வெட்டிப்பேச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெட்டிப்பேச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 26, 2014

தமிழ் பண்டிட்கள்

சமீபகாலமாக தமிழ் டி.வி. சானல்களில், தமிழ் உணர்வாளர்கள் மிக அதிகமாக தென்பட ஆரம்பித்துவிட்டார்கள். நான் பார்ப்பது மிக சொற்பமான நிகழ்ச்சிகளே; அவற்றிலும் கூட இவர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதை கண்டு மனம் மிகவும் நெகிழ்ச்சியடைகிறது.

இவர்கள் பேசும் போது, தமிழைத் தவிர பிற மொழி சொற்களை உபயோகப்படுத்தமால் பேச வேண்டும் என்ற குறிக்கோளுடன் பேசுவதை கேட்பதற்கே தவம் செய்திருக்க வேண்டும். எதனால் இவர்கள் இப்படி தமிழிலேயே சதா சர்வகாலமும் பேசுகிறார்கள்? நிகழ்ச்சியை பார்க்கும் நேயர்களுக்கு ஆங்கிலம் புரியாது என்பதாலா அல்லது தமிழுக்கு இணையாக ஆங்கிலத்தில் வார்த்தைகள் இல்லை என்பதாலா அல்லது தான் மிகவும் கற்றவன் என்று மற்றவர்களுக்கு ஆங்கிலம் பேசித் தான் தெரியவைக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்ற எண்ணத்தினாலா அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்கள் அவர்களை ஆங்கிலத்தில் பேச அனுமதி மறுத்து விடுவார்கள் என்ற ஐயமா?

நிகழ்ச்சி முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் ஒரு மணி நேரமும் இலக்கணப் பிழையில்லாமலும், மற்றவர்களுக்கு அழகாக புரியும் வண்ணம் எளிமையான ஆங்கிலத்தில் சரளமாக உரையாடக்கூடிய சொல்வண்ணமிருந்தாலும், தமிழ் நாட்டில் தினமும் வேலையை முடித்து வீட்டுக்கு வந்ததும் டி.வி.யே கதியென்று கிடக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற சாதாரண விசயத்தினை புரிந்து கொண்டு தமிழிலேயே உரையாடும் இந்த தமிழ்ப்பற்றுள்ள, பகுத்தறிவாதிகளும், இங்கிலாந்து துரைகளுடன் தினமும் காபி, டீ அருந்துவது மட்டுமல்ல, அவர்களுடன் கபடி, பாண்டி, உள்ளே வெளியே போன்ற ஆட்டங்களை அனுதினமும் ஆடக் கூடிய வாழ்க்கை முறையை பெற்ற இந்த அறிவு ஜீவிகளை நினைத்தால் எனக்கு புல்லரிக்கிறது.

என்னே ஒரு பரந்த மனப்பான்மை, அறிவு, தமிழ்ப் பற்று.

பற்றிக் கொண்டு வருகிறது, இந்த மூடர்களை நினைத்தால். மூடர்கள் தான்.

தத்தம் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களும், ஆங்கிலத்தில் மிகச் சரளமாக பேசக்கூடிய நபர்களும் - உதாரணம் ப.சிதம்பரம், கமலஹாசன் - தமிழை 99% வேற்று மொழிக் கலக்காமல் பேசும் போது, இந்த இரண்டிலுமே தேர்ச்சி பெறாத இந்த அரைவேக்காடுகள் ஏன் இப்படி பிதற்றுகிறார்கள்?

எத்தனை நிகழ்ச்சிகள் - அனுதினமும் இதே கதை தான். ரியாலிட்டி ஷோக்கள் (சூப்பர் சிங்கர்), நேர்காணல்கள் (காபி வித் டி.டி), முக்கியமாக விவாதக் களங்கள். தமிழில் ஆளுமைமிக்க கோபிநாத் நடத்த கூடிய நீயா நானாவிலும் கூட (நகரத்து வாழ் மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் - சாப்ட்வேர் வல்லுநர்கள்?) ஆங்கிலம் சரளமாக புழங்குகிறது. அவர் அதனைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல், அவரே கூட, "இந்த மானே தேனே இப்படின்னு நடுவுல போட்டுக்குனன்ற" மாதிரி, சமயங்களில் ஆங்கிலத்தை அள்ளித் தெளிப்பதுமுண்டு.

