மேட்சாவது ஜெயிக்கட்டும்.", என்று கூறி அவுட் கொடுத்தார்.

ஆனாலும், இன்சமாமின் வெளியேற்றம் இந்தியாவின் தோல்வியை எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணம் இந்திய அணியின் பவுலர்கள் பார்த்துக் கொண்டனர். இந்திய அணியினர் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் விளையாடி, இந்தியாவை வழக்கம் போல தோல்வியுறச் செய்தனர். ஆட்டத்தின் முடிவில் சோயிப் அக்தர் 32 சிக்சர்களுடன், 240 ரன்கள் குவித்து 'மேன் ஆஃப் த மேட்ச்' பட்டம் வென்றார்.

ஆட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பேட்டியளித்த இன்சமாம்-உல்-ஹக், "ஆட்டம் இக்கட்டான நிலையில் இருந்த போது, டோனி பொறுப்பற்ற முறையில் பந்தை ஸ்டம்பை நோக்கி வீசியிருக்கக் கூடாது. ஆனாலும் பந்து வீசி விதத்தை விட, நெறிகெட்ட முறையில் இந்திய வீரர்கள் அவுட் கேட்ட விதம் தான் என்னை மிகவும் பாதித்து விட்டது. இது கிரிக்கெட்டின் மீதான மதிப்பையும், இந்தியாவின் மீதான நம்பிக்கையும் கெடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இது போன்ற முறையற்ற, நேர்மையற்ற ஆட்டத்தை என் வாழ்நாளிலேயே கண்டதில்லை. எதற்குமே அமைதியாக இருக்கும் டிராவிட் கூட அம்பயரின் முன்னால் தரையில் விழுந்து அடம்பிடித்து அழுது அவுட் கேட்டது எனது மனநிலையை மிகவும் பாதித்து விட்டது. இந்திய அணியினர் மீது மான நஷ்ட வழக்குத் தொடரலாம் என முடிவெடுத்திருக்கிறேன். மேலும் இந்திய வீரர்கள் கங்குலி, சித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா முதலியோர் தங்களுடைய ஆதரவை எனக்குத் தெரிவித்துள்ளனர். இனி மேலாவது, டோனி போன்ற பகுதி நேர பவுலர்கள் பந்தை ஸ்டம்பை விட்டு ஒன்றிரண்டு அடிகள் தள்ளி வீசுவார்கள் என நினைக்கிறேன். டோனி ஓர் வளர்ந்து வரும் கிரிக்கெட் ஆட்டக்காரர். அவர் அகார்கர், ஜாகீர்கான் போன்ற அனுபவம் வாய்ந்த பவுலர்களிடம் எங்கே, எவ்வாறு பந்து வீசுவது எனக் கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது என்னிடமாவது கேட்டிருக்கலாம். பந்தை எங்கே வீச வேண்டுமென்று; நான் இடத்தைக் காட்டியிருப்பேன்.

1998 ம் ஆண்டு நடந்த போட்டியில் என்னை இந்திய வீரர்கள் ரன் அவுட் செய்த போது, அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால் அசாரூதீன் அம்பயரிடம் சென்று, "இன்சாமிற்கு காலில் முள் குத்தி விட்டது. அந்த வேதனையைப் பொறுட்படுத்தாமல் ஓடி வருகிறார். அதைப் பார்க்காமல் அவுட் கேட்பதற்கு நாங்கள் ஒன்றும் பகுத்தறிவில்லாதவர்கள் அல்ல. நாங்கள் அவுட் கேட்கவே இல்லை. நாங்கள் அவுட் கேட்காமல் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இன்சமாமிற்கு எப்படி அவுட் கொடுக்கலாம்', என வாதிட்டு என்னை மீண்டும் விளையாடும்படி கேட்டுக்கொண்டார். டிராவிட் போன்றோர்கள் அசாரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆண்டவன் இந்தியர்களுக்குப் பகுத்தறிவினையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் கொடுக்கட்டும்.

ஐ.சி.சி-ன் சில விதிகளும் குழப்பமாக இருக்கின்றன. சென்ற ஆட்டத்தில் டெண்டுல்கர் பந்து வீசும் போது, காற்றில் பந்து சிறிது ஆட்டம் கண்டு, ஸ்டம்பைத் தகர்த்தது. அது கூட புரியாமல் அம்பயர் அவுட் கொடுத்தார். கேட்ச், போல்ட், ரன் அவுட் போன்ற முறைகளை கிரிக்கெட்டிலிருந்து நீக்க வேண்டும்.", என ஆக்ரோஷத்துடன் கூறினார்.