எதுக்கு இதெல்லாம்? எங்க போய் முடியப் போகுதோ!

இன்னைக்கு ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். காபி வித் டி.டி - கலந்து கொண்டவர்கள் யூகி சேது, பிரதாப் போத்தன். அடேங்கப்பா, என்ன ஒரு பீட்டர் - அதிலும் பிரதாப் போத்தனாவது - சரி, தாய் மொழி தமிழில்லை; விட்டு விடலாம் - யூகி சேது...... காது பிஞ்சிடுச்சு.

அதற்கு காரணம், அவரது ஆங்கிலம் மட்டுமல்ல. என்ன ஒரு சுய புராணம்.

"கமல் எனக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர்"

"கே.பி. என்னோட டேப்ப பார்த்துட்டு, எப்படி இப்படி 12 minutes பேசுன; இந்த நிகழ்ச்சியை (நையாண்டி தர்பார்) நீ தான் ஆங்கர் பண்ணனும் கேட்டுகிட்டார்"

"ஏ.ஆர்.முருகதாஸ், இந்த கேரக்டரை நீங்க தான் நடிக்கணும், இது ஹீரோவும் இல்லாத, வில்லனும் இல்லாத, காமெடியுமில்லாத ஒரு காரெக்டர் நீங்க பண்ணாதான் கரெக்டா இருக்கும்"

"கமல் என்னை மிகவும் மதிப்பவர்"

"ரமணா, பஞ்சதந்திரம் படத்துக்கும் அப்புறம் 100 படமாவது வந்திருக்கும். எல்லாம் reject பண்ணிட்டேன்"

முக்கியமானது...

"விஜய் சேதுபதி பண்ண அந்த சூது கவ்வும் கேரக்டர் எனக்காதான் பண்ணது. கடைசில அவர் பண்ணிட்டார்"

யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா சொல்லவே இல்லை. நீங்க பண்ணிட்டாலும்...

டி.டி. ஒரு கேள்வி கேட்டார்...

"உங்களை இண்டர்ஸ்டிரில வணங்காமுடின்னு சொல்றாங்களே"

அதற்கும் ஒரு பெரிய தம்பட்டமான பதிலை கொடுத்தார்.

எனக்கு என்னவோ, கேள்வி இப்படி தான் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

"உங்களை இண்டர்ஸ்டிரில ரொம்ப மண்டகனம் பிடிச்சவர்னு சொல்றாங்களே... அப்படியா?"

நான் சொல்றதையெல்லாம், இவர்கள் எல்லாரும் கேட்டுக்கொண்டிருப்பதனைப் போலவும், அப்படியே பார்க்க நேரிட்டாலும் உடனே திருந்தி கூடுமானவரைக்கும் தமிழில் மட்டுமே பேசப் போவது போலவும் இங்கே பதிவிடுகின்றேன். என் பணி கொட்டித் தீர்ப்பது - வழக்கம் போல்.

முக்கியமான ஒன்று: உங்களுடைய நிகழ்ச்சியை ஒமாவும், ஜார்ஜ் புஸ்ஸூம் பார்க்கவில்லை. சாதாரண மக்கள் தான். நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதைப் பார்த்து தான் எங்களது ஆங்கில அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையேற்ப்பட்டால், நாங்கள் ஆஜ் தக், Sahara Samay போன்ற சானல்களை பார்த்துக் கொள்வோம்.


வியாழன், அக்டோபர் 11, 2007

தேவையற்ற ஓர் பதிவு

பொதுவாக, எனது பின்னூட்டத்தை பதிவாக எழுதியதில்லை (இவர் பெரிய மேதை). பதிவர் ஒருவரின் பதிவிற்கு பின்னூட்டமிட ஆரம்பித்த பிறகு அது பெரியதாக செல்லவதை தாமதாக உணர்ந்து அதனை வேறு வழியில்லாமலும், இதனால் எனக்கு மற்ற தமிழ்மணக் குழுவினரிடமிருந்து பலத்த அடி விழும்; அதற்கு பின்னொரு காலத்தில் ஆதாரம் வேண்டும் என்ற காரணத்தினாலும் (அடிக்கிறவன் வீரன் இல்லை. எவ்வளவு அடி கொடுத்தாலும் தாங்கிட்டு இருக்கான் பார்த்தியா அவன் தான் வீரன் :)) அதனை இங்கே பதிகிறேன். தாமதாக உணர்ந்த காரணத்தினால் இது பின்னூட்டம் போல் இல்லாமாலும், பதிவினைப் போல் இல்லாமலும் இருப்பதை உணர முடிகிறது.

மேலும் நான் ஏற்கனவே இதனைப் பற்றி ஒரு வருடத்திற்கு முன்பாக என்னுடைய பதிவொன்றில் மேலோட்டமாக தொட்டு விட்டு சென்றிருந்தேன்.

பின்னணி தெரிய முதலில் மலர்கள் பதிவினைப் படிக்கவும்,

அவரின் பதிவிலிருந்து நான் புரிந்து கொண்டவை.

1. பெண்களுக்கு இன்னும் - ஆண்கள் போல் - சுதந்திரம் வேண்டும்
2. ஆண்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். (ஒழுக்கம் என்பது பெண்களுக்கான மட்டுமே என்பதை மீறி, அதை ஆண்களுக்கும் புகுத்த வேண்டும்)

ஏன் நீங்கள் ஒழுக்கம் கெட்ட ஆண்களை மாத்திரம் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறீர்கள்? ஒழுக்கத்தினைப் போற்றும் ஆண்களும் சரிக்கு சமமாய் இருக்கிறார்கள். நீ பெரிய ஒழுக்கமுள்ளவனாக்கும்; அதை இங்க சொல்லுறீயாக்கும் என்று நினைக்க வேண்டாம். நானே தான் சரிக்கு சமமாய் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளேன். நீங்கள் எப்படி வேண்டுமாலும் என்னை எடுத்துக் கொள்ளலாம். மேலும், ஒழுக்கம் என்பது பெண்களிடம் ஆணின் நடத்தை / அல்லது ஆண்கள் விசயத்தில் பெண்ணின் நடத்தை என்று மட்டுமே பார்க்கப்பட வேண்டியதல்ல. அது பலவற்றை குறிக்கிறது.

1. பெற்றோரை மதித்தல் / காப்பாற்றுதல்
2. குடும்ப பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்தல்
3. நேர்மையாக இருத்தல்; சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது
4. மற்றவர்களுக்கு தேவைப்படும் (அவர்களுக்கு) போது உதவுதல்
5. மனிதன் உட்பட மற்ற ஜீவ ராசிகளுக்கு தீங்கில்லாமல் வாழ்தல்
6. நல் எண்ணங்களைப் போதித்தல்
7. எதிர்பாலரை மதித்தல்

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆதலால் மற்ற பெண்களை போகப்பொருளாக நினைப்பவன் மட்டும் கெட்டவன் அல்ல. ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு, அதனை இல்லை என்று மறுப்பவன் கூட ஒழுக்கம் கெட்டவன் தான். ஆனால் இங்கே எப்போதும் பெண்களிடம் முறையாக (மனதால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!) நடப்பவன் / மது அருந்தாதவன் ஒழுக்கமுள்ளவன் என்றாகி விட்டது. இவ்விசயத்தில் ஒழுக்கமாக இருந்துவிட்டு, மற்ற விசயங்களில் அவன் தேர்ச்சியடையா விட்டாலும் அவன் ஒழுக்கம் கெட்டவன் தான்.