செய்தி:

‘India’s appeal against spirit of the game'

Islamabad: Pakistani captain Inzamam-ul-Haq has slammed the Indian team for appealing against him for obstructing the field in the first one-day international at Pewhawar and termed it as “against the spirit of cricket”.

Inzamam was ruled out obstructing the field after he stopped a fielder’s throw with the bat while attempting to get back to his crease in the series opener on Monday.

Pakistan, chasing 329 to win, went on to win the match by Duckworth/Lewis method after their innings was cut short by three overs due to bad light.

The home captain, who became only the third person to be given out in this rare manner in ODIs, said he never imagined that the Indian squad led by Rahul Dravid would resort to “such a thing” and warned that the appeal made in “an unsportsmanlike manner” can lead to bad blood between the two teams.

Inzamam also made a veiled reference to Indian coach Greg Chappell instructing his younger brother Trevor to bowl underarm in a one-day international to prevent New Zealand from scoring a boundary off the last ball for victory in the early 1980s.

“In my role as the Pakistan captain I would say that the appeal from the Indian fielders was against the spirit of cricket.

“Certainly, there are several modes in which a batsman can be declared out, but many of them are not in the spirit of the game,” Inzamam wrote in his column in The News.

“I am particularly referring to the obstructing the field, handled the ball and hit the ball twice dismissals, also about the illegal practice of underarm bowling and running out a batsman while backing out.

“The Indian fielders appealed when the Peshawar match was in a crucial state. I would not have imagined Rahul Dravid and his team would do such a thing.

“I am not bothered about my dismissal but an appeal made in an unsportsmanlike manner by the visiting team can have an adverse affect on the relations between the two opponents.

“I have surely impressed upon my team not to make much of the Peshawar incident. However, in my personal opinion the appeal was not made in a sporting manner. Instead, it might have left a bad taste in the mouth.”

Inzamam said that the umpires’ decision was certainly according to the rules of the game, but added however that he was unable to comprehend this particular law of cricket. He said that had he not brought his bat in front of the ball it could have hit his body instead. Indian team manager Raj Singh Dungarpur told PTI that he had not seen the comments made by the Pakistani captain but assured that the team would discuss it at its meeting.

“We may also take it up with the concerned authorities if it’s warranted,” he added. PTI

ஸ்ருசல்

திங்கள், பிப்ரவரி 06, 2006

சமீபத்தில் மிகவும் ரசித்தப் பாடல்கள்

கடந்த இரண்டு மாதங்களில் மிகவும் ரசித்துக் கேட்டப் பாடல்களின் பட்டியல்.

1. உன்னைக் கண்டேனே

படம்: பாரி ஜாதம்
பாடியவர்கள்: ஹரிச்சரண், சுருதி
இசை: தரண்

பாக்யராஜ் மிகச் சிறந்த கதாசிரியர். தனது மகளின் அறிமுகத்திற்காக அதிக சிரத்தையெடுத்து வருகிறார். பார்க்கலாம் திரைப்படம் எப்படி அமைகிறதென்று! கவர்ந்திழுக்கும் பெண் குரல். ஹரிச்சரணும் ('உனக்கென இருப்பேன்' புகழ்) நன்றாகப் பாடியிருக்கிறார். பாடலின் வரிகள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். 'ஏங்கினேன், தேங்கினேன்', ராகம் நன்றாக இருக்கிறது. பாடலின் ஆரம்பத்தில் வரும் இடி, மின்னல் சத்தத்தைக் கேட்கும் போது, தில் சே (உயிரே) படத்தின் எழுத்துப் (Title) பகுதியில் வரும் இசை ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அதில் இசை இடி & மின்னலாக ஆரம்பித்து, 40 வினாடிகளுக்குப் பிறகு மாறும் வயலின் இசை இதமாக இருக்கும்.

2. தாவணி போட்ட தீபாவளி

பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், ஸ்ரேயா கோஷல்
படம்: சண்டக் கோழி
இசை: யுவன் சங்கர் ராஜா