சரி, உங்களது பிரச்சினைக்கு வருகிறேன்.

1. ஆனால் அழகாக கவர்ச்சியாக உடையணிவது பெரிய தவறொன்றுமில்லை.

தவறில்லை தான். அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. எப்படி, உடற்பயிற்சி செய்து தனது உடற்கட்டை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று ஓர் ஆண்மகன் ஆசைப்பட்டு, பிடிப்பான ஆடை அணிகிறானோ அது அது போல் தான் இதுவும். ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பெண்கள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். காரணம் - சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகள் (உங்கள் பாஷையில் ஒழுக்கமுள்ளவர்கள் - ஒழுக்கமற்றவர்கள் கலவை). மிக எளிமையாக, குனிந்த தலை நிமிராமல் செல்லும் பெண்களுக்கே நிறைய சிக்கல்கள் (முன்பு போல் மோசமில்லை).

இது போன்று உடையணிந்து வருபவர்களை - சில தெளிவானவர்கள் - சரி மற்றுமொரு பெண் என்று கண்டுகொள்ளாலாமல் போய் விடலாம். என்னைப் போன்றவர்கள் 360 கோணத்தில் தலையைத் திருப்பி பார்த்துக் கொண்டே நகர்ந்து விடலாம்; மற்ற ரகத்தினர் சீண்டலாம். ஆக நீங்கள் உங்களை இந்த மூன்று ரகத்தினருக்கும் ஏற்ற மாதிரி எப்படி வேண்டுமானாலும் அழகுபடுத்திக் கொள்ளலாம். விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு. இங்கே 'நடந்து கொள்ள வேண்டும்' என்று கூறுவதெல்லாம் நீங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு கட்டளை இடவில்லை. கவர்ச்சி என்பதே ஓர் ஆணோ அல்லது ஓர் பெண்ணோ எதிர்பாலை கவர்வதற்காக பயன்படுத்தும் ஆயுதம் தான். ஓர் மானை போல்; மயிலை போல். 'நான் மற்றவர்களை கவருமாறு உடையணிவேன். ஆனால் அவர்கள் ஓர் எல்லைக்குள் எனது கவர்ச்சியை ரசிக்க வேண்டும் என்பது சரியா? ஆனால் இது நடைமுறை சாத்தியமாகி இருக்கிறது.

2. நான் எளிமையாக உடையணிந்து இருப்பதால் மட்டும் சில பெரிய கடைகளுக்கு போகும் போது எவராவது "தவறுதலாக அணுகும்"

மற்றவர்கள் தவறாக நினைக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும், உங்களுக்குப் பிடிக்காததை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

3. தனிமை, குடும்பத்தை விட்டு நீண்ட தொலைவில் பிரிந்திருப்பதாலான சுதந்திரம், கை நிறைய சம்பளம் என்று பல காரணங்கள் இருந்தாலும் இது நல்லதா, கெட்டதா என்று தெரியவில்லை.

தனிமையினால் கூட பெண்களுக்கு சிகரெட் பழக்கம் வரும் என்பது இப்போது தான் கேட்கிறேன். இதில் நல்லது என்பது எங்கிருந்து வரும் என்று தெரியவில்லை? பொருளாதாரம் முன்னேறி விடுமா? உடல் நலம் மேம்படுமா? சுற்றுச் சூழல் மேம்படுமா? தெரியவில்லை.

'நாமளும் செஞ்சு பார்த்தா என்ன என்ற எண்ணம் தான்', இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொருந்தும்.

சரி அப்படியானால், இப்போது புகைப்பிடிக்கும் பெண்கள், உங்களது கூற்றுப்படி, ஒழுக்கம் கெட்டவர்களாகி விடுவார்களா? அல்லது புகைப்பிடிக்கும் ஆண்கள் ஒழுக்கமுள்ளவர்களாகி விடுகிறார்களா?