நல்ல பாடல். ராஜாக்களின் பேவரைட் பாடகி ஸ்ரேயா வழக்கம் போல சிறப்பாகப் பாடியிருக்கிறார். "விட்டுடு, விட்டுடு..." நல்ல ராகம். ஆரம்பத்தில், இந்த படத்தின் பாடல்களைக் கேட்கும் போது, எதுவுமே பிடிக்கவில்லை. இந்தப் பாடல் கூட ஏற்கனவே கேட்ட பாடலின் சாயல் இருந்ததால். பின்னர் தொலைக்காட்சியில் பார்க்கும் போது, இந்தப் பாடல் பிடித்து விட்டது. இந்தப் பாடல் மிகவும் நன்றாகவும், தெளிவாகவும் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் ஜேசுதாஸ், மது பாலகிருஷ்ணன், உன்னிமேனன் உள்ளிட்ட கேரளப் பாடகர்களின் குரல் அனைத்தும், ஜேசுதாஸின் குரல் போலவே இருப்பதால், வேறுபடுத்துவது சிரமாக இருக்கிறது. ஓர் மலையாளியிடம், அவருக்கு அதே சிரமம் இருக்கிறதா என வினவிய போது, "எங்களுக்கு அவர்கள் குரல் நல்ல பழக்கம் இருப்பதால், உங்களுக்கு இருப்பது போல சிரமம் கிடையாது. குரல் ஒன்று போல இருப்பதற்குக் காரணம்; இப்பொழுது இருக்கும் பாடகர்களுக்கும், பாடகராக முயற்சி செய்யும் எல்லாருக்குமே ஜேசுதாஸ் போல வர வேண்டும், பாட வேண்டும் என்ற வேட்கை உண்டு. அது, இந்த ஒற்றுமைக்குக் காரணமாக இருக்கலாம்", என்றார்.

3. நெஞ்சாங்கூட்டில்

படம்: டிஸ்யூம்
பாடியவர் : ஜெயதேவ், ராஜலக்ஷ்மி
இசை: விஜய் ஆண்டனி

படத்திற்குப் பாடல்கள் பெரிய பலம். பாடல்களுக்காகத் தான், திரைப்படம் பார்க்க சென்றேன். எதிர்பார்த்ததை விட படம் நன்றாகவே வந்திருக்கிறது. விஜய் ஆண்டனி கவனிக்கப்பட வேண்டியவர். 'நெஞ்சாகூட்டில்..நெஞ்சாகூட்டில்..நெஞ்சாகூட்டில் நீயே நிற்கிறாய்' என்று இழுக்கும் போது பின்னணியில், பிலிம் சுருளை இழுப்பது போல் வரும் இசை வித்தியாசமாக இருக்கிறது.

4. நூவு நேனு கலிசுண்டே நாக்கு எந்த இஷ்டம்.

படம்: கங்கோத்திரி
இசை: கீரவாணி
பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியன், மாளவிகா

சில மாதங்களுக்கு முன்பு அகன்ற வழி இணையத் தொடர்பு கொடுப்பவருக்கு தொலைபேசி செய்த போது, அவர் வைத்திருந்த ரிங் டோனில் இசைத்த பாடல் மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் அது ஒரு தெலுங்கு பாடல். அலுவலகத்தில் பணிபுரியும் நண்பருக்கு, அந்த எண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து அந்தப் பாடல் என்ன திரைப்படம் என்று கூறுமாறு கேட்டேன். விடையுடன், பாடலும் கிடைத்தது. என்ன ஒரு அருமையான மெல்லிசைப் பாடல்!. நீண்ட நாட்கள் கழித்து மீண்டும், சென்ற வாரம் முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தேன். சலிக்கவே சலிக்காத பாடல்.

5. தாஜ்மஹால் ஓவியக் காதல்

பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன், மதுமிதா
படம்: கள்வனின் காதலி
இசை: யுவன் சங்கர் ராஜா

இந்தப் படத்தின் குறுந்தட்டை வாங்கும் போது, வாங்கலாமா, வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது. சரி பாடல் நன்றாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, லஜ்ஜாவதியே, நியூ பாடல்கள் இணைப்பாகக் கிடைக்கிறதே என்ற நம்பிக்கையில் வாங்கினேன். இரு பாடல்கள் நன்றாக இருந்தது. 'ஏனோ கண்கள்' மற்றுமொரு பாடல். சாதனா சர்கத்தின் குரல், அழகு! யுவனின் இசையில், கடந்த சில மாதங்களில் மட்டும் சண்டக்கோழி, புதுப்பேட்டை, அகரம், கள்வனின் காதலி படங்கள் அடுத்தடுத்து வந்து விட்டன. இதனால் தான் ஒரு சில பாடல்களைத் தவிர்த்து மற்ற பாடல்கள் வரவேற்பு பெறத் தவறுவது போல் தோன்றுகிறது.

6. ஒரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடிப் போகாது

பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
படம்: புதுப்பேட்டை
இசை: யுவன் சங்கர் ராஜா

மற்றுமொரு சோகம் ததும்பிய தத்துவப்பாடல், யுவனிடமிருந்து. பாடலின் வரிகள், பாடிய விதம், இவற்றை விட, இந்த பாடலின் சிறப்பிற்குக் காரணம் இசை. அதுவும் இரண்டு சரணங்களுக்கும் முன்பு வரும் வயலின், அருமை அருமை. முக்கியமாக 4:00 - 4:24 வரை. சமீபத்தில் இப்படியொரு வயலின் இசையைக் கேட்டதில்லை.

7. ரூபரூ
பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான், நரேஷ் அய்யர்
படம்: ரங்கு தே பசந்தி
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இந்தப் பாடலைப் பற்றியும், இது எடுக்கப்பட்ட விதத்தைப் பற்றியும் ஏற்கனவே ரங்கு தே பசந்தி இசை மதிப்பீட்டில் எழுதி விட்டேன். இந்தப் பாடலைப் பற்றி ரகுமான் இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். "இந்தப் பாடலை நான் பாடுவதற்கு முன்பாக, நரேஷ் அய்யரை வைத்து பதிந்து பார்த்ததில் அது சிறப்பாக வரவே அதையே பயன்படுத்தினேன். அதனால் தான் ஒரு சில வரிகள் மட்டுமே நான் பாடுவதை நீங்கள் கேட்கிறீர்கள். மேலும் 'ஹேய் சாலா' என்றெல்லாம் விழித்து பாடுவது எனக்கு சவுகரியமாக இருக்காது". இளமை ததும்பும் குரல், இசை.

8. கேட்கலியோ கேட்கலியோ

படம்: கஸ்தூரி மான்
பாடியவர்கள்: திப்பு, மஞ்சரி மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா

என்ன ஒரு அருமையான பாடல்! பெண் குரல் மட்டும் இன்னும் சிறிது நன்றாக இருந்திருக்கலாம். கோரஸ் மிக மிக அருமை (முக்கியமாக ஆரம்பத்தில்). உருக வைக்கும் இசை. இதே படத்தில் வரும் "நேத்து வரைக்கும்" (சுஜாதா பாடியது) பாடல், சிறைச்சாலையில் வரும் "ஆலோங்கிளித் தோப்பிலே" பாடல் போலவே இருக்கிறது.

ஸ்ருசல்

புதன், பிப்ரவரி 01, 2006

காட்பாதர் - இசை வெளியீடு

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் காட் பாதர் திரைப்படத்தின், இசை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. சென்ற வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே, இப்போது வெளியிடப்படும், அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தள்ளிப் போடப்பட்டு வந்த இசை வெளியீடு கடைசியாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு வந்து விட்டது. படத்தின் தாமதத்திற்கு, அஜீத்குமார் ஒப்புக்கொண்டிருந்த மற்ற படங்கள், தயாரிப்பாளர் - அஜீத் மோதல், அஜீத்தின் திடீர் உடல் எடை குறைவு(ப்பு) முதலான காரணங்கள் சொல்லப்பட்டன.



பாடல்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே இசையமைக்கப்பட்டது, அதன் தரத்தை எவ்விதத்திலும் பாதிக்காது என நம்புகிறேன். கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில், ரகுமானின் இசையில் பாடல்கள் எப்போதும் பெருமளவில் பேசப்பட்டதில்லை. ஒன்றிரண்டு பாடல்கள் வரவேற்பைப் பெறும். உதாரணத்திற்கு முத்து, படையப்பா மற்றும் தெனாலி.

காட்பாதர் படத்தில் கீழ்கண்ட பாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. (இது உறுதிசெய்யப்படாத தகவல்)

இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடல்கள்: கவிஞர் வைரமுத்து

பாடல்கள் வரிசை:

காற்றில் ஒரு வார்த்தை - எஸ்.பி.பாலசுப்ரமணியன், சாதனா சர்கம்
டீரீம் தீபாவளி - கல்பனா, சோனு கக்கர், லியோன், ஜேம்ஸ், பீர் முகமது
தீயில் விழுந்த - ஏ.ஆர்.ரகுமான்
இன்னிசை (Film Mix) - நரேஷ் அய்யர், ஸ்ரீனிவாஸ், மஹதி
இளமை - அஸ்லம், தன்வி, ஷாலினி
ஊஹா - நரேஷ் அய்யர், செளம்யா
இன்னிசை - குழுப்பாடல்
இன்னிசை (Radio Mix) - நரேஷ் அய்யர், தன்வி, மஹதி
இளமை (Remix) - அஸ்லம், தன்வி, ஷாலினி

மிருதங்கம்: சீனு
பக்கவாத்தியம்: ஸ்ரீனி

Additional Programming: சஞ்சய்
Additional Mixing: சுரேஷ் பீட்டர்ஸ்
Recorded At: பஞ்சதன் ரெக்கார்ட்ஸ் இன், A. M ஸ்டுடியோஸ்
Sound Engineer: H. ஸ்ரீதர், S. சிவகுமார்.
Asst. Sound Engineer: ஆதித்ய மோடி, கார்த்திக். V

ஸ்ருசல்