4. நான் 4 நாள் சுற்றினாலோ, 4 தடவை பேசினாலோ போது எப்படிப்பட்ட பெண்களையும் மடக்கிவிடுவேன்" என்ற ஒன்றை நிறைய கேட்டிருக்கின்றேன்...

'பாரேன் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்து... 'ஹவ் ஆர் யூ ரேகா',-ன்னு வந்து வழிவான்னு சொல்லும் பெண்கள் இருக்கிறார்களா இல்லையா? 'எனக்கு எத்தனை புரோபசல்ஸ் வந்திருக்கு தெரியுமா', என்று பெருமை பேசும் பெண்கள் இருக்கிறார்களா இல்லையா?. இது பெண்கள் ஹாஸ்டல் மிகவும் சாதாரணமாக பேசப்படும் விசயம் தானே?

எல்லாமே மனித குணம் தான்.

5. நானே கியர் வண்டி ஓட்டும் போது வண்டியைத் தொடக்கூடப் பயப்படும் ஒருவனை என்னால் எப்படி ரசிக்கமுடியும்?

இயல்பு தான். தவறொன்றும் இல்லை.

6. கலாச்சாரமென்பது பெண்களை மட்டும் சார்ந்த ஒரு நடப்பு என்பதால், பாதிப்புக்குள்ளாகுவது பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர்...! இவை அனைத்தையும் ஒரு ஆண் செய்தால் பெரிதாக எடுத்துக்கொள்ளாது இந்த சமுதாயம்.., ஏன் பெண்களிடம் இந்த எதிர்பார்ப்பு..?

ஏனென்றால் (சில) ஆண்கள் ஆண்டாண்டுகாலமாக அப்படித்தான் இருந்து வருகிறார்கள். சமூகத்தின் அடிப்படையே பெண்கள் தான். பெண்களுக்கான கட்டுப்பாடுகள், பெரும்பாலும், தன் வீட்டுப் பெண்களை மற்ற ஆண்களிடமிருந்து பாதுகாப்பதற்கு இயற்றப்படுபவை தான் என்பது என் கருத்து. அது நல்ல எண்ணத்தில். சமயங்களில் அது கெட்டவர்கள் / அறியாமையில் வீழ்ந்தவர்களின் கையில் சிக்கி பெண்களுக்கு எதிராக மாறி விடுகிறது. அதற்காக தலிபான்களை நான் ஆதரிக்கிறேனா என்ன என்று கேட்காதீர்கள். அங்கு கல்வி கூட மறுக்கப்பட்டது. அது வேறு இது வேறு. உங்களால் மற்ற (தவறு செய்யும்) ஆண்களைத் தடுத்து, அடக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் இது போன்ற கட்டுப்பாடுகளை உடைத்து விட்டு பெண்கள் இஷ்டம் போல் இருக்கலாம்.

பெண் சுதந்திரம் (கல்வி, சொத்துரிமை, நண்பர்கள் வைத்துக் கொள்தல், பேச்சுரிமை, அரசியல், வேலை வாய்ப்பு) என்பது இப்போது இந்தியாவில் பெண்களுக்கு தேவையான அளவு உள்ளது. வீட்டிற்கு வீடு சிற்சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். அது நாட்டின் மீதான தவறல்ல.

சுதந்திரத்திற்கும், ஆடை மற்றும் ஆண்சார் சுதந்திரத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

குறிப்பு: இது உங்களுக்கு எதிரான தனிப்பட்ட கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும், இப்பதிவு பல பெண்களையும் / பெண்ணுரிமை காக்கும் சில ஆண்களையும் கோபமுறச் செய்தால் நான் ஆச்சர்யப்பட மாட்டேன்.

குறிப்பு எண் 2: தேவையற்ற ஓர் பதிவு என்று எனது பதிவிற்கு தான் பெயரிட்டுள்ளேன்.